Published:Updated:

3 நாள்களுக்கு முன்பு அழைப்பு; கொரோனா டெஸ்ட்! - தஞ்சையில் முதல்வரைச் சந்தித்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

``மூன்று நாள்களுக்கு முன்னர் தொலைபேசி மூலம் முதல்வர் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எங்களுக்கு அழைப்பு வந்தது.’’

தஞ்சாவூர் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முன்னதாக புதிய திட்டப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தார். மேலும், பல துறைகளின் சார்பில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். ஆய்வுக் கூட்டத்திலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தி.மு.க எம்.எல்.ஏக்களான திருவையாறு தொகுதி துரை.சந்திரசேகர், கும்பகோணம் சாக்கோட்டை அன்பழகன், திருவிடைமருதூர் கோவி.செழியன் ஆகியோர் மனு அளித்தனர்.

பின்னர் துரை.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``மூன்று நாள்களுக்கு முன்னர் தொலைபேசி மூலம் முதல்வர் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எங்களுக்கு அழைப்பு வந்தது. அதை தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் தெரிவித்தோம். அவரும் கலந்துகொண்டு, மக்கள் பிரச்னைகள் குறித்து மனுக்கள் அளிக்க வலியுறுத்தியிருந்தார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நிலவும் மக்கள் பிரச்னைகள் குறித்து தொகுதிவாரியாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் என்ற முறையில் தஞ்சாவூர் வந்த தமிழக முதல்வரிடம் மனு கொடுத்தோம். `நெல்லுக்கு உரிய விலை வழங்க வேண்டும். அதேபோல் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளன. அவற்றைச் சேர்ப்பதற்காக மறு ஆய்வு செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டோம். முதல்வர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார்.

தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

மேலும், `பேராவூரணி, செங்கிப்பட்டி போன்ற பகுதிகளில் முறையாகத் தூர்வாராததால் பாசன வாய்க்காலில் சரிவரத் தண்ணீர் வரவில்லை' என வலியுறுத்தினோம். `இவை எதிர்காலத்தில் சரிசெய்யப்படும்' என்று முதல்வர் தெரிவித்தார். மூன்று தினங்களுக்கு முன்னர் கொரோனா டெஸ்ட் எடுத்ததால் எங்களை முதல்வரைச் சந்திக்க அனுமதித்தனர். இதையடுத்து, மனுக்கள் கொடுத்தோம்'' என்று தெரிவித்தார்.

திருவாரூர்: `உங்க தலைவர்கிட்ட சொல்லுங்க!' - முதல்வர் - தி.மு.க எம்.எல்.ஏ சந்திப்பில் என்ன நடந்தது?

கும்பகோணம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் கூறுகையில், ``கும்பகோணத்தைத் தலைமையிடமாகக்கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என 25 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். இதை நானும் பலமுறை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். `தமிழகத்தில் தற்போது புதிதாகப் பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்' என முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சரிடம் ஏற்கெனவே மனு வழங்கியுள்ளேன். அதன்படி, தற்போதும் அதை வலியுறுத்தி மனு வழங்கினேன். மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர், பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறார்'' எனத் தெரிவித்தார்.

தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

கோ.வி.செழியன் பேசுகையில், ``நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா மருத்துவப் பரிசோதனையை விரைவுபடுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கான படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு