Published:Updated:

ரயில்வே ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு... வேலையிழக்கும் 3 லட்சம் ஊழியர்கள்!

Railway
Railway

55 வயதைக் கடந்துவிட்டீர்களா, 30 வருடப் பணியை நிறைவு செய்துவிட்டீர்களா? 'இனி, உங்களுக்குக் கட்டாய ஓய்வுதான்' என ரயில்வே ஊழியர்களிடம் அதிரடிகாட்ட ஆரம்பித்திருக்கிறது அரசு.

சமீபத்தில் நடந்த பட்ஜெட் தாக்கலின்போது, "2018 முதல் 2030-ம் ஆண்டுவரை 50 லட்சம் கோடி ரூபாய் இந்திய ரயில்வே கட்டுமானத்துக்கு முதலீடு செய்ய வேண்டியுள்ளது” என்றார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். "இந்தக் கட்டுமானங்கள், மக்கள் தனியார் கூட்டு ஒத்துழைப்பின் (Public Private Partnership) மூலம் நிறைவேற்றப்படும்” என்றார். இந்த அறிவிப்பானது, "கிட்டத்தட்ட 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றக்கூடிய ரயில்வே துறையைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி” எனப் போர்க்கொடி தூக்கினர், ரயில்வே தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள். ஆனாலும், அடுத்தடுத்த திட்டங்கள் அதிரடியாய்ச் செயல் வடிவம் பெறத் தொடங்கிவிட்டநிலையில், அடுத்தபூதமாக கட்டாய ஓய்வு முறைதான் இப்போது ரயில்வே ஊழியர்களை நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் (டி.ஆர்.இ.யூ) செயல் தலைவர் ஆர்.இளங்கோவனிடம் பேசினோம். "30 ஆண்டுகள் பணியை நிறைவுசெய்தவர்கள் அல்லது 55 வயதைக் கடந்தவர்களைப் பரிசீலனைசெய்து அவர்களைத் திறமையில்லாதவர்கள் எனவும், பொது நலனுக்கு விரோதமானவர்கள் எனவும் சொல்லி. அவர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்கக்கூடிய விதிமுறை உள்ளது. இது, காலனிய ஆதிக்கக் காலத்திலிருந்தே இருக்கக்கூடிய விதி. ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வந்தபிறகும், இது தொடர்வதுதான் வேதனை.

இதில் என்ன சிக்கல் என்றால், இவ்வளவு நாள்களாகப் பயன்படுத்தப்படாத இந்த விதிமுறையை, இப்போது மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இப்போது எப்படி நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றால், 55 வயது அல்லது 30 வருடம் பணி செய்த ரயில்வே ஊழியர்களுக்கு மாதம்தோறும் தகுதிப் பரிசோதனையை மேற்கொண்டு, ஒவ்வொரு மாதமும் 8-ம் தேதிக்குள் எவ்வளவு ஊழியர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வேலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது குறித்தான அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்குப் பெயர் `ரைட் சைசிங்’ என அரசு தரப்பு சொல்கிறது.

Railway
Railway

அதேவேளையில், ரயில்வேயில் 60 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற அதிகாரிகள் 1 லட்சம் பேரை மீண்டும் வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு 65 வயதுவரை வேலைசெய்ய அனுமதியளிக்கிறது. அந்த ஊழியர்கள் கடைசியாய் வாங்கிய சம்பளத்திலிருந்து பென்ஷன் தொகையைக் கழித்துவிட்டு, மீதித் தொகையை ஊதியமாக வழங்குகின்றனர். இது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம், 55 வயதைக் கடந்தவர்களுக்கும் கட்டாய ஓய்வை அரசு அளிக்கிறது என்பதுதான் முரண்பாடாக இருக்கிறது.

இந்தத் தகுதிப் பரிசோதனைக்கு மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைப்பார்கள். அந்த கமிட்டியின் முடிவுகளின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், உண்மையில் இதைப் பயன்படுத்திப் பழிவாங்கல் நடவடிக்கைகள்தான் நடைபெற்று வருகின்றன. உன்னிகிருஷ்ணன் என்பவர் பாலக்காடு பகுதியில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக அவருடைய சி.ஆர் ரெக்கார்டு என்பது ‘குட்’ எனத்தான் இருக்கிறது. ஆனால், அவருக்குக் கட்டாய ஓய்வு அளித்துள்ளனர். காரணம், அவர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறக் கூடாது என்கின்றனர்.

Train
Train
Photo: Muthukumar / Vikatan

மேலும், அரசு முறையாகத் தண்டவாளத்தைப் பராமரிப்பதில்லை. ஒரு வருடத்திற்கு 4,000 கி.மீ பழுதடைகிறது. இதில், 2.000 கி.மீ-தான் சரி செய்யப்படுகிறது. ரயில்களைக் கடக்கும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால், பாதுகாப்பை மேற்கொள்ளச் சொல்லும் ரயில்வே, அதற்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால், விதியை மீறி வேலை செய்யச் சொல்லி நிர்பந்திக்கிறார்கள். உன்னிகிருஷ்ணன், ’விருப்ப ஓய்வு வேண்டும்’ எனக் கேட்டார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாமல் கட்டாய ஓய்வை அளித்துள்ளனர். இது அனைத்து ஊழியர்களுக்கும், இனி யாரை வேண்டுமென்றாலும் வீட்டுக்கு அனுப்பலாம் என ஒருவகையான மிரட்டல்தான். அதேபோல், தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளும் இனி அதிகரிக்கும். இந்திய அளவில் 3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள்” என்றார்.

எஸ்.ஆர்.இ.எஸ் பொதுச் செயலாளர் சூர்யபிரகாசம், “கட்டாய ஓய்வுத் திட்டத்தின் மூலம் ரயில்வேயில் உள்ள திறமையானவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். திறமையான ஊழியர்கள் வேலையிலிருந்து இழக்க நேரிட்டால், இது இந்திய ரயில்வேக்குத்தான் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ’இந்திய ரயில்வேயில் பணம் இல்லை. அதனால், தனியார் மயத்தை நோக்கிச் செல்கிறோம்’ எனச் சொல்லும் அதேவேளையில், ஒரே நேரத்தில் இவ்வளவு ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்பும்போது ஊழியர்களுக்கு வழங்கக் கூடிய செட்டில்மென்டுக்கான பணம் மட்டும் அரசுக்கு எங்கிருந்து கிடைக்கும்? ஓர் ஊழியருக்குச் சராசரியாக செட்டில்மென்டுக்கு 25 லட்சம்வரை செலவாகும் எனில், 3 லட்சம் ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வின் மூலம் அனுப்பப்படும் பட்சத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய செட்டில்மென்ட் தொகையே ரயில்வேக்குப் பெரும் சுமையாக அமையும்” என்றார்.

ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து ரயில்வேயைத் தனியாருக்கு அளிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது அரசு.

எஸ்.ஆர்.எம்.யு தலைவர் ராஜாஶ்ரீதர், “அரசு ஒரு பக்கம் ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத்தை நோக்கி நகர்த்துகிறது. மற்றொரு புறம், பல பணிகளுக்கு அவுட் சோர்சிங் மூலமாக ஊழியர்களைக் கொண்டுவருகின்றனர். அதேவேளையில், இப்படி ஆள் குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர். இதனுடைய விளைவு என்னவாக இருக்கும் என்றால், பல ஊழியர்களுக்கு 50 வயதைக் கடக்கும்போதே அவர்களின் எதிர்காலம் குறித்து பயம் வர ஆரம்பித்துவிடும். ரயில்வே ஊழியர்களிடம் போதிய திறன் இல்லாமை, ஊழல் போன்றவை இருக்கிறது என்றால், அவற்றைக் கட்டுப்படுத்த நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. போதிய திறன் இல்லாதவர்களை எப்படி நடத்தவேண்டும் என்பதற்காக ரயில்வேயில் தனியான சட்டங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால், வேலையைவிட்டு அனுப்புவது எந்த விதத்திலும் தீர்வல்ல.

கடந்த காலங்களில் அரசாங்கங்கள், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தினார்களே தவிர, இதை நடைமுறைப்படுத்தவேயில்லை. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், இந்த அரசாங்கம் இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த நினைக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைப் பயன்படுத்துகிறதுன்றனர்.

Puratchi Thalaivar Dr MGR Central railway station
Puratchi Thalaivar Dr MGR Central railway station

அரசாங்கத்தின் விருப்பமே ஆள்குறைப்புத்தான். ரயில்வே துறையில் மாற்றங்கள் கொண்டுவருவதற்காக பிபேக் தோப்ராய் தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தனர். அந்த கமிட்டியின் அறிக்கையே என்ன சொல்கிறது என்றால், 'ரயில்வே தொழிலாளர்கள் செய்யக்கூடிய வேலையைக் குறைந்த கூலிக்குச் செய்யமுடியும்' எனச் சொல்கிறது. எனவே, இதைக் காரணம்காட்டி ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து ரயில்வேயைத் தனியாருக்கு அளிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது, மத்திய அரசு” என்றார்.

அரசின் கொள்கை முடிவுகளும், செயல் திட்டங்களும் பொதுமக்கள் நலன் கருதி அமைவதே அனைவருக்கும் நலன்.

அடுத்த கட்டுரைக்கு