Published:Updated:

`சேலம் டு சென்னை; மாற்று வழியில் 8 வழிச்சாலை!’ - 3 மாவட்ட எம்.பி-க்களின் கோரிக்கை

ஆட்சியரிடம் மனு அளித்த எம்.பி-க்கள்
ஆட்சியரிடம் மனு அளித்த எம்.பி-க்கள்

`சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை மாற்று வழியில் அமைக்க வேண்டும். விவசாயிகளிடையே உருவாகியுள்ள பதற்றத்தை மத்திய, மாநிலஅரசுகளின் கவனத்துக்கு ஆட்சியர்கள் கொண்டு செல்ல வேண்டும்’ என்பதை வலியுறுத்தி எம்.பி-க்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

சேலம் டு சென்னை 8 வழிச் சாலை 10,000 கோடியில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியாக அமைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்துக்கு 5 மாவட்ட விவசாயிகளிடையே கடும் எதிர்ப்புகள் இருந்து வருகிறது. உயர் நீதிமன்றம் இத்திட்டத்துக்கு தடை விதித்த நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்காக நடைபெற்று வருகிறது.

மனு அளித்த தி.மு.க எம்.பி-க்கள்
மனு அளித்த தி.மு.க எம்.பி-க்கள்

இந்நிலையில், `சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை மாற்று வழியில் அமைக்க வேண்டும். விவசாயிகளிடையே உருவாகியுள்ள பதற்றத்தையும் கொந்தளிப்பையும் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு ஆட்சியர்கள் கொண்டு செல்ல வேண்டும்’ என்பதை வலியுறுத்தி தி.மு.க எம்.பி-க்களான பார்த்திபன், செந்தில், கெளதம சிகாமணி ஆகியோர் சேலம் கலெக்டர் ராமனைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபனிடம் பேசினோம், ''சேலம் டூ சென்னை 8 வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து விவசாயிகள் பெரும் துயரங்கள் அடைந்திருக்கிறார்கள். இத்திட்டத்தால் 7,500 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கிணறு, ஏரி, குளம், குட்டை என நீர்நிலைகளும், வனங்கள் மற்றும் வன உயிரினங்களும், கனிமங்களும் நாசமாக்கப்பட இருக்கிறது.

எம்.பி பார்த்திபன்
எம்.பி பார்த்திபன்

விவசாயத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் சுமார் 30,000 விவசாயிகள் வேலையிழந்து நடுத்தெருவுக்கு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றமும் தடை விதித்தது. `இவ்வழக்கு சம்பந்தமாக மேல்முறையீடு செல்லக் கூடாது’ எனத் தி.மு.க வலியுறுத்தியும், ஆளும் அ.தி.மு.க அரசு, மக்கள் விரோதப்போக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்றது.

தற்போது இத்திட்டத்துக்கு, `சுற்றுச்சூழல் தாக்க அனுமதி கட்டாயம் இல்லை’ என, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. இதனால், 8 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்ட விவசாயிகள் பெரும் பதற்றமும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர்.

கோரிக்கை மனுக்களுடன் தி.மு.க ., எம்.பிக்கள்
கோரிக்கை மனுக்களுடன் தி.மு.க ., எம்.பிக்கள்

இது 5 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குமே நன்றாகத் தெரியும். அதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். சேலம் டு சென்னை 8 வழிச் சாலைத் திட்டத்தை மாற்று வழியாக, `சேலம் டு உளுந்தூர்பேட்டை’ அல்லது ’சேலம் டு அரூர் சாலை’ வழியாக அமைக்கப்பட வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு