Published:Updated:

ராசாவுக்கு 10 கருணாநிதிக்கு 30 சோனியாவுக்கு 60? சுவாமியின் பொளேர் புதுக் கணக்கு

ராசாவுக்கு 10 கருணாநிதிக்கு 30 சோனியாவுக்கு 60? சுவாமியின் பொளேர் புதுக் கணக்கு

பிரீமியம் ஸ்டோரி
##~##
ஸ்
பெக்ட்ரம் விளக்கைத் தேய்த்து பூதத்தைக் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்திருந்தார். 'மனிதர் பரபரப்பாக ஆதாரங்களை அடுக்கிக்கொண்டு இருப்பார்!’ என்று சந்திக்கச் சென்றபோது, மாவடு ஊறுகாய் ஜாடி அவரது டேபிளில் இருந்தது.

''கேரள நண்பர் அனுப்பிய மாவடு. காலையில் மசால் தோசைக்கு இதையும் தொட்டுக்கிட்டா, அன்னிக்கு முழுக்க நாக்கில் குறுகுறுன்னு இருக்கும்!'' என்று சிரிக்கிறார் சர்ச்சை சுவாமி!

''ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஆ.ராசா ராஜினாமா என்று நீங்கள் எதிர் பார்த்த க்ளைமாக்ஸ் அரங்கேறியதில் மகிழ்ச்சியா?''

''க்ளைமாக்ஸா... இப்போதான் விவகாரம் சூடு பிடிச்சிருக்கு. ஊழல் ஒரு பக்கம் இருக்கட்டும். நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தை விளைவிக் கும் அந்நிய சக்திகள் இந்த விவகா ரத்தில் ஊடுருவி இருப்பது இனிமேல்தான் அம்பலமாக வேண்டும். அமெரிக்காவில் நம்ம ஊர் டெலிகாம் நிறுவனம் ஏதாவது தொழில் தொடங் கிக் காலூன்ற முடியுமா? விடவே மாட்டார்கள். ஆனால், இந்தியாவில் செல்போன், இன்டர்நெட் என்று நாடாளுமன்றம் முதல் நடு வீடு வரை புகுந்துவிட்டது அந்நிய நாட்டின் டெலிகாம். அவர்களை அனுமதிக்கும் முன், அந்தக் கம்பெனிகளின் பின்ன ணியைப் பார்க்க வேண்டாமா? இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் உரிமம் பெற்று, பிறகு வெளி நாட்டு நிறுவனத்துக்கு அதைத் தாரை வார்த்து இருக்கிறார்கள். ஒரு நிறுவனத் தின் பூர்வீகம் பாகிஸ்தான் என்கிறார்கள். தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ... இவற்றுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கும்  இடையிலான தொடர்புபற்றி விசாரித்தார் களா? நம் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாட்டில் இருந்தபடியே, நமது நாட்டின் ரகசியங்களை அந்த டெலிகாம் சிஸ்டம் மூலம் இடைமறித்துக் கேட்க மாட்டார்களா?''

ராசாவுக்கு 10 கருணாநிதிக்கு 30 சோனியாவுக்கு 60? சுவாமியின் பொளேர் புதுக் கணக்கு

''ஆக, அவர்களிடம் இருந்து இப்போது இந்தியாவைக் காப்பாற்றிவிட்டீர்களோ?''

(சிரித்தபடி) ''நான் சொன்ன ஒரு கம் பெனி இந்த விவகாரத்தை மிகுந்த கவலை யோடு பார்த்துக்கொண்டு இருக்கிறது. உரிமம் எப்போது கேன்சல் ஆகும் என்று பதைபதைப்போடு காத்திருக்கிறது. இங்கு இருந்து தப்பித்து, ஆப்பிரிக்காவுக்கு ஓடி விடவும் திட்டமாம்!''  

''அரசுக்கு நஷ்டம் எவ்வளவு? ஊழல் எவ்வளவு? இந்த ஊழல் பணம் எப்படி இங்கே இருந்து வெளிநாடு போனது... ஆதாரங்கள் எல்லாம் சேகரித்துவிட்டீர்களா?'’

''அரசுக்கு வர வேண்டிய ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் நஷ்டம். சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழல் பணம் 10 சதவிகிதம் ராசாவுக்குப் போனதா? 30 சதவிகிதம் கருணாநிதி குடும்பத்தினருக்குப் போனதா? 60 சதவிகிதம் பணம் சோனியா வின் இரண்டு சகோதரிகளுக் குப் போனதா என்கிற கோணங்களில் சி.பி.ஐ. விசா ரிக்க வேண்டும். ஹவாலா மூலம் துபாய், மாலத் தீவு களுக்குப் பணம் போய் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளிநாட்டு வங்கிகளில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை அமெரிக்காவிடம் கேட்டு வாங்கலாம் என்று நம் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், இந்தத் தகவல்களை நம்முடைய சி.பி.ஐ-யும், 'ரா' உளவு நிறுவனமும் ஏற்கெனவே வாங்கிவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். ஆதாரங்கள் கையில் வந்துவிட்டன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்!''

''முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஒரு தலித் என்பதால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை டெல்லியில் சிலர் ஊதிப் பெரிதாக்குவதாக தமிழக முதல்வர் கருணாநிதி பேசி இருக்கிறாரே?''

''தலித் என்பதற்காக நடந்த ஊழலை மூடி மறைக்கச் சொல்கிறாரா? முன்பு, கர்நாடகாவில் ராமகிருஷ்ண ஹெக்டே தொடர்பான முறைகேட்டை நான் கையில் எடுத்து அகில இந்திய அளவில் சர்ச்சையைக் கிளப்பினேன். ஹெக்டே, ஒரு பிராமணர். ஒரு பிராமணருக்கு எதிராக, இன்னொரு பிராமணர் இப்படி அம்பலப்படுத்தினார் என்று யாராவது பேசியது உண்டா? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, நான் அவருக்கு எதிராக எத்தனையோ போராட்டங்கள் நடத்தினேனே? அதன் விளைவாகத்தானே அடுத்து கருணாநிதி ஆட்சியில் அமர்ந்தார். பிராமணர் அஸ்திரத்தை அப்போது ஏன் கையில் எடுக்கவில்லை? இப்போது ஆ.ராசா விஷயத்தில் தலித் அஸ்திரத்தை எடுக்கிறார் என்றால், ஊழல் சுழலில் கருணாநிதியும் மாட்டி இருக்கிறார். அந்தப் பயத்தில் ஏதேதோ உளறுகிறார்!''

ராசாவுக்கு 10 கருணாநிதிக்கு 30 சோனியாவுக்கு 60? சுவாமியின் பொளேர் புதுக் கணக்கு

''பிரதமரும் நீங்களும் பொருளாதாரப் பேராசிரியர்கள். அதற்கும் அப்பாற்பட்டு அவர் உங்களின் அபிமானத்துக்கு உரிய நண்பர். இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறதே?  அவர் நடந்துகொண்டது சரியா? ஊழலை ஆரம்பத்தி லேயே பிரதமர் இரும்புக் கரம்கொண்டு தடுத்திருக்கலாமே?''

''பீஷ்மாச்சாரியார் போல மன்மோகன் சிங்கும் இந்த விவகாரத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு வழங்கப்பட இருந்த காலகட்டத்தில், அது தொடர்பாக அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசாகூட பிரதமருக்குச் சில கடிதங்களை அனுப் பினாராம். அதை எல்லாம் நிராகரித்து, பிரதமர் அப்போதே ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை பிரதமர் செய்யவில்லைதான்!

ஆனால், 2009-ல் காங்கிரஸ் மத்தியில் ஜெயித்தபோது, ஆ.ராசா பெயரை மந்திரி பெயருக்குச் சிபாரிசு செய்தபோது, தனது அமைச்சரவையில் அவருக்கு இடம் இல்லை என்று கடைசி வரை வலியுறுத்தி தோற்றுப்போனார் பிரதமர். ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது, கட்சியின் உயர் மட்டக் குழு கூடி விவாதித்தது. அப்போது, ஆ.ராசாவுக்கு ஆதரவாகச் சிலர் வாதிட்டனர். அதை ஏற்றுக்கொள்ளாத பிரதமர், 'ராசா, பதவி விலகியே ஆக வேண்டும்' என்று பிடி வாதம் காட்டி ஜெயித்தார். பிரதமருக்கு இன்னும்கூட இரண்டு சான்ஸ்கள் இருக்கின்றன. ஸ்பெக்ட்ரம் அலை வரிசை லைசென்ஸ்களை உடனே கேன்சல் செய்ய முடியும். அடுத்து, இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த இரண்டு விஷயங்களில் பிரதமர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்துதான், அவரது நடுநிலைமையைக் கணிக்க முடியும்!''  

ராசாவுக்கு 10 கருணாநிதிக்கு 30 சோனியாவுக்கு 60? சுவாமியின் பொளேர் புதுக் கணக்கு

''தமிழகத்துக்கு என என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்?''

'' 'ஊழலை எதிர்த்துப் போராட உங்களைவிட்டால் வேறு ஆள் இல்லை!’ என்று பாராட்டு மழை குவிகிறது தமிழகத்தில். சந்தோஷமாக உள்ளது. வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்களது ஜனதா கட்சி சார்பில் ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போகிறேன். எங்கள் வேட்பாளர்கள் ஜெயித்தால், ஆட்சியில் அமரப்போகிறவர்களை ஊழல் செய்யவே விட மாட்டோம். ஓட்டுக்காக ஒரு சல்லிப் பைசாகூட கொடுக்கப்போவது இல்லை. மக்கள் யாரிடமும் கெஞ்சி ஒட்டுக் கேட்க மாட்டோம். 'ஊழல் இல்லாத நாடாக மாற வேண்டும் என்றால், எங்களுக்கு ஓட்டு போடுங்கள்’ என்று நான் பிரசாரம் செய்யப்போகிறேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு