Published:Updated:

``நாங்கள் 3,000 பேர் இஸ்லாமியர்கள் ஆகப் போகிறோம்!" மேட்டுப்பாளைய பட்டியலின மக்கள்

தீண்டாமையைக் கண்டித்து 3,000 பட்டியலின மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவர் இடிந்த விபத்து
சுவர் இடிந்த விபத்து

வரும் ஜனவரி 5- ந் தேதி கோவை மாவட்டத்தில் `தமிழ்ப் புலிகள் கட்சி' சார்பில் 3,000 பட்டியலின மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த டிசம்பர் 2-ம் தேதி மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நடூர் கிராமத்தில் சுவர் விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தீண்டாமைச் சுவர் என்றும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சுவரை எழுப்பிய ஜவுளிக்கடை அதிபர் சுப்ரமணியம் மீது பல பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அந்தப் பகுதி மக்கள் பட்டியலின மற்றும் ஆதிவாசி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுப்ரமணியத்தின் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தினர். போலீஸார் பட்டியலின மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை. இந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதியப்படவில்லை. தற்போது, சுப்ரமணியம் ஜாமீனில் வெளிவந்து விட்டார்.

உறவினர்களைப் பறி கொடுத்து தவித்த மக்கள்
உறவினர்களைப் பறி கொடுத்து தவித்த மக்கள்
17 பேரின் உயிரைப் பறித்த ஒற்றைச் சுவர்... மேட்டுப்பாளையம் நடூரில் நடந்தது என்ன? முழு விவரம்!

இந்தச் சம்பவத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது போலீஸார் தடியடி தாக்குதல் நடத்தினர். பட்டியலினத்தைச் சேர்ந்த 25 பேர் மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. போலீஸாரின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் 3,000 பட்டியலின மக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 5- ந் தேதி இதற்கான நிகழ்வு நடைபெறுகிறது. இந்தத் தகவலால் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் மக்களை ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்ப்புலிகள் கட்சியின் செயலாளர் இளவேனிலிடத்தில் பேசிய போது, ``மேட்டுப்பாளையம் சம்பவத்தின் போது சுப்ரமணியத்தின் மீது வன்கொடுமை வழக்கு பதிய வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. காவல்துறை உயர் சமூக மக்களுக்குத்தான் ஆதரவாகவே உள்ளது. எப்.ஐ.ஆர். பதிய வைக்கவே போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இங்கே கட்டப்பட்டது தீண்டாமைச் சுவர்தான். அதை மறைக்கப் பார்க்குறாங்க. சுப்ரமணியத்தை வெளியே விட்டுட்டாங்க. ஆனா, எங்க கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் இன்னும் சிறையில்தான் இருக்கிறார். அவர் மீது மாறி மாறி வழக்கு பதிந்து வெளியே வராம தடுக்குறாங்க. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்க அவர்தான் காரணம் அப்படின்னு போலீஸ் சொல்லுது. அப்படினா, கோவையில் இந்து முன்னணியைச் சேர்ந்த சசிகுமார் கொல்லப்பட்ட போது, வன்முறை வெடித்து பொது சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தார்கள். வன்முறைக்குக் காரணமான இந்து முன்னணியைச் சேர்ந்த ராமகோபாலன், காடேஷ்வரா சுப்ரமணியம் ஆகியோர் மீது இப்படி வழக்கு பதிந்தார்களா... இல்லையே? எங்களுக்கு இந்து மதத்துல நியாயம் கிடைக்கல. அதனால, எங்க கட்சி பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்து, நாங்க இஸ்லாம் மதத்துக்கு மாற முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை. விருப்பமுள்ள 3,000 பேர் இஸ்லாத்தைத் தழுவுவார்கள்.
தமிழ்ப் புலிகள் கட்சி செய்தித் தொடர்பாளர்

கட்சியின் செய்தித் தொடர்பாளர் முத்துக்குமார் கூறுகையில், ''சுப்ரமணியத்தின் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யாதது எங்களின் உரிமையைப் பறிப்பதற்குச் சமம். தற்போது, குற்றவாளி சிறையிலிருந்து வெளியே வந்து நடமாடிக் கொண்டிருக்கிறார். போராடியவர்கள் சிறையில் கிடக்கின்றனர். யாரையும் கட்டாயப்படுத்தி நாங்கள் மத மாற்றம் செய்யவில்லை. தானாக முன்வந்து விருப்பப்படுபவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவுவார்கள்'' என்கிறார்.

தமிழ்ப்புலிகள் கட்சியில் கோவை மாவட்டத்தில் 5,000 தொண்டர்கள் உள்ளனர். தமிழகம் முழுக்க 30,000 தொண்டர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரே சமயத்தில் மொத்தமாக இந்துக்கள் மாற்று மதத்தைத் தழுவது தமிழகத்துக்குப் புதிதல்ல. கடந்த 1981- ம் ஆண்டு பிப்ரவரி 19- ந் தேதி நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் தீண்டாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான இந்து மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவியது நினைவு கொள்ளத்தக்கது.