Published:Updated:

``8 ஆண்டுகளில் 3,000 ரெய்டுகள்; ஆனால் 0.5% மட்டுமே குற்றவாளிகள்!" - பாஜக-வைச் சாடிய ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் ( ட்விட்டர் )

``நீங்கள் நாட்டைக் கொடுமைப்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்த விரும்பினால், அனைவரையும் சிறையில் தள்ளுங்கள்." - எம்.பி சஞ்சய் சிங்

``8 ஆண்டுகளில் 3,000 ரெய்டுகள்; ஆனால் 0.5% மட்டுமே குற்றவாளிகள்!" - பாஜக-வைச் சாடிய ஆம் ஆத்மி

``நீங்கள் நாட்டைக் கொடுமைப்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்த விரும்பினால், அனைவரையும் சிறையில் தள்ளுங்கள்." - எம்.பி சஞ்சய் சிங்

Published:Updated:
ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் ( ட்விட்டர் )

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், எதிர்க்கட்சித் தலைவர்கள் காரசாரமான விவாதங்களை முன்வைத்துவருகின்றனர். அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங், கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது 3,000 சோதனைகளை மத்திய பா.ஜ.க அரசு ஏவிவிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். நாடாளுமன்ற விவாதத்துக்காக எம்.பி சஞ்சய் சிங் சமர்ப்பித்த நோட்டீஸில், "டெல்லி எம்.சி.டி தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைக்கு வாங்க பா.ஜ.க முயல்கிறது" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது, அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், ``இது தொடர்பாக பா.ஜ.க வெளியிலும் பேசவிடுவதில்லை. நாடாளுமன்றத்திலும் பேச விடாமல் தடுக்கிறது. அமலாக்க இயக்குநரகத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சுமார் 3,000 சோதனைகள் நடத்தியிருக்கிறது. அவர்களில் அமலாக்க இயக்குநரகம் வெறும் 23 பேரை, அதாவது 0.5% மட்டுமே குற்றவாளிகள் என்று தெரிவித்திருக்கிறது.

ஆனால், 20,000 கோடி மோசடி செய்து, இந்தியாவிலிருந்து தப்பியோடிய நிரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி, ரெட்டி பிரதர்ஸ், எடியூரப்பாவின் ஊழல் போன்ற வேறு எந்த விஷயத்தில் அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் எனது கேள்வி. பா.ஜ.க-வுடன் தொடர்புடைய அனைத்து ஊழல்வாதிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை... எதிர்க்கட்சியில் பலமாக இருக்கும் அனைத்து அமைச்சர்கள் மீதும் ரெய்டுகள் நடத்தப்பட்டன. நீங்கள் நாட்டைக் கொடுமைப்படுத்தி, சர்வாதிகார ஆட்சி நடத்த விரும்பினால், அனைவரையும் சிறையில் தள்ளுங்கள்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

மேலும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம், எம்.எல்.ஏ-க்களை அச்சுறுத்தி பா.ஜ.க ஆட்சி செய்யாத அரசாங்கங்களைச் சீர்குலைக்கும் நோக்கில், பாஜக செயல்படுகிறது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கையின்படி, 2014 - 2022 வரை, 211 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் அவர்களின் கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்துள்ளனர். விருப்பமில்லாத இந்தக் கட்சித் தாவல்கள் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. தற்போது அது நகராட்சி கவுன்சிலர்களையும் வேட்டையாட கை நீட்டியிருக்கிறது" எனப் பேசியிருக்கிறார் காட்டமாக.