Published:Updated:

இவர் இந்தியாவின் மனசாட்சி!

பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப் கான்

இவர் இந்தியாவின் மனசாட்சி!

பாரதி தம்பி, ஓவியம்: ஹாசிப் கான்

Published:Updated:
##~##

நான் ஏன் பால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்த விரும்பவில்லை?’ - இப்படி ஒரு தலைப்பில் கட்டுரை எழுதத் துணிச்சல் வேண்டும். அது மார்கண்டேய கட்ஜுவுக்கு இருக்கிறது. அதுவும் பால் தாக்கரே மரணத்தை ஒட்டி இணையதளத்தில் கருத்துச் சொன்னதற்காக இரண்டு மும்பை மாணவிகள் கைதுசெய்யப்பட்ட சமயத்தில் இப்படி எழுதினார் கட்ஜு. அதற்கு முன்னும் பின்னும் நாட்டுநடப்புகள்குறித்து பட்டவர்த்தனமாக கட்ஜு வெளியிடும் கருத்துகள் ஒவ்வொன்றும் இந்திய அரசியல் அரங்கில் மாபெரும் சலனங்களை உண்டுபண்ணுகின்றன.

 இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் என்ற பதவி அத்தனை அதிகாரம் மிக்கது இல்லை. ஆனால், மார்கண்டேய கட்ஜு தலைவராக வந்த நாளில் இருந்து அதிரடிகளுக்குப் பஞ்சமே இல்லை. சமீபத்தில், 'பாரதிய ஜனதா தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத் தப்போவதாகச் சொல்லப்படுகிறது. 1933-ல் ஜெர்மானியர்கள் செய்த தவறை, 2014-ல் இந்திய மக்கள் செய்துவிடக் கூடாது’ என்று எழுதினார். ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு எழுதியதற்காக கட்ஜு பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்த, அதற்கு காங்கிரஸ் பதில் சொல்ல... சர்ச்சைகள் தொடர்கின்றன. ஆனால், கட்ஜு இத்தகைய எதிர்ப்புகளுக்கு ஒருபோதும் அஞ்சியவர் அல்ல. அவருக்கு பா.ஜ.க., காங்கிரஸ் என்ற கட்சி பேதமும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர் இந்தியாவின் மனசாட்சி!

அவரது முக்கியமான விமர்சனக் கணைகள் அனைத்தும் மீடியாக்களையே குறிவைக்கின்றன. ஒரு தனியார் சேனலின் நேர்காணலின்போது, ''நமது மீடியா மக்களை மடையர்களாக்கும் வேலையைச் செய்கிறது. ரோமாபுரி அரசன், 'மக்களுக்கு ரொட்டி கொடுக்க முடியவில்லை எனில், சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்’ என்று சொல்வானாம். அதுபோல இங்கு மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்காமல் டி.வி. பார்க்கவைக்கிறோம். அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதில், ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை மீடியா  பரப்புகிறது!'' என்று கட்ஜு தெரிவித்த கருத்து, ஊடக உலகையே உலுக்கிப்போட்டது.

ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவா கவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் இஸ்லா மியர்களின் பங்களிப்பு குறித்தும் கட்ஜு தொடர்ச்சியாக எழுதிவருகிறார். 'ஹஜ் பயணத் துக்கு அரசு மானியம் வழங்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்ற மனு வந்தபோது, அதை டிஸ்மிஸ் செய்தார். ஒடிஸாவில் கிறிஸ் துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, ''மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டால், அரசாங்கம் விலகிக்கொள்ளட்டும்'' என்று அதிரடியாகச் சொன்னார். ஆனால் அவரே, இஸ்லாமியமாணவர் கள் தாடி வைத்துக்கொள்வது தொடர்பான ஒரு வழக்கில், ''இதை அனுமதித்தால் நாடு 'தலிபான்’ மயமாகிவிடும்'' என்று சொன்னபோது பெரும் கொந்தளிப்பு உருவானது. இந்து மத அடையா ளங்களுடன் மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக் கப்படும்போது, இஸ்லாமிய அடையாளங்களுடன் அனுமதிக்கப்படுவதில் என்ன தவறு என்று பலரும் கேட்டனர். உடனே, தனது கருத்தைத் திரும்பப் பெற்றதோடு அதற்காக மன்னிப்பும் கோரினார்.

1946-ல் லக்னோவில் பிறந்த கட்ஜு, காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை எஸ்.என்.கட்ஜு அலகாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். பண பலமும் செல்வாக்கும் மிக்க குடும்பப் பின்னணி என்றபோதிலும் கட்ஜு, சாதாரண மக்களை நோக்கியே சிந்தித்தார்.

சம்ஸ்கிருதம், உருது இரு மொழிகளிலும் சம அளவு புலமைகொண்ட கட்ஜு, 'இந்தியாவில் உருது மொழிக்கு இழைக்கப்படும் அநீதி’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை முக்கியமானது. ''உருது, வெளிநாட்டு மொழி; அது முஸ்லிம்கள் மட்டுமே பேசும் மொழி... என்ற இரண்டு நம்பிக்கைகளுமே முழுப் பொய். உருது, இந்திய மண்ணில் உருவான மொழி. கடந்த தலைமுறை வரையிலும் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களாலும் உருது பேசப்பட்டது'' என உருதுக்காக உறுதியாக வாதாடியவர். தமிழ் மீதும் பெரும் பற்றுகொண்டவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் சில காலம் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்தவர். பால் தாக்கரே பற்றிய தனது கட்டுரையை, 'முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்ற பாரதியார் பாடலில் இருந்து தொடங்கியவர்.

20 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றியபோது கட்ஜுவின் நீதிமன்ற அறை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஒரு வாரத்துக்குக் குறைந்தது 100 வழக்குகளையேனும் விசாரிப்பார். 'லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பெண்ணுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் முக்கியமான தீர்ப்பு இவர் வழங்கியதுதான். மூளை மரணம் அடைந்த நிலையில் உள்ளவர்களைக் கருணைக் கொலை செய்வது தொடர்பான வழக்கில், 'இது தொடர்பான சட்ட விதிகளைத் தளர்த்திக்கொள்வதைப் பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று கருணைக் கொலைகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு எழுதினார். அவரே, 'கௌரவக் கொலைகள் என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபடுவோரைத் தூக்கில் போட வேண் டும்’ என்று காட்டம் காட்டினார். இந்திய சாதியச் சடங்குகளைவிடாமல் பின்பற்றும் மக்களைக் கண்டு கடுப்பாகி, '90 சதவிகிதம் இந்தியர்கள் முட்டாள்கள்’ என்றார் கோபத்துடன். ''இந்திய - பாகிஸ்தான் பிரச்னை தீர்வதற்கு ஒரே வழி, இரண்டு நாடுகளும் ஒன்றுசேர்வதுதான்'' என்றார் அதிரடியாக. இவை அதிர்ச்சி அலைகளை உருவாக்கலாம். ஆனால், அவரது நோக்கம் அது அல்ல. அவர் தீர்வுகளை விரும்புகிறார். அதை நோக்கி இடைவிடாமல் இயங்குகிறார். அவர், இந்தியாவின் மனசாட்சி!