Published:Updated:

சாய்ச்சுப்புட்டாங்களே சம்பத்து!

சாய்ச்சுப்புட்டாங்களே சம்பத்து!

சாய்ச்சுப்புட்டாங்களே சம்பத்து!

சாய்ச்சுப்புட்டாங்களே சம்பத்து!

Published:Updated:

ருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியும் ஏற்பட்டு, தொகுதிப் பங்கீட்டிலும் வைகோவுக்கு ஜெயலலிதா 'பிஸ்கோத்து' கொடுக்காமல் விட்டுவிட்டால் நாஞ்சில் சம்பத்தின் நிலைமை என்னாகும்? ஒரே மேடையில் ஜெ, வைகோ, நாஞ்சில் சம்பத் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்..? ஒரு கற்பனை.

அ.தி.மு.க-வின் பாரம்பரிய வழக்கப்படி, ஜெயலலிதா வருவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே சம்பத் மேடைக்கு ஓடிவருவார். அங்கே அவருக்கு முன்பே வைகோ காத்துக்கிடப்பதைக் கண்டதும், கதி கலங்கிப்போவார். 'அம்மா இல்லாத நேரத்தில் எதற்கு அவரிடம் சிக்க வேண்டும்?' என்று இன்னோவா காரை எடுத்துக்கொண்டு அந்த ஏரியாவையே ரவுண்ட் அடித்துவிட்டு, ஜெயலலிதா வரும் நேரத்தில்தான் மேடையேறுவார். அப்போது அவரைப் பார்த்து வைகோ வேதனைச் சிரிப்பொன்றை உதிர்க்க, வேறு வழி இல்லாமல் சங்கடத்தோடு புன்னகைப்பார் சம்பத். 'தனி மனிதனின் தலை எழுத்தைத் தீர்மானிப்பது பிரம்மா. வைகோ உள்ளிட்ட தலைவர்களின் தலையெழுத்தைத் தீர்மானிப்பது எங்க அம்மா" என்று அவர் அம்மா புகழ் பாடுவதைக் கண்டு கீழே இருக்கும் ம.தி.மு.க. தொண்டர்கள் ஏளனமாகச் சிரிப்பார்கள். அவர்களையும் குஷிப்படுத்துவதற்காகப் பேச்சை மாற்றுவார் சம்பத்.

சாய்ச்சுப்புட்டாங்களே சம்பத்து!

'இதோ, 'வாருங்கள் வடம்பிடிப்போம் வரலாற்றில் இடம் பிடிப்போம்' என்று புரட்சித்தலைவி அம்மா அமர்ந்திருக்கிற தேரை டெல்லி வரைக்கும் தரதரவென இழுக்க வந்திருக்கிறார் புரட்சிப் புயல் வைகோ. பொருநைக் கரையில் பிறந்து யமுனைக் கரையில் 9 பிரதமர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நாடாளுமன்றச் சிங்கம், பத்தாவது பிரதமரையும் பதம் பார்க்கா மல் விடமாட்டார்" என்று நாஞ்சில் சம்பத் பேச வருங்காலப் பிரதமரான ªஜ-யின் முகம் மாறுகிறது. அவர் முகம் சிவப்பதைக் கண்டு சடார் என்று யு-டர்ன் போட்டு வைகோவைத் தாக்கிப் பேசத் தொடங்குகிறார்.

'கழுகு விரட்டிய மாடப்புறா சிபிச்சக்கரவர்த்தியின் மடியில் வந்து விழுந்ததைப் போல, நான் அம்மாவின் மடியில் விழுந்தேன். எனக்கு கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் என்னும் பதவி தந்து, கார் தந்து, சீர் தந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வா... நாளை நடைபெறும் குருஷேத்திரப் போரில் கோப்பையை வென்று வா என்று அம்மா என்னை அனுப்பிவைத்தார். அப்போதே நான் சொன்னேன், எங்களைப்போல் இன்னும் ஆயிரக்கணக்கானோர் விரைவில் ம.தி.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைவார்கள் என்று. நான் சொன்னது இதோ உண்மையாகிவிட்டது. அங்கே பாருங்கள்... நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட எங்கள் அம்மாவின் முன்பு வரலாற்று நாயகன், வாழும் அலெக்ஸாண்டர் அண்ணன் வைகோ மண்டியிட்டு அமர்ந்திருப்பதை..." என்று பேசி வைகோவை அசிங்கப்படுத்துவார்.

கூட்டம் முடிந்ததும் ம.தி.மு.க-வினர் கார் கண்ணாடியை உடைத்துவிட்டால் என்ன செய்வது? என்ற பயத்தில் மறுபடியும் வைகோவின் புகழ் பாடுவார். ஆக, ஒரே ஒரு காரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அடிக்கடி அவர் அம்பியாகவும், அந்நியனாகவும் அவதாரம் எடுக்க வேண்டியது இருக்கும்!

- கே.கே.மகேஷ்