Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

வினோதினிக்காக வடித்த கண்ணீர் காய்வதற்குள் வித்யாவுக்கு நேர்ந்த விபரீத முடிவு, சமூகத்தின் செல்லரித்த பக்கத்தை வெளிச்சமிட்டு அலறுகிறது. அறியாமலோ, தெரியாமலோ, ஆத்திரத்தில் மதி கெட்டோ இந்தப் பாதகத்தைச் செய்ததாக ஆசிட் வீசியவன் வாதாடினால், அது அவன் செய்த குற்றத்தைவிடவும் கொடியதாக இருக்கும். காரணம், வினோதினியின் வலிமிக்க உயிர்ப் போராட்டத்தைக் கண்டு ஒட்டுமொத்தத் தமிழகமும் துடிதுடித்த நேரத்தில்தான், அதேபோன்ற அரக்கத் தாக்குதலை வித்யா மீது அவன் நிகழ்த்தி இருக்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி, யாருக்கும் எளிதில் திராவகம் கிடைத்துவிடாமல் தடுக்கும் நோக்கோடு போலீஸார் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. காதலின் பெயரால் மிரட்டல் நடத்தி, அதற்குப் பணியாத பெண்களைப் பரிதவிக்கச் செய்யும் துன்பத்துக்கு ஆளாக்க நினைப்பவர்களின் மனதில் அல்லவா ஊறிக்கொண்டிருக்கிறது ஒட்டுமொத்தத் திராவகமும்!

வினோதினி மற்றும் வித்யா விஷயத்தில் நடந்தவை ஒற்றைக் கொலைக் குற்றங்கள் அல்ல. கொதிக்கும் திரவம் முகத்தில் வீசப்பட்ட நேரம் துவங்கி... உயிர் பிரியும் வரை உடலாலும் மனதாலும் துடிதுடித்த ஒவ்வொரு நொடியுமே இந்த அப்பாவிப் பெண்களுக்குள் அடுத்தடுத்து ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்ததை மறந்துவிடக் கூடாது.

இப்படிப்பட்டவர்களுக்கு எவ்வித இரக்கமும் காட்டாமல் நீதிமன்றம் அளிக்கின்ற உச்சபட்சத் தண்டனைதான், இப்படியரு காரியத்தைச் செய்யத் துணிபவர்களுக்கான எச்சரிக்கையாக இருக்கும். அதோடு, 'பெண் என்பவள் ஆணின் எல்லா விருப்பங்களுக்கும் எதிர்க் கேள்வி இன்றி அடங்கிப் போகவேண்டியவள்’ என்ற அடிமுட்டாள்தனமான எண்ணம் எந்தவொரு ஆண் குழந்தையின் எண்ணத்திலும் பதிந்துவிடாதபடி ஆரம்பத்திலேயே அறுத்து எறியும் கடமை பெற்றோருக்கும், கல்விக்கூடங்களுக்கும், ஊடகங்களுக்கும் கட்டாயம் இருக்கிறது.

மண்ணுக்குள் மறையும் முன் தன் கண்ணின் கருவிழிகளைத் தானமாகக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் வித்யா. கண்ணுடைய எவரும் பார்க்கக்கடவது!