Published:Updated:

ராசாவுக்குப் பயப்படும் 2ஜி-க்கள்!

ராசாவுக்குப் பயப்படும் 2ஜி-க்கள்!

ராசாவுக்குப் பயப்படும் 2ஜி-க்கள்!

ராசாவுக்குப் பயப்படும் 2ஜி-க்கள்!

Published:Updated:

அசராமல் இன்னமும் வாதாடுகிறார் ஆ.ராசா. சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னால் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கப் படாதபாடுபடுகிறார். அதில் ஒன்றுதான், 'நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு என்னையும் அழையுங்கள்’ என்று அவர் வைத்திருக்கும் கோரிக்கை.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கைதான மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டவர்கள் ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார்கள். 'கையெழுத்துப் போட்ட ராசா குற்றவாளிதான் என்றாலும், இதற்கு உறுதுணையாக நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் பிரதமர் மன்மோகன்சிங்கும் இல்லாமல் இருந்தால், இந்தக் குற்றம் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை’ என்று சுப்பிரமணியம் சுவாமி, மனு போட்டது முதல் சி.பி.ஐ. தனது விசாரணையில் சுணக்கம் காட்ட ஆரம்பித்தது. சுவாமியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும் மன்மோகனும் ப.சிதம்பரமும் அதிர்ந்து போனார்கள். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்களும் குளிர்விட்டுப்போய் நடமாட ஆரம்பித்தார்கள். அதனுடைய விளைவுதான், ராசாவின் புதிய கோரிக்கை.

ராசாவுக்குப் பயப்படும் 2ஜி-க்கள்!

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தைப் போலவே நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் 2ஜி முறைகேட்டை விசாரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.சி.சாக்கோ தலைமையிலான அந்த விசாரணைக் குழுவில் தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவும் திருச்சி சிவாவும் இருக்கிறார்கள். இந்த முறைகேடு பாரதிய ஜனதா ஆட்சி காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது என்ற இமேஜைக் கொண்டுவர நினைக்கும் தொனியில் விசாரணையை இவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். கண்துடைப்பு கமிஷனாக இது உருவாக்கப்பட்டாலும் அவர்களது விசாரணைக்கு ஒருவிதமான அரசியல் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் மீராகுமாருக்கு ஆ.ராசா ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். ''அலைக்கற்றை உரிமம் ஒதுக்கீட்டில் நான் எடுத்த அனைத்து முடிவுகளும் பிரதமர் அலுவலகத்துக்குத் தெரிவித்த பிறகுதான் எடுக்கப்பட்டன. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முன்னால் விசாரணைக்கு வரும் அனைவரும் முரண்பட்ட தகவல்களைச் சொல்கிறார்கள். சில உண்மைகள் மறைக்கப்படுகின்றன. எனவே, என்னை அழைத்து விசாரிக்க வேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் கூறி இருந்தார். இதனை விசாரணைக் குழுவின் தலைவராக இருக்கின்ற பி.சி.சாக்கோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ராசாவை அழைத்து விசாரித்தால், அவர் நிச்சயமாக பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இருவரது பெயர்களையும் சொல்வார்.  அவர்கள் இருவரையும் அழைத்து விசாரிக்க வேண்டிய நிலைமை வரும் என்று நினைக்கும் காங்கிரஸ் தலைமை, ராசாவின் கோரிக்கையைத் தட்டிக் கழித்துவிடலாம் என்று நினைக்கிறது.

''விசாரணையே முடியப்போகிறது. இந்த நேரத்தில் ராசாவை அழைத்து விசாரித்தால் காலதாமதம் ஏற்படும்'' என்று சப்பையான காரணத்தை அவர்கள் சொன்னாலும் அதனை ராசா ஏற்பதுமாதிரி தெரியவில்லை. ராசாவை விசாரிக்காமல் விசாரணையை முடித்தால், அதற்கு கருணாநிதி என்ன மாதிரியான ரியாக்ஷன் செய்வார் என்பதும் காங்கிரஸ் கவலையாக இருக்கிறது.

மொத்தத்தில் மன் மோகன் ஜி, ப.சிதம்பரம் ஜி ஆகிய 2ஜி-க்களைக் காட்டிப் பயமுறுத்தியே ராசா தப்பிக்கப் பார்க்கிறார்!

- முகுந்த்