Published:Updated:

சுனாமியின்போது மருத்துவமனையில் இருந்ததை மறைத்து குற்றம் கூறுவதா?: கருணாநிதி

சுனாமியின்போது மருத்துவமனையில் இருந்ததை மறைத்து குற்றம் கூறுவதா?: கருணாநிதி
சுனாமியின்போது மருத்துவமனையில் இருந்ததை மறைத்து குற்றம் கூறுவதா?: கருணாநிதி

சுனாமியின்போது மருத்துவமனையில் இருந்ததை மறைத்து குற்றம் கூறுவதா?: கருணாநிதி

சென்னை: சுனாமியின்போது மருத்துவமனையில் இருந்தேன், உடல் நலம் பாதிப்பது இயற்கை நியதி, அதை மறைத்து குற்றம் கூறுவது சரியல்ல என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக சட்டப் பேரவையில் சமூக நலத்துறை பற்றிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு, சுனாமி ஏற்பட்டபோது அவர் தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதமான உதவிகளைச் செய்து காயப்பட்டவர்களை மருத்துவமனைகளில் சென்று பார்த்து பலருக்குப் பலவிதமான உதவிகளை வழங்கியதாகவும், அப்போது நான் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன் என்றும், ஆனால் சென்னையிலே இருந்து கொண்டே சேப்பாக்கம் கூடச் செல்லவில்லை என்றும், பாதிக்கப்பட்ட தொகுதி மக்களைக் கூடப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரையில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது, நான் உடல் நலத்தோடு வீட்டிலே இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்காமல் இருந்தேனா? சுனாமி விபத்து ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தேனா இல்லையா? அது முதலமைச்சருக்கு தெரியாதா?. முதலமைச்சர் அதை அப்படியே மறைத்துவிட்டு, நான் சென்னையிலே வீட்டிலே இருந்துகொண்டே சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கச் செல்லவில்லை என்று உண்மைக்கு மாறாக குற்றஞ்சாட்டியிருக்கிறாரா, இல்லையா?

தமிழகத்தில் சுனாமி விபத்து 26–12–2004 அன்று காலை ஏற்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே எனக்கு விலாப்புறத்தில் கடுமையான வலி ஏற்பட்டு, முதலில் வீட்டிலேயே சிகிச்சை செய்து கொண்டு நலம் ஏற்படாததால், 26 ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டேன்.

நான் மருத்துவமனையிலே இருந்தபோதிலும், உடனடியாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாவிட்டாலும், சென்னையில் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு போன்றவர்களை பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறச் செய்தேன். காலை 10 மணி அளவிலேயே மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனை தொலைபேசியில் டெல்லிக்குத் தொடர்பு கொண்டு, பிரதமரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற ராணுவத்தை ஈடுபடுத்தும்படி கேட்டுக் கொண்டேன்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கே சோனியா காந்தியும், பிரணாப் முகர்ஜியும் வந்து என் உடல்நிலை விசாரித்தபோது, சுனாமி நிவாரண நிதிக்காக தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை வழங்கினேன். பிரதமர் மன்மோகன் சிங் என் உடல் நலம் விசாரிப்பதற்காக என் இல்லத்திற்கு வந்தபோது, சுனாமி நிவாரண நிதிக்காக தி.மு.க.அறக்கட்டளையின் சார்பில் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அளித்தேன்.

மேலும் நான் திரைக்கதை வசனம் எழுதிய ‘‘மண்ணின் மைந்தன்’’ படத்திற்காக வந்த ஊதியம் ரூ.11 லட்சம், ‘‘கண்ணம்மா’’ படத்தின் மூலம் வந்த ஊதியம் ரூ.10 லட்சம் ஆக மொத்தம் ரூ.21 லட்சத்தை 10–1–2005 அன்று மு.க.ஸ்டாலின் மூலம் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுக்கச் செய்தேன். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா நான் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லவில்லை என்று 9 ஆண்டுகளுக்குப் பிறகு என்னைக் குறை கூறுகிறார்.

பொதுவாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க நானா தயங்குபவன்? எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோதே, ஒரு பெரும் புயல் தஞ்சைத் தரணியையே வெள்ளக் காடாக்கியது. அப்போது சிறையிலே இருந்த நான் வெளியே வந்த அடுத்த கணமே, வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்காமல், சிறைச்சாலையிலிருந்து புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கினேன்.

திருச்சியில் ஒரு திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு, 54 பேர் தீயில் வெந்து மடிந்தபோது, முதலமைச்சராக இல்லாத நிலையிலும் நான் அங்கே சென்று நேரில் ஆறுதல் வழங்கினேன். கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 94 குழந்தைகள் தீக்கு இரையாகி கருகியபோது, அங்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியவன் நான்.

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிகப்பெரிய விழா நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்குக் கட்டப்பட்ட வீடுகளையெல்லாம் திறந்து வைத்தேன். என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய உடல்நிலை நன்றாக இருந்தால், சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க உடனடியாகச் சென்றிருப்பேன்.

புழல் ஏரியில் விபத்து ஏற்படப் போகிறது என்ற செய்தி அதிகாலை 5 மணிக்கு காவல் துறை அதிகாரி மூலமாக எனக்கு வந்ததும், அந்த அதிகாலை நேரத்திலேயே தலைமைச் செயலகத்திற்குச் சென்றேன். கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சாவி வருகின்ற வரை வெளியே காத்திருந்தேன். பின்னர் அதிகாரிகளுடன் 6 மணிக்கு புழல் ஏரிக்கே சென்றேன்.

எனவே சென்னையிலே இருந்து கொண்டே நான் செல்லவில்லை என்று முதலமைச்சர் பதவியிலே இருப்பவர் உண்மைக்கு மாறாகக் குற்றம் கூறுவது சரியல்ல. பேரவையில் முதல்வர் என்மீது சாட்டிய குற்றச்சாட்டு சரியல்ல என்பதற்காகத் தான் இவ்வளவு விவரங்களையும் எடுத்துக் காட்டினேன். உடல் நலம் பாதிப்பது என்பது இயற்கை நியதி. அதை மறைத்துக் குற்றம் கூறுவது சரியல்ல" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு