Published:Updated:

இனி, காவிரி தமிழர்களின் உரிமை!

ப.திருமாவேலன், ஓவியங்கள்: ஹாசிப் கான்

இனி, காவிரி தமிழர்களின் உரிமை!

ப.திருமாவேலன், ஓவியங்கள்: ஹாசிப் கான்

Published:Updated:
##~##

44 ஆண்டுகளுக்கு முன்னால் பொதுப்பணித்துறைச் செயலாளராக இருந்த ராம்சந்தர், தன் முன் இருந்த காவிரி தொடர்பான கோப்பில், 'கர்நாடகா தனது மாநிலத்தின் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஓடும் காவிரியிலும் அதன் கிளை நதிகளின் குறுக்கேயும் அதிகப்படியான அணைகள் கட்ட அனுமதித்தால், தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்’ என்று எழுதினார். இப்போது அந்தச் சூழ்நிலையை நோக்கித்தான் நாம் நகர்ந்துகொண்டு இருக்கிறோம்.

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் விடாதது ஏதோ தஞ்சாவூருக்கு மட்டுமான பிரச்னை என்பதுபோல மற்ற மாவட்டத்துக்காரர்கள் நினைப்பதும், முல்லைப் பெரியாறுக்கு கேரளா சிக்கல் ஏற்படுத்துவது தென் மாவட்டங்களின் விவகாரம் என்று மற்றவர்கள் மறப்பதும்தான், தமிழக விவசாயம் வீழ்ந்துபோவதற்கான முழு முதல் காரணம். காவிரியோ, முல்லைப் பெரியாறோ, ஈழமோ... அனைத்துமே மக்கள் பிரச்னையாக இல்லாமல், அரசியல் விவகாரமாக அதுவும் தி.மு.க., அ.தி.மு.க. மோதலாக மட்டுமே குறுக்கப்பட்டுவருவது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டமான தலையெழுத்து. எந்தப் பிரச்னையின் நியாயத்தன்மையையும் பேச முடியாமல் தடுப்பதும் தவிர்ப்பதும் இந்த இரண்டு கழகங்களின், முட்டல் மோதல்கள்தான். 'தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தர மாட்டோம்’ என்ற எதிர் மறை எண்ணத்துக்காக கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் ஒரே மேடைக்கு வருகின்றன. 'எங்கள் நிலத்துக்குத் தண்ணீர் விடு’ என்ற நல்ல நோக்கத் துக்காக, இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் எதிரெதிர் மேடைகளில் நிற்கின்றன. கர்நாடகம் - தமிழக சண்டையைக்கூடத் தீர்க்கலாம். கருணாநிதி - ஜெயலலிதா சண்டையைத் தீர்க்க முடியாது என்பதே இந்த வாரமும் உறுதி ஆகிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனி, காவிரி தமிழர்களின் உரிமை!

காவிரி... பிரம்மகிரியில் உற்பத்தி ஆனாலும் தஞ்சை விவசாயிகளின் தாய். கர்நாடகாவில் 320 கி.மீ. தூரம் நடந்து வரும் காவிரி... இரண்டு மாநில எல்லையில் 64 கி.மீ. பயணித்து, தமிழ்நாட்டில்தான் 416 கி.மீ. வரை செல்கிறாள். தலைக்காவிரியில் அமைதியாகப் புறப்பட்டாலும் ஒகேனக்கலில் அருவியாகக் கொட்டும்போது காவிரி அடையும் குதூகலத்தைக் காணலாம். காவிரியின் குறுக்கே திப்புசுல்தான், அணை கட்டியதுதான் முதல் தடங்கல். 1867-ல் மைசூரில் ஏற்பட்ட பஞ்சம் மைசூர் சமஸ்தானத்தை யோசிக்கவைத்தது. காவிரித் தண்ணீரை முழுமையாக வைத்துக்கொண்டால், பஞ்சத்தைத் தடுத்துவிட முடியும் என்று நினைத்தார்கள். அன்றைய பிரிட்டிஷ் அரசு இதற்குச் சம்மதிக்கவில்லை. 1892-ம் ஆண்டு மைசூர் சமஸ்தானமும் பிரிட்டிஷ் அரசும் போட்ட ஒப்பந்தப்படி, 'காவிரியிலோ துணை நதிகளிலோ அணை கட்ட விரும்பினால், சென்னை மாகாணத்தின் இசைவு பெற வேண்டும்’ என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், எந்த அணை கட்டும்போதும் சென்னை மாகாணத்துக்குத் தெரியப்படுத்துவது இல்லை. பிரிட்டிஷ் ஆட்சி இருக்கும்போதாவது, மைசூர் சமஸ்தானத்துக்கு ஓரளவு பயம் இருந்தது. விடுதலைக்குப் பிறகு, பயம் மொத்தமும் போய், 1956 மொழிவாரி மாகாணப் பிரிவுக்குப் பிறகு, கர்நாடகாவுக்கு எந்தக் கவலையுமே இல்லாமல்போய்விட்டது.

முதலில் கபினி அணையைக் கட்டினார்கள். யாருக்கும் சொல்லவில்லை. அதன் பிறகு, ஹேமாவதி - சுவர்ணவதி கட்டப்பட்டது. யாருக்கும் சொல்லவில்லை என்பதைவிட, யாரும் கேட்கவும் இல்லை. அதன் பிறகு, சிறுசிறு அணைகளாக 12-க்கும் மேற்பட்ட அணைகளைக் கட்டினார்கள். நீரோட்டத்தைத் தடுத்துக்கொண்டே இருந்ததால், காவிரியின் வரத்து குறைந்துகொண்டே போனது. மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா ஆகிய மூன்று கட்சிகளும் கர்நாடகா வைத் தட்டிக்கேட்கத் தவறின. மறைமுகமாகத் தட்டிக்கொடுக்கவும்தவறவில்லை.

தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசாங்கம், காவிரியை ஒரு பிரச்னையாக உணரத் தவறிய நிலையில், கருணாநிதி முதல் தடவை முதல்வராக இருந்தபோது தனது கர்ஜனையைத் தொடங்கினார். 'காவிரியை கர்நாடகம் தடுக்கிறது. அதைக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு முழிக்கிறது’ என்று உச்ச நீதிமன்றத்தில் முதன்முதலாக கருணாநிதிதான் வழக்குப் போட்டார். இதே போன்ற வழக்கை தமிழக உழவர்கள் சார்பில் முரசொலி மாறனும் மன்னை நாராயணசாமியும் தாக்கல் செய்தார்கள். இது அன்றைய பிரதமர் இந்திராவுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியது. 'பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காணலாமே... வழக்கை வாபஸ் பெறுங்கள்’ என்று இந்திரா தந்திரமாகக் கேட்க... கருணாநிதி நம்பி வாபஸ் வாங்கியதுதான், 40 ஆண்டுகளாக நம் விவசாயிகள் நடுத் தெருவில் நிற்பதற்கு அடிப்படைக் காரணம். 'பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படுமானால், உடனடியாக வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்’ என்று அன்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்திருந்தால், இன்று தமிழகத் துக்குக் கிடைத்த வெற்றியை அன்றே ஒருவேளை பெற்றிருக்கலாம்!

இந்திராவின் ஆலோசனைப்படி பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து நடந்தது. நடந்துகொண்டே இருந்தது. தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா, பாட்டீல், எடியூரப்பா, ஷெட்டர் என்று அங்கு முதல்வர்கள் மாறினார்கள். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று இங்கும் முதல்வர்கள் மாறினார்கள். இந்திரா, மொரார்ஜி, ராஜீவ், நரசிம்ம ராவ், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் என்று பிரதமர்கள் மாறினார்கள். தஞ்சை நிலைமை மட்டும் மாறவே இல்லை.

இனி, காவிரி தமிழர்களின் உரிமை!

1996 முதல் இன்று வரை (ஒரே ஓர் ஆண்டு மட்டும் இல்லை!) மத்திய அரசாங்கத்தை வழி நடத்தும் பொறுப்பில் தி.மு.க. இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991-ல் வந்தது. அதன்படி தண்ணீரைத் திறந்துவிடாத கர்நாடக அரசைத் தட்டிக்கேட்க மத்திய அரசாங் கத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்த தி.மு.க. தவறியது. 2007-ம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வந்தது. அதனை மத்திய அரசிதழில் வெளியிடு வதற்கான நிர்பந்தத்தை கருணாநிதி அப்போதே கொடுத்திருந்தால், அந்த வருடமே அது அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கும். தி.மு.க-வுக்கு மத்திய அமைச்சரவையில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாத வெறுப்பை, அமைச்சரவைப் பதவி ஏற்பில் கலந்துகொள்ளாமல், சென்னை வந்து இறங்கி வெளிப்படுத்திய கருணாநிதி, அதே கோபத்தை... வீரியத்தை காவிரித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்வதிலும் காட்டி இருக்க வேண்டும். 'நடந்தாக வேண்டிய விஷய மானால் போனில் சொல். நடந்தாலும் ஒன்றுதான்... நடக்காவிட்டாலும் ஒன்றுதான் என்பது மாதிரி யான விஷயத்துக்குக் கடிதம் கொடு’ எனும் சாணக்கியத்தனத்தையே காவிரி விஷயத்தில் கருணாநிதி பயன்படுத்தினார். கணக்குக் காட்ட கடிதங்களைத் தீட்டினார்.  இப்போது, 'அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி’ என்று கருணாநிதி முழுப் பூசணியை மறைத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் மனமுவந்து, தமிழ் மக்களின் நலன் சார்ந்து, தஞ்சை மக்களின் கண்ணீர் உணர்ந்து இந்த முடிவை எடுத்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அடிபணிந்தே அரசிதழில் வெளியிட்டுள்ளார். காவிரிப் பிரச்னையை மாநில முதல்வர்கள் மூலமோ, பிரதமர் மூலமோ, காவிரி ஆணையத்தின் மூலமோ தீர்க்க முடியாது. உச்ச நீதிமன்றம் மூலம் தீர்ப்பது மட்டுமே ஒரே வழி என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த முடிவு சரியானது... சமயோசிதமானது!

அதே சமயம், 'நடுவர் மன்றம் தீர்ப்பளித்தால் மட்டும் போதுமா? பங்காரப்பா கேட்க வேண்டாமா?’ என்று கருணாநிதி முதல்வராக இருந்தபோது கேட்டவரும் இதே ஜெயலலிதாதான். காவிரி ஆணையத்தை வாஜ்பாய் அமைத்தபோது, 'அது பல் இல்லாத அமைப்பு’ என்று கிண்டல் அடித்தவரும் இவரே. கர்நாடகக் கட்சிகள்போல தமிழகக் கட்சிகளும் காவிரிப் பிரச்னைக்காகச் சேர்ந்து டெல்லி போகலாம் என்றபோது வர மறுத்த ஒரே கட்சி அ.தி.மு.க. ஆனால், இப்படிப்பட்ட கடந்த காலப் பிடிவாதங்கள் அனைத்தையும் தாண்டி, கடந்த ஆறு மாதங்களாகக் காவிரியில் ஒருவிதத் தீர்க்கமான முடிவை ஜெயலலிதா எடுத்தார்.

இனி, காவிரி தமிழர்களின் உரிமை!

நடுவர் மன்றம் அமைக்க வி.பி.சிங் தயங்கியபோது, 'அமைக்கலாம்’ என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இடைக்கால உத்தரவு தர நடுவர் மன்றம் தயங்கியபோது 'இடைக்கால உத்தரவு தாருங்கள்’ என்று அதட்டியது உச்ச நீதிமன்றம். 'காவிரி ஆணையம் ஒன்பது ஆண்டுகளாகக் கூடவே இல்லை’ என்றபோது, 'உடனே கூட வேண்டும்’ என்று உத்தரவிட்டதும் உச்ச நீதிமன்றம்தான். அரசிதழில் உத்தரவு இடம் பெறவில்லை என்றபோது, 20-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கெடுபிடி காட்டியதும் உச்ச நீதிமன்றமே. அதனால்தான் பிப்ரவரி 19-ம் தேதி அரசிதழை காவிரித் தாய் நனைத்தாள். கடந்த 20 ஆண்டுகளில் இந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த அந்த முகம் தெரியாத நீதிபதிகள் நிற்கும் திசை தமிழ்நாட்டு மக்களின் வணக்கத்துக்கு உரியது.

இதுவரை பருவ மழையை நம்பியோ அல்லது கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகு, 'போனால் போகட்டும்’ என்று திறந்துவிடப்படும் நீரை நம்பியோ இருந்தோம். இனி, காவிரி நீர் தமிழர் களின் உரிமை.

சரி... ஒருவேளை கர்நாடகம் தர மறுத்தால்... மன்மோகனையோ புதிதாக வரப்போகின்ற மத்திய அரசையோ நம்பிப் பயன் இல்லை. உச்ச நீதிமன்றமே உழவர்களின் தெய்வம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism