Published:Updated:

மக்களே... இனி மகிழ்ச்சிதான்!

ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா

மக்களே... இனி மகிழ்ச்சிதான்!

ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
##~##

ப. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள எட்டாவது பட்ஜெட் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், 'எட்டாத’ பட்ஜெட் என்றுதான் அனைவர் காதிலும் விழுகிறது.

 அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கப்போகும் நிலையில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை, தேர்தல் வெற்றியை மையமாகக்கொண்டதாகத்தான் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாக்காளர்கள் மனம் குளிரும் வகையில் சலுகை அறிவிப்புகளைச் செய்வதன் மூலமாக மக்கள் அரசாகக் காட்டிக்கொள்ள காங்கிரஸ் கட்சி துடித்திருக்கும். அதற்கேற்ப நிதிநிலை அறிக்கையை வகுத்திருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ப.சிதம்பரம், தலையைத் தூக்காமல் வாசித்து முடித்த நிதிநிலை அறிக்கை, இந்தியாவையும் காப்பாற்றுவது மாதிரி தெரியவில்லை; காங்கிரஸ் கட்சியையும் காப்பாற்றப்போவது இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆரம்பமே அவர் அபசகுனமாகத்தான் தொடங்கினார். ''பொருளாதார மந்தநிலை தொடர்கிறது. 2010 முதல் அதில் எந்த மாற்றமும் இல்லை. நமக்குப் பெரிய சவாலாகப் பொருளாதாரம் மாறிவிட்டது!'' என்று ப.சிதம்பரம் போட்ட பீடிகையே, 'என்னிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்’ என்பதைச் சொல்வது மாதிரி இருந்தது. இந்தியாவுக்கு எட்டு முறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்து முடித்த பிறகு, 'பொருளாதார நிலைமை சரியில்லை’ என்கிறார் சிதம்பரம். 1991-ம் ஆண்டு தொடங்கி பொருளாதார லகானைக் கையில் வைத்திருக்கும் (பி.ஜே.பி. ஆட்சி நீங்கலாக!) பிரதமர் மன்மோகன் சிங், அதனை அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அப்படியா னால் தன்னுடைய ஃபார்முலாவில் ஏதாவது கோளாறு இருக்கிறது என்பதை மன்மோகன் ஒப்புக்கொள்கிறாரா?

மக்களே... இனி மகிழ்ச்சிதான்!

''நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் மூன்று முக்கியக் காரணிகளாக நிதிப் பற்றாக்குறை, பணவீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகியவை விளங்குகின்றன. இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் விஷயங்களாகும். இவை அனைத்தையும் கட்டுக்குள்வைத்து பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையிலான பட்ஜெட் தாக்கல்செய்யப்பட்டுள்ளது'' என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் மன்மோகன் சிங். 18 ஆயிரம் கோடிக்குப் புதிய வரிகள் போடப்பட்டுள்ளன. வரிகளை அதிகப்படுத்திக்கொண்டே போவதுதான் பற்றாக்குறையைச் சரிசெய்யும் வழியா? வரிகள் மூலமாக வருவாயைத் திரட்டி நலத் திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கிவிட்டு அமைதியாக இருப்பது அல்ல ஓர் ஆண்டின் நிதிநிலை அறிக்கை என்பது. நீடித்த வளர்ச்சிக்கு, குறிப்பிட்ட ஆண்டின் பட்ஜெட்டில் என்ன வழிவகை காணப்படுகிறது என்பதே முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. அதனைப் போக்குவதற்கு என்ன தீர்வு சொல்லப்படுகிறது?

'வெளிநாடுகளின் பொருளாதாரச் சிந்தனையை நாம் பின்பற்றக் கூடாது’ என்று பொருளியல் அறிஞர்கள் சொன்னபோதெல்லாம், அவர்களை 'வளர்ச்சியின் எதிரிகள்’ என்று சொல்லிவந்தார்கள். ஆனால், இந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின்போது, சுவாமி விவேகானந்தரின் ஒரு வாசகத்தை ப.சிதம்பரம் குறிப்பிட்டார். 'உனக்குத் தேவைப்படும் வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே இருக்கின்றன. எனவே, உனது எதிர்காலத்தை நீயே நிர்ணயித்துக்கொள்’ என்கிறது விவேகானந்தரின் வாசகம். அந்நிய முதலீடுதான் இந்தியாவுக்கு வலிமையைச் சேர்க்கும் என்று சொல்லிவந்தவர்கள், விவேகானந்தர் மூலமாகத் தங்களது செயல்பாடுகளை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கி இருப்பதுதான் இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்க வேண்டிய ஒரே அம்சம்.

மக்களே... இனி மகிழ்ச்சிதான்!

விவசாயம் மொத்தமாக அழிந்துவருகிறது. உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம். செயற்கை ஆபரணக் கற்கள் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளார்கள். நாம் பெரிதும் நம்பி வந்த தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வளர்ச்சி தேக்கமடைந்துவிட்டது. நம்முடைய ஏற்றுமதித் தொழில்கள் அனைத்தும் மோசம் அடைந்தன. அந்நிய முதலீடுகள் மூலமாக நாம் வளர்ந்திருக்க வேண்டும். ''1991-ம் ஆண்டில் இருந்து 2010 வரை 42 சதவிகிதம் அந்நிய நேரடி முதலீடு மொரீஷியஸ் பாதையில்தான் வந்துள்ளது. இதன் மூலம் அந்நிய முதலீடுகளின் தரம்பற்றிய ஐயம் ஏற்பட்டுள்ளது. அந்நிய முதலீட்டாளர்களுக்கு இங்கே உள்கட்டமைப்புப் பணியில் ஈடுபடுவது கவர்ச்சிகரமானதாக இல்லை. மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 35 சதவிகிதம் மகாராஷ்டிர மாநிலத்துக்கு மட்டுமே வருகிறது'' என்று அனைத்திந்தியக் காப்பீட்டு ஊழியர் சங்கத் தலைவர் அமானுல்லா கான் தன்னுடைய புத்தகத்தில் எழுதினார்.  

ராணுவத்துக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடியைக் கூட்டிக்கொண்டே போவதும் அர்த்தமற்றதே. இந்தியாவின் பாதுகாப்பு என்பது அது எடுக்கும் தீர்க்கமான வெளியுறவுக் கொள்கையில்தான் அடங்கி உள்ளதே தவிர, எத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறோம் என்பதில் அல்ல. 'பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவுகிறது’ என்று சொல்லி, மொத்த பட்ஜெட்டில் 10 சதவிகித செலவினத்தைப் பாதுகாப் புத் துறைக்கு ஒதுக்கியுள்ளார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு பாகிஸ்தானிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதால் இந்தியாவைக் கைப்பற்றிவிட முடியாது. இத்தகைய ஊடுருவலையே ஆயுத வியாபாரிகளின் தந்திரம் என்பார்கள். எல்லை தாண்டிய ஊடுருவல்கள் நடந்தால்தான், அவர்களது ஆயுத வியாபாரம் நடக்கும். இத்தகைய ஆயுத அரசியலை இந்த அறிக்கை புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. போஃபர்ஸ் தொடங்கி ஹெலிகாப்டர் வரை நடக்கும் ஊழல்கள் 'ராணுவ ரகசியங்களாக’ மறைக்கப்படும் சூழலில், விட்டேத்தியாக பாதுகாப்புத் துறைக்குப் பணம் பாய்ச்சுவதில் அர்த்தம் இல்லை. ஊழலுக்குப் பாதியையும் ஊதாரித்தனத்துக்கு மீதியையும் ஒதுக்கிவிட்டு பற்றாக்குறை பட்ஜெட்டைப் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.

மக்களே... இனி மகிழ்ச்சிதான்!

ப.சிதம்பரத்தை நம்பி இருந்தவர்கள் மத்தியதரவர்க்கத்தினர். தனி நபர் வருமான வரி விகிதத் தில் மாற்றம் இல்லை என்ற வார்த்தையைக் கேட்டதும், அவர்கள் ஒடுங்கிப்போனார்கள். 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 2,000 ரூபாய் வரித் தள்ளுபடி  வழங்கப்படும் என்பது சந்தோஷம் ஏற்படுத்தாத சமாசாரம். இதே போன்ற கண்துடைப்புதான் வீட்டுக் கடனிலும் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கும் செல்போன், பைக் விலை எகிறவும்போகிறது. ஏ.சி. உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை எங்கேயோ எகிறப்போகிறது. ''பொருளா தாரச் சவாலை எதிர்கொள்ள, பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று பட்ஜெட் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்திலேயே சொன்னது இதற்காகத்தான் போலும்.

மன்மோகன், ப.சிதம்பரம், மாண்டேக்சிங் அலுவாலியா ஆகிய மூன்று பொருளாதார மேதைகள் சேர்ந்து சொல்கிறார்கள், 'மகிழ்ச்சியான காலம் தொடங்கிவிட்டது’ என்று. அப்படியானால், இதுவரை கடந்தது நொந்த காலம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்களா என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism