Published:Updated:

சூப்பருப்பா! இப்படில்லாம் நீ பேசிக் கேட்டதே இல்லைப்பா!

சூப்பருப்பா! இப்படில்லாம் நீ பேசிக் கேட்டதே இல்லைப்பா!

பிரீமியம் ஸ்டோரி

ன்னும் ஒரே ஓர் இடைக்காலக் கூட்டத்தொடர்தான் இருக்கிறது மத்தியில் ஆளும் மன்மோகன் அரசுக்கு. இதுவரை எல்லாக் கூட்டத் தொடரிலும் போரடிக்கும் குடியரசுத் தலைவர் உரையை, ஒரு சேஞ்சுக்கு மாற்றிப் படிக்கலாமே!

''மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,

1999 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஊழல் சாதனைப் பட்டியலை அன்னையை வணங்கிச் சமர்ப்பிக்கிறேன். 'எண்ணித் துணிக கருமம்' என்று தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க ஒரு புராஜெக்ட்டில் எவ்வளவு கமிஷன் அடிக்க முடியும், எவ்வளவு ஊழல் பண்ண முடியும் என்பதை எண்ணி தீர விசாரித்த பிறகே பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா வல்லரசாகி வருகிறது என்பதை உலகமே அறிந்துகொண்ட அந்தப் பொன்னாள் 2ஜி ஊழல் வெளியான நாள்தான். இந்த ஊழலை விசாரிப்பதற்காக சி.பி.ஐ-க்கு முழு சுதந்திரம் அளித்துள்ளோம். எந்த அளவுக்கு என்றால், வழக்கில் குற்றவாளிகளை விசாரிக்கும் சி.பி.ஐ. வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுடன் டீல் பேசிக்கொண்டு ஊழலில் ஈடுபட்டு, இப்போது விலக்கப்பட்டுள்ளார்.

சூப்பருப்பா!  இப்படில்லாம் நீ பேசிக் கேட்டதே இல்லைப்பா!

இந்த அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறைகொள்ளாது விளையாட்டுத்தனமாக இருக்கிறது என்ற அவப்பெயர் எங்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளை டெல்லியில் நடத்தி கல்லா கட்டினோம் என்பதை இங்கே பதிவுசெய்ய விழைகிறேன்.

வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று நீதிமன்றங்களும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது இதற்காக எதுவும் செய்யாத எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. அதற்கான முயற்சியில் இறங்கி களப் பணியாற்றிய கழகக் கண்மணி ஹசன் அலி மீதும் கறுப்புப் பண முதலை என்று புழுதிவாரித் தூற்றுகிறார்கள். அவர் செய்த தவறுதான் என்ன? உள்நாட்டில் பணக்காரர்கள் சம்பாதித்ததை எல்லாம் வெளிநாட்டில் பத்திரமாகக் கொண்டுபோய் சேர்க்கும் சாதாரண குதிரை வியாபாரி அவர். இருந்தாலும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் மீது விசாரணை நடத்தினோம். 50,000 கோடியை செலுத்தச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். பாவம் அந்த ஏழை மனது என்ன பாடுபடும் என்பதை நல்லோர் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சூப்பருப்பா!  இப்படில்லாம் நீ பேசிக் கேட்டதே இல்லைப்பா!

எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரே குடையின் கீழ் திரளும் இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பற்றியும் இங்கே தவறாமல் குறிப்பிட வேண்டும். இந்திய கிரிக்கெட்டின் ஆளுமையை உலகத்தின் முன் நிரூபிக்க அயராது பாடுபட்டு உழைத்த அன்பர் லலித்மோடி, ஊழல் குற்றச்சாட்டுக்குப் பயந்து இந்தியாவைவிட்டு வெளியேறி இங்கிலாந்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டிய அளவுக்கு உழைப்பால் உயர்ந்திருக்கிறார்.

நடுநடுவே வந்த நிலக்கரி ஊழலும், ஆதர்ஷ் கட்டட ஊழலும் எங்கள் வரலாற்றுச் சாதனைப் புத்தகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையே. ஊழலால் எத்தனை காலம்தான் இந்தியாவின் மானம் கப்பல் ஏறிப்போவது என்ற உயரிய சிந்தனையின் வெளிப்பாடுதான் ஹெலிகாப்டர் ஊழல். இந்த ஊழலிலும் இத்தாலி நிறுவனம் சம்பந்தப்பட்டு இருப்பதால், போஃபர்ஸ் ஊழலையும் இந்த ஊழலையும் அன்னை சோனியாவுடன் இணைத்துப் பேசுபவர்களின் வாயை அடைக்கும் வகையில் அடுத்த ஊழல் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பாகவே இருக்கும் என்று உறுதியளித்து வாய்ப்பளித்தமைக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!

- உரை தயாரிப்பு: சேசு குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு