Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

மிழகத்தின் மூன்று நகரங்கள் முன்னேற்றப் பாதையில் இருப்பதாக பத்திரிகை ஒன்று அளித்த விருதுகளைப் பெற்றுக்கொள்வதற்கு, தனது அமைச்சர்களைப் பெருமையோடு டெல்லிக்கு அனுப்பிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா. கவலைக்குரிய விருது ஒன்றும் தமிழகத்துக்குக் காத்திருக்கிறது. 'மதுவின் கோரப் பிடியில் சிக்கிச் சீரழிந்த மாநிலங்களில் முதல் இடம்' என்பதே அது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 57 வயதாகும் காந்தியவாதி சசிபெருமாள், மதுவின் கொடுமைக்கு எதிராக 33 நாட்களாக சென்னையில் பட்டினிப் போராட்டம் நடத்தி... உண்ணாவிரதம் என்ற வார்த்தைக்கு உண்மையான மதிப்பை உணரவைத்திருக்கிறார். ஆனால், தமிழக அரசின் சார்பாக அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஒருவர்கூட அவரைச் சந்திக்கவில்லை. மாறாக, 'வேண்டாத சக்திகள்தான் சசிபெருமாளைத் தூண்டிவிடுகின்றன' என்று அமைச்சர் ஒருவர் விடுத்த மிரட்டல் செய்திதான் அவருக்குப் போய்ச் சேர்ந்தது.

'மதுக் கடைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் எத்தனையோ ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக உணவு அளிக்க முடிகிறதே?' என்று கேள்வி வருமானால், அதற்கு ஒரே பதில்தான். குடும்பத் தலைவனின் கல்லீரலைக் காவு கொடுத்துவிட்டு, கால் வயிற்றுக் கஞ்சியைக் குடிப்பதற்கு எந்தக் குடும்பமும் இங்கே தயாராக இல்லை. தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குடும்பங்களின் பிரதிநிதியாக இதைத்தான் உணர்த்தி இருக்கிறார் சசிபெருமாள். அவரைத் தூண்டிவிட்ட 'வேண்டாத சக்தி'கள் - பரிதாபத்துக்குரிய இந்த ஏழைக் குடும்பங்கள்தான்!

'மக்களால் நான்... மக்களுக்காகவே நான்' என்று விவேகானந்தர் விழாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறிய வார்த்தைகளை நடைமுறையில் மெய்ப்பிக்க முதல்வருக்கு நல்லதொரு வாய்ப்பு கைவசம் காத்திருக்கிறது. அவரிடம் இருக்கும் பேனாவின் ஒரு துளி 'மை' போதும் - மயக்கத்தில் இருந்து தமிழ்நாட்டைத் தெளியவைக்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism