Published:Updated:

இப்படி நடக்காதுன்னா சொல்றீங்க?

இப்படி நடக்காதுன்னா சொல்றீங்க?

சினிமாக்களில் வரும் ட்விஸ்ட்டுகளை விட, அரசியலில் வரும் ட்விஸ்ட்டுகள் நம்ப முடியாதவை. ஆனால், வைகோ- ஜெயலலிதாவின் திடீர்(!) சந்திப்புக்குப் பின் இதையெல்லாம் நம்பித்தான் ஆகணும். இதோ, அடுத்த ஒரு அதிர்ச்சிகரமான சந்திப்பை, எக்ஸ்க்ளூ ஸிவாக உங்களுக்குத் தருகிறோம்.

டெஸோ சார்பாக இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்துகொள்ள, (வேறு வழி இல்லாமல்) தி.மு.க-வினர் திரளாக வந்து கலந்துகொள்கிறார்கள். சுப.வீ-யும், வீரமணியும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறார்கள். வேண்டாம், வேண்டாமென்று சொன்னாலும் (அப்படி யாரும் சொல்லவில்லை என்பது வேறு விஷயம்!) தள்ளாத வயதினிலும், வந்து கலந்துகொள்கிறார் கலைஞர்!

அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், கமாண்டோ பாதுகாப்புடன் சைரன் வைத்த கார் வந்து, கலைஞர் அருகே நிற்கிறது. கார் கதவு திறக்கிறது. முதல்வர் ஜெயலலிதா இறங்குகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இப்படி நடக்காதுன்னா சொல்றீங்க?

கலைஞர் வாய் திறப்பதற்குள், ''மிஸ்டர் கருணாநிதி, எப்படி இருக்கீங்க?'' என்கிறார் ஜெ, சிரித்த முகத்துடன். கலைஞரும் புன்னகைத்தபடி, ''வாருங்கள் அம்மையார் அவர்களே, நீங்கள் நலமா? உடன்பிறவா சகோதரி நலமா?'' என்கிறார்.

''கடவுள் அருளால் நல மாக இருக்கிறோம். உங்கள் வீட்டில் மனைவியார், துணை வியார் நலமா? உங்கள் பிள்ளைகள் எப்படி இருக்கிறார் கள்? அழகிரி, ஸ்டாலின், கனிமொழி எங்கு வேலை செய்கிறார்கள்? அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?''

(கலைஞர் கடுப்பை அடக்கிக்கொண்டு...) ''அவர்களும் என்னைப்போல, சமூகத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டார்கள்'' இந்தப் பதிலைக் கண்டுகொள்ளாததுபோல, அடுத்த கேள்விக்குத் தாவுகிறார் ஜெ. ''இங்கென்ன பிரச்னை, கூட்டமா நிக்குறீங்க? இங்கே இன்னும் மலிவு விலை உணவகம் திறக்கவே இல்லையே, அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம்?''

(மறுபடியும் கலைஞருக்கு வெறி ஏறுகிறது. இருந்தாலும் அடக்கிக்கொள்கிறார்.) ''நான்கு வருடங்களுக்கு முன், இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த, சிங்கள அரசைக் கண்டித்து இப்போது ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.''

மீண்டும் ஜெ, இந்தப் பதிலை சட்டைசெய்யாமல், ''நான் தினந்தோறும் பயணிக் கும் பகுதிக்கு வந்திருக்கிறீர்கள். எனது பிறந்த நாளை முன்னிட்டு, பக்கத்தில் பிரியாணி போடுகிறார்கள். வந்து சாப்பிட்டுச் செல்லுங்களேன்'' என்று சொல்ல, ''உங்கள் அன்புக்கு நன்றி அம்மையாரே, மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போவதுதானே எங்கள் வழக்கமான போராட்டம். ஏற்கெனவே ஒருவர் உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லிவிட்டதால், அடுத்த ஆண்டு வரப்போகும் பிறந்தநாளுக்கு முன்கூட்டியே வாழ்த்துகள் சொல்லிக்கொள்கிறேன்'' என்கிறார்.

''சரி மிஸ்டர் கருணாநிதி, உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். ரெஸ்ட் எடுங்கள். உங்களுக்கு முதியோர் பென்ஷன் வேண்டுமென்றால் மனு கொடுங்கள், இப்போது கிளம்புகிறேன்'' என்று சொல்லிவிட்டு, காரில் தாவி ஏறுகிறார் ஜெயலலிதா.

இதைப் படிக்கும்போது நமக்கே கண்ணை கட்டுதே, உண்மையிலேயே இப்படியரு சந்திப்பு நடந்தா யார் யாருக்கெல்லாம் கண்ணைக் கட்டும்?

- செ.சல்மான்