Published:Updated:

கேப்டன் கண்ணாமூச்சி!

கேப்டன் கண்ணாமூச்சி!

கேப்டன் கண்ணாமூச்சி!

விஜயகாந்தைச் சும்மா இருக்க விடாமல், ஊர் ஊராக ஊர்வலம் போகவைத்துவிட்டார் ஜெயலலிதா. தேர்தல் நேரத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் போவது மாதிரி, ஊர் ஊராக கோர்ட்டில் ஆஜராக வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிட்டார்கள். எல்லாம் அவதூறு வழக்குகள்தான்.

'மின்சாரம் கொடுக்கிறேன்னு சொன்னாங்க... தந்தாங்களா? கொடநாடுல போய் ரெஸ்ட் எடுக்கிறாங்க’, 'சட்டசபையில மக்களைப் பத்திப் பேசுறது இல்லை, சொந்தப் பெருமையை மட்டும்தான் பேசுறாங்க’ என்று அவர் தன் பாணியில் விமர்சனம் செய்தால், அடுத்த நாளே அவதூறு வழக்குப் பாய்ந்துவிடுகிறது. அதாவது ஆட்சியைப் பற்றியோ அல்லது ஜெயலலிதாவைப் பற்றியோ விஜயகாந்த் எதைப் பேசினாலும், வழக்கு பாய்கிறது. இப்படி கோர்ட்டுக்குச் செல்லும்போது பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் விஜயகாந்திடம் நிருபர்கள் மறக்காமல் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''உங்க கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவராக ஜெயலலிதாவைச் சென்று சந்திக்கிறார்களே?'' என்பதே அந்தக் கேள்வி. உடனடியாக விஜயகாந்த், ''அதனால என்ன? எல்லோருமே முதலமைச்சரைப் பார்க்கட்டும்'' என்று சொல்கிறார். இதை அவர் காமெடியாகச் சொன்னாலும், விரக்தியாலேயே இப்படி அவர் பேசுவதாகச் சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

''ஒரு பொறுப்புள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் விஜயகாந்த். அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது. எதுக்கு காமெடியாப் பதில் சொல்லணும், எதுக்கு சீரியஸாகப் பதில் சொல்லனும்னு தெரியாம இருக்கார். இவர் சொல்றதைப் பார்த்தா, கட்சி எம்.எல்.ஏ-க்களை இவரே அந்தப் பக்கம் போங்க... போங்கன்னு சொல்றது மாதிரி இருக்கு'' என்று சொல்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். ஏற்கெனவே அருண்பாண்டியன், சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன் ஆகிய நான்கு எம்.எல்.ஏ-க்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள். கடந்த வாரத்தில் சுரேஷ்குமார் போய்ப் பார்த்தார். அவர் போகிறார், இவர் போகிறார் என்று நித்தமும் வதந்தி கிளம்பி வருகிறது. சமீபத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டி னின் மனைவி, இந்திய ஜனநாயக் கட்சியில் போய்ச் சேர்ந்தார். அவர், அ.தி.மு.க-வில் சேருவதற்கு முயற்சி செய்தார். அதில் தோல்வி அடைந்ததால்தான் இந்தக் கட்சியில் சேர்ந்தார். தன்னுடைய நிலைமையை விளக்கிய அவர், ''தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேருடன் நான் அ.தி.மு.க-வில் சேர முயற்சித்தேன்'' என்கிறார். அதாவது விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏ-க்களை யார் யாரோ சொந்தம் கொண்டாடி கட்சி மாற வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் குழப்பத்தை விஜயகாந்த் உணர்ந்தாரா எனத் தெரியவில்லை.

''எங்க எல்லாரையுமே கேப்டன் சந்தேகப்படுறாரு. அதனால, கட்சி விஷயங்கள் பற்றி எங்களிடம் டிஸ்கஸ் பண்றது இல்லை. சந்திரகுமார், விருகம்பாக்கம் பார்த்தசாரதி ஆகிய இரண்டு பேரைத் தவிர யாரையும் நம்புறதும் இல்லை. இப்படியே போனா... இந்தக் கட்சியில இருக்கிறதா, வேணாமானு யோசிக்க வேண்டி இருக்கும்'' என்று தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் புலம்புகிறார்கள். தலைமைக்கு ஏதாவது தகவல் சொல்லலாம் என்று போன் செய்தால், விஜயகாந்த் வெளியே சொல்ல முடியாத அளவுக்குத் திட்டுகிறாராம். அதனால் பலரும் எதுக்குடா வம்பு என்று எதையும் சொல்லாமல், அவரிடம் தொடர்புகொள்ளாமல் இருக்கிறார்களாம். இப்படி தலைமைக்கும் எம்.எல்.ஏ-க்களுக்குமான கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது.

அதே நேரத்தில் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களிடம் ரகசிய நட்பை வைத்து காரியத்தினைச் சாதிக்க ஆரம்பித்துள்ளார்கள். ஒரு சிலரைத் தவிர மற்ற எம்.எல்.ஏ-க்களது பரிந்துரைகளைச் செய்து கொடுக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளாராம். இதே சூழ்நிலை இன்னும் ஆறு மாதங்கள் தொடர்ந்தால், அத்தனை பேரையும் கேப்டன் கப்பலில் இருந்து கடத்திவிடுவார்போல!

- முகுந்த்