Published:Updated:

''மு.க.முனியாண்டினு மாத்து!''

''மு.க.முனியாண்டினு மாத்து!''

''மு.க.முனியாண்டினு மாத்து!''

''மு.க.முனியாண்டினு மாத்து!''

Published:Updated:

துரையில் இன்னமும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம் தொடர்கிறது. கடந்த வாரம் மாலையில் நடந்த 'ஜெயலலிதா பிறந்த நாள் விழா' பொதுக்கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் நம்ம ராமராஜன். அண்ணன் படமே செம காமெடியா இருக்குமே, அவர் பேச்சையும்தான் கேட்போமே என்று போனால்... அது படத்தைவிட செம காமெடி!

"அண்ணே சவுண்டை ஃபுல்லா வைங்கண்ணே" என்று மைக்செட்காரரிடம் சொல்லிவிட்டு, பேச்சை ஆரம்பித்தார் ராமராஜன்.

"மதுரைக்கு அழகு மீனாட்சி. காஞ்சிக்கு அழகு காமாட்சி. காசிக்கு அழகு விசாலாட்சி. தமிழகத்துக்கு அழகு அம்மாவின் ஆட்சி. மாண்புமிகு அம்மா எத்திசையில் இருந்தாலும் அத்திசையை நோக்கி விழுந்து வணங்கி என் உரையை ஆரம்பிக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மு.க.முனியாண்டினு மாத்து!''

அறிவுக்கு ஊட்டச் சத்து ஆட்டுப்பால். குழந்தைக்கு ஊட்டச் சத்து ஆவின் பால். சினிமாவுக்கு ஊட்டச் சத்து அமலா பால். நம் இயக்கத்துக்கு ஊட்டச் சத்து அண்ணன் ஜெயபால் (இவர்தான் கூட்டத்தை ஏற்பாடு செய்தவராம்). எல்லார் பேரையும் சொல்ல ஆசைதான். ஆனா நேரமில்லை. வேணுமின்னாச் சொல்லுங்க. காலையில இதே இடத்துக்கு வந்து பேரைப் பூராம் படிக்கிறேன்'' என்று ஆரம்பத்திலேயே காமெடி கியர் போட்டவர், அப்புறம் போனதெல்லாம் அடடே ஸ்பீடு!

''அம்மாவை ஈன்றது அன்னை சந்தியா. அம்மா ஆளப்போவது நாளைய இந்தியா. தமிழ்நாட்டுல எத்தனையோ முதல் அமைச்சர் இருந்திருக்காங்க. ஆனா யாரையாச்சும் நாம பிரதமர்னு சொல்லி இருக்கோமா? அம்மாவைத்தான் சொல்றோம். ஏன் தெரியுமா? அம்மாவுக்கு அத்தனை லாங்வேஜ் தெரியும். உனக்குத் தைரியம் இருந்தா, இதே மேடையில ஒரு பக்கம் எங்கம்மா இருக்கட்டும். இன்னொரு பக்கம் ஏ... கருணாநிதி நீ உட்காரு. ரொம்ப வேண்டாம்யா... ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷம் இங்கிலீஷ்ல பேசு பார்ப்போம். சரி, நீதான் படிக்கலை. பி.ஏ. படிச்சிருக்கார்ல உன் மகன் அழகிரி. அவருக்கொரு போனைப் போடு. அந்த ஆளுக்கு தமிழே பேசத் தெரியாது. அட நான் கூட எம்.பி-யா இருந்தேன்யா. ஒதுங்கி ஒதுங்கி இருந்தாலும், ஒரு நாள் பாராளுமன்றத்துல பேசிப்புட்டேன். தமிழ்லேயே பேசிட்டோம்ல... நீ ஒரு முதல் அமைச்சரோட மகன். மத்திய மந்திரியா இருக்கிறவரு. ஒரு வார்த்தைகூட பேசவே இல்லியே!

தமிழ் தமிழ்ங்கிறீயே முதல்ல உம் மகன் மு.க.ஸ்டாலின் பேரை தமிழ்ப் பேரா மாத்துய்யா... மு.க.முனியாண்டி அப்படீனு மாத்து. இல்ல மு.க. மூக்காண்டினு மாத்து. எல்லாம் முடிஞ்ச பிறகு டெசோங்கிற... பந்த்ங்கிற... ஏன்யா இந்த நாடகம்? உன் நிலைமையில எங்க அம்மா இருந்திருந்தா... என்ன செய்வாங்க தெரியுமா? 'ஹலோ...மிஸ்டர். மன்மோகன் சிங்.. இன்னைக்கு ஈவனிங்குக்குள்ள இலங்கைப் பிரச்னையை நீ தீர்க்கிற. இல்லைன்னா... நாளைக்கு நீ பிரதமரா நீடிக்க முடியாது. எப்படி வசதி?'னு கேட்டிருப்பாங்க.

இப்பவே டப்பா டான்ஸ் ஆடுது. ஒரு வேளை அந்தம்மா பிரைம் மினிஸ்டரா ஆகிட்டா... டோட்டல் குடும்பமும் குளோஸ் ஆகிடுமேன்னு பயந்துதான் கருணாநிதி மக்களை ஏமாற் றும் வேலையில் இறங்கி இருக்கார். எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க. வானத்துல இருக்கிறது மேகம். அம்மா பிரதமரானா நம்ம தேசத்துக்கு யோகம் யோகம் யோகம் என்று சொல்லி என் சிற்றுரையை முடிக்கிறேன்." என்றார்.

11 மணி அனந்தபுரி எக்ஸ்பிரஸைப் பிடிப்பதற்காக 10.45-க்கு தெற்கு வாசலில் இருந்து ஓட்டம்பிடித்த ராமராஜனைப் பார்க்கப் பாவ மாக இருந்தது!

- கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism