Published:Updated:

'அன்பான மனைவி... அழகான குழந்தைகள்!'

மாணிக் தாகூர் பதில்

##~##

'காமராஜர் தொகுதியில் காங்கிரஸைப் புதைக்கிறார் மாணிக் தாகூர்’ என்ற தலைப்பில் கடந்த 27.3.13 தேதியிட்ட ஜூ.வி.யில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக விருதுநகர் எம்.பி-யான மாணிக் தாகூர் நமக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். 

''விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரயில்வே பாதைக்குத் தரைகீழ்ப் பாலம் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரயில்வே நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், முடிவை மாற்றி மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டது. அந்த முடிவு என்னால் எடுக்கப்படவில்லை. மேம்பாலம் அமைக்கத் தடை கேட்டு அந்தப் பகுதி மக்களால் வழக்குத் தொடரப்பட்டது. எனவே கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது. அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

'அன்பான மனைவி... அழகான குழந்தைகள்!'

சிவகாசி, பள்ளபட்டியில் இருந்த செல்போன் டவரை மாற்ற வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கு நான் அதைப் பரிந்துரைசெய்தேன். இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்னை. சாத்தூர் ராமச்​சந்திரனிடம் நான் மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்காகப் பாடுபட்டவர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. நான் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேலை செய்தேன் என்று சொல்வது  அபாண்டம். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளை நான் மதிப்பதில்லை என்பதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

சிவகாசி பட்டாசுத் தொழிலையைப் பொறுத்தவரை என்னிடம் வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை நான் நிறைவேற்றி இருக்கிறேன். பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, உதவிகளைப் பெற்றுத் தந்திருக்கிறேன். என்னுடைய பரிந்துரையின் பேரில் பட்டாசு உற்பத்தியை நவீன தொழிற்நுட்பத்துடன் பாதுகாப்பாகத் தயாரிக்க மத்திய அறிவியல் விஞ்ஞானக் கழகத்தின் வல்லுநர்கள் மூலம் ஆயத்தப் பணிகள் நடக்கின்றன.

எனது திருமணம் குடும்பப் பெரியவர்களின் சம்மதத்தோடும், ஆசியோடும் நடந்தது. அன்பான மனைவி, அழகான இரண்டு குழந்தைகள் என நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். என்னுடைய வளர்ச்சியைப் பொருக்காத சிலர் பொய் செய்தி​களைப் பரப்புகின்றனர். அது அத்தனையும் ஆதாரமற்றது'' என்று குறிப்பிட்டுள்ளார் மாணிக் தாகூர்.