Published:Updated:

திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க.!

ப.திருமாவேலன்

திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க.!

ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

"தி.மு.க-விடம் இருந்து காங்கிரஸைப் பிரிக்க சதி நடக்கிறது!''- என்ற காமெடி வாக்குமூலத்தை இதுவரை உதிர்த்துவந்த கருணாநிதி, தானே வலியச் சென்று, காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டார்.

மார்ச் 21-ம் தேதி ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது இந்தியா என்ன முடிவெடுக்கிறது என்று தெரிந்த பிறகுதான் அவர் மத்திய அரசுக்கு எதிரான முடிவை எடுத்திருக்க வேண்டும். அதுவரைகூடப் பொறுமை காக்க, கருணாநிதி தயாராக இல்லை. 'எவ்வளவு சீக்கிரம் காங்கிரஸைத் தலைமுழுகுகிறோமோ, அவ்வளவு சீக்கிரம்  தி.மு.க-வுக்கு நன்மை விளையும்’ என்று கருணாநிதியை முடிவெடுக்கத் தூண்டியது தமிழ் நாட்டு மாணவ-மாணவியர்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க.!

''இலங்கை அரசாலும் இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும் இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போர்க் குற்றங்கள் என்றும் இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும். நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, இதுகுறித்து விசாரிக்க வேண்டும். இந்த வாசகங்களை அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தங்களாக இந்தியா கொண்டுவர வேண்டும். அந்தத் திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும்!’ - இவைதான் காங்கிரஸ் மேலிடத்திடம் கருணாநிதி வைத்த கோரிக்கை. 'இதற்கு ஆவன செய்வோம்’ என்று ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகிய மூவரும் சொல்லிச் சென்றதாக கருணாநிதி சொல்கிறார். 'இல்லை. அப்படிச் சொல்லவில்லை. சோனியாவிடம் ஆலோசனை செய்துவிட்டுச் சொல்கிறோம் என்றுதான் சொன்னோம்’ என்கிறார் குலாம்நபி. இந்தப் பேச்சுவார்த்தைகள் அகமது படேல் மூலமாக சோனியாவுக்குச் சொல்லப்பட்டன. இதனை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கடுமை யாக நிராகரித்தார்கள். பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர், 'இந்த வார்த்தைகள் எதனையும் சேர்க்க இயலாது. சேர்த்தால் பாகிஸ்தானைப் போல, இலங்கை நம் மீது போர்ப் பிரகடனம் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது’ என்ற அளவுக்குக் கூறினார்கள். இறுதியாக, 'அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம். அதையும் இப்போது சொல்ல வேண்டாம். ஜெனிவாவில் வாக்களிக்கும்போது தெரிவித்தால் போதும்’ என்று சொல்லிவிட்டார்கள். அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கப்போகிறது என்பதும் தி.மு.க. மேலிடத்துக்குச் சொல்லப்பட்டது. ஆனாலும் கருணாநிதி, காங்கிரஸை நிராகரிக்கத் தயாரானார். அந்த அளவுக்கு அவரது மனதை மாணவர் போராட்டம் பதறடித்தது.

''இந்த நேரத்துலயே இவ்வளவு எழுச்சியோட மாணவர்கள் போராட்டம் நடத்துறாங்கன்னா... தேர்தல் நேரத்துல இந்தப் பிரசாரம் இன்னும் அதிகமாகும். காங்கிரஸோடு சேர்ந்து போய் ஓட்டு கேட்கவே முடியாது'' என்று கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனிடம் கருணாநிதி சொல்லியிருக்கிறார். அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தாலும் காங்கிரஸுடனான உறவை வெட்டிக்கொள்வது என்று மார்ச் 18-ம் தேதி இரவு கருணாநிதி முடிவுக்கு வந்தார். அவரை அந்த இலக்கு நோக்கித் தள்ளுபவராக மு.க.ஸ்டாலினும் இருந்துள்ளார். அவரது நிழல்களான முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, வேலு போன்றவர்களும் இதனை வழிமொழிந்து பேச ஆரம்பித்தார்கள். ''ஸ்டாலின் சொல்லச் சொன்னாரா... நீங்களா சொல்றீங்களா?'' என்று அவர்களைக் கிண்டல் அடித்தபடி அந்த முடிவை ரசித்திருக்கிறார் கருணாநிதி. இப்படித் தான் ஒன்பது ஆண்டு கால காங்கிரஸ் - தி.மு.க. உறவு முடிவு யாரும் எதிர்பாராத ஒரு அசந்தர்ப் பத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது.

திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க.!

இந்த முடிவால் முதலில் அதிர்ச்சியடைந்தது அழகிரிதான். அவருக்கு இன்று இருக்கக்கூடிய ஒரே பாதுகாப்புக் கேடயம், மத்திய அமைச்சர் பதவிதான். தன் மீதும் தன் மகன் மீதும் அடுக்கடுக்கான வழக்குகளைப் பாய்ச்சி சிக்கவைக்கத் துடிக்கும் மாநில அரசாங்கத்தின் நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்கு அவர் நம்பிக்கொண்டு இருந்தது இந்த 'கேபினட்’ அந்தஸ்தைத்தான். தன் மீதும் சில வழக்கு நடவடிக்கைகள் பாயாமல் இருக்கக் காரணம், அந்த அமைச்சர் பதவிதான் என்று அழகிரி நினைத்தார். அதனையும், தன் 'தம்பி’ நைஸாக உருவிட்டாரே என்று பதறிப்போனார் அழகிரி. ''இப்ப ராஜினாமா செய்யுறது னால என்ன ஆகிடப்போகுது?'' என்று அவர் திரும்பத் திரும்பக் கேட்டது அதனால்தான். ஆனால், அழகிரியின் பேச்சைக் கேட்பதற்கும், அதனைக் கொண்டுபோய் கருணாநிதியிடம் சொல்வதற்கும் கட்சியில் இப்போது யாரும் இல்லை. அதனால், தனிமையில் புலம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை. ஆனால், டெல்லி மீடியாக்களிடம் ஒரு வதந்தியை மட்டும் அழகிரி ஆதரவாளர்கள் பரப்பினார்கள். 'மத்திய அமைச்சர்களான அழகிரியும் நெப்போலி யனும் நான்கு எம்.பி-க்களுடன் சேர்ந்து காங்கிரஸ் ஆதரவு முடிவை எடுக்கப்போகிறார்கள்’ என்பதுதான் அது. 'அப்படி எதுவும் நடப்பதற்கு முன் அழகிரியைக் கட்சியில் இருந்து நீக்கிவிடுவோம்’ என்று தமிழ்நாட்டில் இருந்து தகவல் சொல்லப்பட்டதாகவும் எதிர் அணி விவகாரம் பரப்பியது. எந்த ரிஸ்க்கும் எடுப்பதற்கு இப்போது தயாராக இல்லாததால் அழகிரி அமைதியாக ராஜினாமாவைக் கொடுக்கத் தயாரானார். 'இது எனக்கு உடன்பாடு இல்லாத முடிவு’ என்பதை மட்டும் தன்னுடைய எண்ணமாக பிரதமரிடம் அழகிரி சொல்லிவிட்டு வந்தார். சோனியாவைச் சந்தித்தபோதும் இதனையே சொன்னார். 'எப்போதும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பேன்’ என்றும் அவர் அவர்களிடம் சொல்லிவிட்டு வந்துள்ளார். ''எனக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இந்திய அரசியலில் உருவானபோது, எனக்கு ஆதரவாக முதன்முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதி. அவர் என்னி டம்கூடச் சொல்லாமல் கூட்டணியைவிட்டு விலகியதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது'' என்று  சோனியா, தன்னைச் சந்தித்த காங்கிரஸ் பிரமுகர்களிடம் சொல்லியிருக்கிறார். இதற்குக் காரணம், கருணாநிதியைப் போல இணக்கமான கூட்டணித் தலைவர் அவருக்கு தமிழகத்தில் கிடைக்க மாட்டார் என்பதால்தான்.

காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, சோனியாவையும் தனிப்பட்ட முறையில் வெறுக்கக்கூடியவராக ஜெயலலிதா இருப்பதை சோனியா உணர்ந்தே இருக்கிறார்.  

வீராப்பாக காங்கிரஸ் கூட்டணியைவிட்டு கருணாநிதி வெளியேறிவிட்டாலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள், கூட்டணிக் கைகோப்புகள் குறித்து அவராலும் தீர்க்கமான முடிவுக்கு இன்னும் வர முடியவில்லை.

திக்குத் தெரியாத காட்டில் தி.மு.க.!

இப்போதைக்கு கருணாநிதிக்கு இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன. ஒன்று, விஜயகாந்தைத் தனது அணிக்கு அழைத்துவருவது. அல்லது பாரதிய ஜனதாவுடன் கூட்டணிவைப்பது. 'காங்கிரஸ் நம்மைவிட்டு வெளியேறிய நிலையில், விஜயகாந்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். மேலும், அவர் இன்னமும் தி.மு.க-வை நேரம் கிடைக்கும்போதெல்லாம் விமர்சித்துவருகிறார்’ என்ற கவலையும் கருணாநிதிக்கு உண்டு. ஆனால், 'இறுதிக் கட்டத்தில் விஜயகாந்த் நிச்சயம் வருவார்’ என்பது ஸ்டாலினின் எண்ணம். டென்ஷனை எகிறவைப்பதில் கில்லாடியான விஜயகாந்த், தி.மு.க-வின் டெம்பரேச்சரை அதிகரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.  

''தி.மு.க-வுடன் சேருவது சரியான நிலைப்பாடு அல்ல. அப்படிச் செய்தால் இலங்கைப் பிரச்னைபற்றியோ, 2ஜி உள்ளிட்ட ஊழல்பற்றியோ நம்மால் பேச முடியாது'' என்றும் பி.ஜே.பி. தலைமைக்குச் சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர். தேர்தல் நெருக்கத் தில் தி.மு.க. மத்திய அமைச்சர்கள் மீது காங்கிரஸே புதிய ஊழல் பூதங்களைக் கிளப்பிவிடத் தயார் எனத் தகவல்கள் பரவுகின்றன. ''கொஞ்சம் அவசரப்பட்டு முடிவெடுத்துட்டோமோ?'' என்று தி.மு.க. தலைமையை யோசிக்கவைத்துள்ளது இத்தகைய வதந்திகள்.

மொத்தத்தில், யாருடன் கூட்டணி சேர்வது அல்லது யார் நம்முடன் வருவார்கள் என்ற குழப்பம் ஒரு பக்கம்... ஸ்டாலின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு தொடங்கி ஸ்பெக்ட்ரம் வழக்கின் ஜே.பி.சி. விசாரணை வரையிலான காங்கிரஸ் அரசின் இரும்புப் பிடி இன்னொரு பக்கம்... இவை அனைத்தும் சேர்ந்துதான் தி.மு.க-வை இப்போது திக்குத் தெரியாத காட்டில் நிறுத்தியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism