Published:Updated:

ஜெய்ஹோ... ஜெயா ஹோ!

தமிழீழம் முதல் கூடங்குளம் வரை...ப.திருமாவேலன், ஓவியம்: கண்ணா

ஜெய்ஹோ... ஜெயா ஹோ!

தமிழீழம் முதல் கூடங்குளம் வரை...ப.திருமாவேலன், ஓவியம்: கண்ணா

Published:Updated:
##~##

ண்ணாவின் ஞாபகம் அதிகமாக அம்மாவுக்கு வந்துள்ளது. 'நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு’ என்ற அண்ணாவின் வாசகத்தை 'கெயில்’ விவகாரத்தில் உதாரணம் காட்டினார். 'தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும்  சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இருக்காமல் - உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை’ என்று 'ஈழத் தமிழர்’ தீர்மானத்தில் சொன்னார். இது வரை தன் வழி யில் போய்க்கொண்டு இருந்த ஜெயலலிதா, இப்போதுதான் அண்ணா வழிக்கு வந்துள்ளார். இதற்கு நாடாளுமன்றத் தேர்தல்தான் மிக முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. 'நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு வைத்தவர், அதற்கான ஃபார்முலாவை இப்போது செயல்படுத்த ஆரம் பித்துவிட்டார். குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமாக, லட்சக்கணக்கான பொதுமக்களைத் தன்னுடைய கட்சியின் பக்கமாகத் திருப்புவதுதான் அது!

அவரது முதலாவது திட்டம், கருணாநிதி எதில் அதிகப்படியான கெட்ட பெயரை வாங்கினாரோ... அதில் நல்ல பெயர் எடுப்பதுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட்டு கருணாநிதி அதிரடி குட்டிக்கரணம் போட்டாலும், அவர் மீது நம்பிக்கைவைக்க இன்னும் பல காலம் ஆகும். 'கூட்டணியைவிட்டு விலகினாலும் என்றும் எங்கள் நிலைப்பாடு இதுதான்!’ என்று நித்தமும் சொல்ல வேண்டிய அரசியல் நெருக்கடியில் இருக்கிறார் கருணாநிதி. மற்ற கட்சிக்காரர்களுக்குத் தர வேண்டிய விளக்க மாக இல்லாமல், சொந்தக் கட்சிக்காரர் களுக்கும் சொல்லியாக வேண்டுமே. தமிழ் ஈழம், இலங்கை விவகாரம் என்பது, 'இந்த நெடுமாறனுக்கும் வைகோவுக்கும் வேற வேலை இல்லைய்யா’ என்ற அலட்சிய விஷயமாக இருந்த காலம் மாறி, இன்று அனைத்து மக்களையும் வீதியில் இறங்கிப் போராடத் தூண்டும் அரசியல் அம்சமாக மாறிவிட்டது. மாணவர்கள் போராட்டத்தில் இறங்க... ஊர் ஊராகப் பொதுமக்களும் உண்ணாவிரதம் இருக்கும் நிதர்சனத்தைக் 'கண் கெட்ட பிறகு உணர்ந்துகொண்டார்’ கருணாநிதி.

ஜெய்ஹோ... ஜெயா ஹோ!

ஈழ விவகாரம் இப்போது சற்றே அடங்கிஇருப்பதுபோலத் தோன்றினாலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் மறு பிரளயத்தை உருவாக்கும். 2014-ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தால், மார்ச் தேர்வை முடித்துவிட்டு மாணவர்களும் களத்தில் குதிப்பார்கள். காங்கிர ஸுக்கும் தி.மு.க-வுக்கும் இது பலத்த நெருக்கடி யைக் கொண்டுவர இருக்கிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்த ஜெயலலிதா, தன்னை ஈழத் தாய் அவதாரத்தில் பொருத்திக்கொள்ளத் திட்டமிட்டுவிட்டார்.

இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகளப் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த முடியாது என்பதே அவரது முதல் அறிவிப்பு. இதனை அவரது அரசியல் ஆலோசகர்களே விரும்பவில்லை. ஆனாலும், அதனைப் பற்றி ஜெயலலிதா கவலைப் படவில்லை. 'சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதி இல்லை’ என்று பிரகடனம் செய்தார். 'தமிழ்நாட்டில் நடக்கும் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், இதர அதிகாரிகள், பணியாளர்கள் யாருமே பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். போட்டி அமைப்பாளர்கள் உறுதிமொழி அளித்தால் மட்டுமே போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதிக்கும்’ என்று துணிச்சலாக அறிவித்தார்.

இலங்கையில் நவம்பர் 15-ம் தேதி காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடக்க இருக்கிறது. அதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று பிரதமருக்கு அவர் எழுதிய கடிதம் இலங்கைக்கு அடுத்த அச்சுறுத்தலாக அமைந்தது. 'கொழும்பில் இந்த மாநாட்டை நடத்துவது இலங்கை நடத்திய இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அவர்களை ஆதரிப்பதுபோல் ஆகும்’ என்று சரியான காரணத்தைச் சொன்னார். 'மாற்று இடத்தில் அந்த மாநாட்டை நடத்துங்கள். இல்லையென்றால், இந்தியா அதில் கலந்து கொள்ளக் கூடாது’ என்பது அவரது நிலைப்பாடாக அமைந்தது. அடுத்தாக, கச்சத் தீவு விஷயத்தைக் கையில் எடுத்தார்.

'கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கிய உடன் படிக்கையை இந்தியா உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் சென்று உரிமையை நிலைநாட்டியதுபோலச் செய்வேன்’ என்று அறிவித்தார். இவை ஒவ்வொன்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடைஞ்சலையும் தமிழ் அமைப்புகளுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தன. இவை அனைத்தையும் தாண்டி, 'தனி ஈழம்குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தார். 'இலங்கை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்பதையும் சேர்த்துக் கொண்டுவரப் பட்ட தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதேபோன்ற தீர்மானத்தை அவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே போட்டார். இப்போது இரண்டாவது முறையாகக் கொண்டுவந்திருக்கிறார். இத்தகைய தீர்மானம் கொண்டுவர வேண்டியதற்கான அவசர அவசியம் இப்போதுதான் அதிகமாக இருக்கிறது. 'மொத்தத் தில், ஒரு இனவெறி அரசு இலங்கையில் கோலோச்சிக்கொண்டு இருக்கிறது’ என்று சொன்ன ஜெயலலிதா, தமிழகத்தில் நடந்துவரும் மாணவர் போராட்டங்களை வெளிப்படையாக ஆதரித்தார்.

ஜெய்ஹோ... ஜெயா ஹோ!

இதுவரை எத்தனை ஊர்களில் போராட்டம் நடந்துள்ளது என்பதையும் எத்தனை கல்லூரிகள் பங்கேற்றன என்பதையும் பட்டியலிட்ட அவர், 'இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக எனது தலைமை யிலான அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் விதமாகத்தான் மாணவர்களின் போராட்டம் அமைந்துள்ளது!’ என்று மாணவர் களின் மனநிலையோடு தன்னைப் பொருத்திக் கொண்டார். மொத்தத்தில், கருணாநிதி தன் ஆட்சிக் காலத்தில் செய்யத் தவறியதை, ஜெயலலிதா செய்கிறார்.

இதே ஜெயலலிதாதான் 'விடுதலைப் புலிகள் அமைப்பு என்னால்தான் தடை செய்யப்பட்டது’ என்றும் 'பிரபா கரனைக் கைதுசெய்து இந்தியாவில் ஒப்படைக்க வேண்டும்’ என்றும் முந்தைய காலங்களில் பேசியவர். 'போர் என்று நடந்தால், அப்பாவி மக்கள் பலியாகத்தான் செய்வார்கள்’ என்று அலட்சியப்படுத்தியவர்தான். ஆனால், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகத் தனது நிலைப்பாட்டை முழுமையாக மாற்றினார். கருணாநிதிக்கு எதிரான கோபத்தைத் தனக்கு ஆதரவாகத் திருப்பும் அரசியல் உள் நோக்கம் அதற்குள் இருக்கலாம். ஆனால், அதே அரசியல் ஆதாயத்துக்காக கருணாநிதி ஏன் இப்படி நடந்துகொள்ளவில்லை? 'போர் நடந்தால் அப்பாவி மக்கள் பலியாகத்தான் செய்வார்கள்’ என்று ஜெயலலிதா சொன்னபோது, அவர் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. 'இலங்கையில் இனவெறி ஆட்சி நடக்கிறது’ என்று இப்போது சொல்லும்போது, அவர் தமிழக முதல்வராக இருக்கிறார். இந்தப் பதவியில் இருந்துகொண்டு அவர் என்ன சொல்கிறார், எதை நோக்கிச் செயல்படுகிறார் என்பதே முக்கியம்.

இதுவும் போக, இன்னும் சில அஸ்திரங்களும் இப்போது ஜெயலலிதா வசம். ஜெயலலிதாதான் காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்றுத் தந்தவர் என்பது தஞ்சை டெல்டா மாவட்டத்து விவசாய மக்களின் அசைக்க முடியாத எண்ணமாகி விட்டது. காவிரி ஆணையத்தின் தீர்ப்பு வந்த பிறகும், அதனை மத்திய அரசிதழில் வெளியிடா மல் கிடப்பில் போட்டிருந்த நிலையை மாற்றி, உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று சட்டப் போராட்டத்தின் மூலமாக அதனை வெளியிடவைத்தார் ஜெயலலிதா. கர்நாடகம் இதனைப் பின்பற்றத் தவறினால் அது இனி சட்ட மீறலாக மாறும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காவிரியைப் போல அவர் எடுத்த அதிரடி முடிவு, கெயில். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து திரவ எரிவாயுவைக் குழாய் வழியாக பெங்களூர் வரை கொண்டுசெல்லும் திட்டத்தால்.. தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டத்து விவசாய மக்கள் பாதிக்கப்பட்டார்கள். விவசாய நிலங்களின் ஊடே 310 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு கொண்டுசெல்லக் குழாய்கள் பதிக்கப்பட இருந்தன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமாக, 134 கிராமத்து மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த மாவட்டத்து மக்கள் அனைவரையும் சென்னைக்கு வரவழைத்து தலைமைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன முதல்வர், அவர்களது கோரிக்கையை ஏற்று திட்டத்துக்குத் தடை போட்டார். 'விவசாயிகளின் வீழ்ச்சியில் தொழில் வளர்ச்சி ஏற்படுவதை நியாய உணர்வுகொண்ட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தது, அந்த ஏழு மாவட்ட மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேபோல், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக அவர் எடுத்த முடிவு தென் மாவட்ட சரித்திரத்தில் ஒரு திருப்பம். இந்த ஆலைக்கு அனுமதி கொடுத்தது முதல் உச்ச நீதிமன்றத்தில் இந்த ஆலைக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்தது வரை எதிர்மறையாக இருந்தாலும், கடந்த 23-ம் தேதி கந்தக டை ஆக்ஸைடு கசிவு காரணமாக, கண் எரிச்சல், மூச்சுத்திணறல், இருமல் ஆகியவை அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. இது தெரிந்ததும் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பைத் துண்டிக்கச் சொன்ன ஜெயலலிதா, ஆலையின் இயக்கத்தை முழுமையாக நிறுத்தவும் உத்தரவிட்டார். கடந்த 15 வருடப் போராட்டத்துக்கு இது புத்துணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோன்ற ஒரு நடவடிக்கைக்காகவே கூடங்குளம் மக்களுக்கும் காத்திருக்கிறார்கள். 'ஓர் அணு உலைக்குச் செய்ய வேண்டிய 17 விதமான பாதுகாப்பு ஏற்பாடு களையும் செய்துவிட்டு இந்த விஷயத்தில் முடிவெடுங்கள்’ என்று மத்திய அரசாங்கத்துக்கு ஜெயலலிதா கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூடங்குளம் போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளார்கள். இத்தகைய அறிக்கை ஜெயலலிதாவிடம் இருந்து வெகு சீக்கிரமே வரலாம். அப்படி வந்தால், அது இன்னோர் இன்ப அதிர்ச்சியையும் தென் தமிழகத்துக்குக் கொடுக்கும்.

'ஹலோ..!’ சொல்லும் நெருக்கத்தில் தேர்தல் நெருங்கி வரவர... 'டெல்லி சலோ’ செல்வதற்கான காய்களை ஒவ்வொன்றாக ஜெயலலிதா நகர்த்த ஆரம்பித்துள்ளார். இடையில், பெரிய கெட்ட பெயரை அவரே உருவாக்கிக்கொள்ளாமல் இருந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் 'ஜெய்ஹோ ஜெயா ஹோ’தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism