பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கே.வெங்கட், விழுப்புரம்-2.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

மலாலா எப்படி இருக்கிறார்?

பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவித்த 'குற்றத்துக்காக’ தலிபான்​களான் துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்​பட்டவர் மலாலா. உயி​ருக்கு ஆபத்தான நிலையில் லண்டனுக்குக் கொண்டு​செல்லப்பட்ட அவர் இப்போது நலம் பெற்று, பிரிட்டன் பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் படித்து வருகிறார். அவர் எழுத இருக்கும் புத்தகத்தை 15 கோடி கொடுத்து ஒரு பதிப்பகம் காப்புரிமை பெற்றுள்ள​தாகச் செய்தி வெளியாகி உள்ளது. மலாலா, இனி பாகிஸ்தானி அல்ல. உலகக் குழந்தை!

 இ.சிகாமணி, அத்தனூர்.

கழுகார் பதில்கள்!

டால்ஸ்டாய் - மகாத்மா காந்தி ஒப்பிடுக!

ரஸ்கின், தோரோ, டால்ஸ்டாய் ஆகிய மூவரைத் தனது ஆசான்களாக காந்தி ஏற்றுக்கொண்டார். ரஸ்கின் எழுதிய 'கடையனுக்குக் கடைத்தேற்றம்’ என்ற புத்தகம், மனிதர்கள் மீது சொத்து அதிகாரம் செலுத்துகிறது என்ற எண்ணத்தை காந்தியின் மனதில் விதைத்து அவரைப் பற்றற்றவராக மாற்றியது. ஹென்றி தோரோ எழுதிய, 'சிவில் ஒத்துழையாமை’ என்ற புத்தகம், நியாயமற்ற சட்டத்தைப் புறக்கணிக்கவும் தாங்க முடியாதக் கொடுமை செய்யும் அரசுடன் ஒத்துழைக்க மறுக்கவும் காந்தியைத் தூண்டியது.

டால்ஸ்டாய் எழுதிய, 'கடவுளின் ராஜ்யம் உங்​களுக்குள் இருக்கிறது’ என்ற புத்தகம்தான் காந்தி என்ற உன்னதமான மனிதப் பிம்பத்தை உருவாக்கியது. நீதிக்கோட்பாடுகளை அன்றாட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று டால்ஸ்டாய் சொன்னதை, காந்தி பின்பற்றினார். அகிம்சை, கல்வி, உணவுப் பழக்கம், தொழில்மயம் ஆகியவற்றில் ஒருவரும் ஒரே கருத்தைப் பிரதிபலித்தார்கள். அதனால், தான் உருவாக்கிய குடியிருப்புக்கு 'டால்ஸ்டாய் பண்ணை’ என்றே காந்தி பெயர் சூட்டினார். அதே அளவுக்கு காந்தி மீது  டால்ஸ்டாயும் மரியாதை வைத்திருந்தார்.

 த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

கழுகார் பதில்கள்!

மேடைப் பேச்சுக்கு அன்று தொண்டர்கள் மயங்கினார்கள். இன்று..?

வேடிக்கை பார்க்கிறார்கள்!

 எஸ்.ராமசாமி, குட்டைதயிர்பாளையம்.

கழுகார் பதில்கள்!

'நேருவுக்குப் பதிலாக வல்லபபாய் படேல் பிரதமர் ஆகியிருந்தால், நாடு இன்றைய மோசமான நிலைமையை சந்தித்து இருக்காது’ என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளது ஏற்புடையதா?

##~##

இது பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படுவது. இந்தியாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மனிதர்களாக நான்கு பேரைத்தான் பிரிட்டிஷ் அரசு நினைத்தது. காந்தி, ஜின்னா, நேரு, படேல் ஆகியோர்தான் அவர்கள். ஜின்னா, பிரிந்துவிட்டார். காந்தி, இறந்துவிட்டார். மீதம் இருந்தவர்கள் நேருவும் படேலும். தனக்குப் பின்னால் நேருவே வரவேண்டும் என்பதில் காந்தி உறுதியாக இருந்தார். எப்போதும் தன் காலடியில் வந்து உட்காருபவராக நேரு இருந்தாலும், சொந்தக் கருத்துகொண்டவராக அவர் இருந்ததால் காந்தி அப்படி நினைத்தார். படேலின் இறுக்கமான சுபாவத்தை காந்தி விரும்பவில்லை. ஆனால் நேருவுக்கு துணையாகப் படேல் இருக்கவேண்டும் என்று நினைத்தார். பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் படேல்... என்று அதிகாரம் பொருந்திய நாற்காலியில் இருவரும் அமர்ந்ததால், இருவருக்குள்ளும் தொடர்ந்து பிரச்னை. வெளிப்படையாகவே மோதல் உருவானது. காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்களை உள்துறை சரியாகக் கண்காணித்திருந்தால் இந்தக் கொலையே நடந்திருக்காது என்று நேரு ஆதரவாளர்கள் சொன்னதும், படேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மரணத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொண்டுவந்ததற்கும் இந்தக் குற்றச்சாட்டுதான் காரணம். சுதந்திரம் அடைந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முடிந்துபோனது படேலின் வாழ்க்கை. 14 ஆண்டுகள் தொடர்ந்தது நேருவின் வாழ்க்கை.  

சோசலிசத்தை வலியுறுத்தினார் நேரு. கேபிடலிசம், படேலின் பாணியாக இருந்தது. இரண்டுமே நடைமுறையில் ஒன்றான காலகட்டத்தில் இந்த ஒப்பீடு அவசியம் அற்றது. ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். நேருவுக்கு செயலாளராக இந்திரா இருந்ததுபோல படேலுக்கு அவர் மகள் மனிபென் ஒருவேளை வந்திருக்கலாம்.

கழுகார் பதில்கள்!

பா.சு.மணிவண்ணன், திருப்பூர்-4.

கழுகார் பதில்கள்!

காங்கிரஸில் ப.சிதம்பரத்தின் கை உயர்ந்துவிட்டது போலத் தெரிகிறதே?

காங்கிரஸ் மேலிடத்தில் அவர் கை உயர்ந்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அப்படிச் சொல்ல முடியாது. மத்திய நிதிநிலை அறிக்கையை விளக்கி ஒரு கூட்டம்கூட இங்கே தைரியமாக நடத்த முடியாத அளவுக்கு பீதி கிளம்பி உள்ளது.

 கே.வெங்கட், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்!

அரசியல்வாதிகள் மட்டும்தான் பொது வாழ்க்கையில் இருப்பவர்களா?

தன் குடும்பம் தாண்டிச் சிந்திப்பவர்கள் அனைவரும் பொது வாழ்க்கையில் இருப்பவர்​கள்தான்.

 நாசரேத் விஜய், கோவை-6.

கழுகார் பதில்கள்!

'எனக்கு தெலுங்கு தெரியாது. தமிழ் பேசி தமிழில் எழுதி தமிழனாகவே வாழ்கிறேன். தமிழ் உணர்வால் உந்தப்பட்டு தமிழ் தேசிய இயக்கங்களுக்குள் வந்தேன். ஆனால் சில நேரங்களில் தமிழ் தேசியம் பேசுபவர்களின் பேச்சால் நான் தெலுங்கனோ என்ற உணர்வு எழுகிறது. என் அடையாளத்தைத் தேட வேண்டுமோ என்று நினைக்கிறேன்’ - இப்படி கேட்கும் எனது நண்பனுக்கு என்ன பதில்?

பச்சைத்தமிழராக இருந்துகொண்டு இனத்து​ரோகம் செய்வதைவிட, தெலுங்கராய் இருந்து தமிழ்ப் பாசத்துடன் இருப்பது மேலானது. இனம், மொழி, மத, சாதி அபிமானத்தைவிட மனிதாபிமானம்தான் முக்கியமானது.

 முத்தூஸ், தொண்டி.

கழுகார் பதில்கள்!

அரசியல்வாதிகளின் பொழுதுபோக்கு என்ன?

பதவிக்காகத் தவம் இருப்பதுதான்!

 ஆ.பாரதி சங்கர், சங்கரன்கோவில்.

கழுகார் பதில்கள்!

தனி ஈழம் அமைய வேண்டும், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்று நடக்காத விஷயங்களுக்காக விடா முயற்சியாக வைகோ போராடி வருகிறாரே?

நம்பிக்கைதானே வாழ்க்கை? ஊதும் சங்கை ஊதிவைப்​போம் என்று அவர் நினைத்திருக்​கலாம்.

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

அரசியல் நேர்மை என்பது இன்றைக்கும் இருக்கிறதா?

இருக்கிறது... யார் கண்ணுக்கும் தெரியாத அளவுக்கு மிகமிகச் சிறிய அளவாய்!

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு