Published:Updated:

அரசியலுக்கு வரும் அணு உலை எதிர்ப்பாளர்கள்!

அச்சத்தில் அரசியல் கட்சிகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கூடங்குளம் அணு உலையில் இறுதிக் கட்ட சோதனைகள் நடந்துவரும் சூழலில், தங்களுக்கு எதிராகச் செயல்​பட்ட கட்சிகளுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிலடி கொடுக்க அணு உலை எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுவருகிறார்கள். இதனை அறிந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டக் குழுவினரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. 

போராட்டக் குழுவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் முதல் கட்சியாக தி.மு.க. களம் இறங்கி​யுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் சிலர் இடிந்தகரை கிராமத்துக்குச் சென்று போராட்டக் குழு நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். 'இந்தப் போராட்டம் பற்றியும் இதன் நிர்வாகி​கள் பற்றியும் கருணாநிதி அதிக அக்கறை காட்டு​கிறார். உங்களுக்கு உதவ தி.மு.க. எப்போதும் தயாராக இருக்கிறது’ என்று பேசி, அவர்களின் ஆதரவைப் பெற முயற்சிசெய்துள்ளனர். போராட்டக் குழுவினரோ, 'ஆபத்தான கட்சிகள் என்கிற பட்டியலில் தி.மு.க-வையும் நாங்கள் வைத்திருக்கிறோம். நட்பு ரீதியில் நீங்கள் வந்து செல்லத் தடை இல்லை. ஆனால், உங்களை எங்களோடு சேர்த்துக்கொள்ள மாட்டோம்’ என்று கறாராகச் சொல்லவும் ஆடிப்போனார்களாம்.

அரசியலுக்கு வரும் அணு உலை எதிர்ப்பாளர்கள்!

அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டார மக்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞரான ஐ.எஸ்.இன்பதுரை இறங்கியிருக்கிறார். அரசியல் கட்சிகளின் இந்த நெருக்கடியில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக, தங்களுக்கு ஆதரவான கருத்துள்ள அமைப்புகளை ஒன்றுசேர்க்கும் முயற்சி நடக்கிறது

இதுபற்றி போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப.உதயகுமாரனிடம் பேசினோம். ''எங்கள் போராட்டத்தைத் திசைதிருப்பி வன்முறையைத் தூண்ட போலீஸ் முயற்சிக்கிறது. சமீபத்தில் அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் கூட்டப்புளி கிராமத்துக்குள் நுழைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். பள்ளிக்கூடம் நடந்துகொண்டு இருந்த நேரத்தில் பள்ளியின் விளையாட்டு மைதானத்துக்குள் இந்த அணிவகுப்பை நடத்தியதோடு, அங்கிருந்த மாணவர்களை அடித்து விரட்டி இருக்கிறார்கள். பின்னர் பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளையும் வீசியிருக்கிறார்கள். இப்படி எங்களுக்கு எதிராக காவல் துறை தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறது.

கூடங்குளம் அணு உலை பற்றி அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்கள். அணு உலையின் பாதுகாப்பைப் பற்றியோ மக்களின் உயிரைப் பற்றியோ கவலைப்படாமல் செயல்படுவதால், சில தகவல்களைக் கேட்டாலும்கூட அதனைத் தெரிவிக்க மறுக்கிறார்கள். இந்த அணு உலையை செயல்படுத்துவது குறித்த கால அவகாசத்தை அதிகாரிகள் தள்ளிக்கொண்டே செல்வதற்குக் காரணம் என்ன? இந்த அணு உலை பாதுகாப்பானதுதானா என்பதை அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும். இதை எந்த அரசியல்வாதியும் ஏன் கேட்பது இல்லை என்பது புரியவில்லை.

அரசியலுக்கு வரும் அணு உலை எதிர்ப்பாளர்கள்!

எங்களைப் பொறுத்தவரை போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தப்போகிறோம். அதன்படி, தேர்தலில் போட்டியிடாத சிறிய கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற்சங்கத்தினர், மகளிர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், விவசாய சங்கத்தினர் என அர்ப்பணிப்புடன் போராடும் மக்களை ஒன்றுசேர்த்து, நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியல் கட்சிகளுக்குப் பாடம் புகட்ட இருக்கிறோம். அதற்காக எப்படி செயல்படுவது என்பது பற்றியும் எதிர்காலத் திட்டம் குறித்தும் வரும் 7-ம் தேதி விவாதித்து முடிவுசெய்வோம்'' என்று படபடத்தார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் திட்ட இயக்குநரான ஆர்.எஸ்.சுந்தரிடம் பேசினோம். ''கூடங்குளம் முதல் அணு உலையில் அழுத்தம் மற்றும் வெப்பத்தைப் பரிசோதிக்கும் இறுதிக் கட்ட சோதனை நடக்கிறது. குக்கரில் தண்ணீரைக் கொதிக்கவைத்தால் அதில் இருந்து நீராவி மேல் இருக்கும் மூடி வழியாக வருவதைப் போன்று, அணு உலையில் வருகிறது; சிறிது சத்தமும் வருகிறது. இதனை சிலர் தவறாக சித்திரித்து, வதந்தியைப் பரப்பி மக்களை பீதியடையவைக்கிறார்கள். கரும்புகை கண் எரிச்சலை ஏற்படுத்துவதாகச் சொல்லி மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்தச் சோதனை நடக்கும்போது நான் உள்பட எங்கள் ஊழியர்கள் எல்லோரும் உள்ளேதான் இருக்கிறோம். அதனால், பொதுமக்கள் அச்சமடையத் தேவை இல்லை. இந்த இறுதிக் கட்ட சோதனை முடிந்ததும், அதன் அறிக்கையை அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்துக்கு அனுப்புவோம். அவர்கள் ஒப்புதல் அளித்ததும் முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும்'' என்றார் நிதானமாக.

அணு உலை அரசியல் அதிகமாகவே கொதிக்கிறது!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன், பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு