Published:Updated:

மிஸ்டர் கழுகு: பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!

மிஸ்டர் கழுகு: பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!
##~##

ழுகார் உள்ளே நுழைந்ததும், ''காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைச் சுற்றிலும் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களைப் பார்த்தீரா?'' என்று கேட்டார். ஆம் என்பது மாதிரி தலையாட்டினோம். 

''ஈழத் தமிழர் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் ஒரு வெடிப்பை உருவாக்கக் காத்திருக்கிறது என்பதன் அடையாளம்தான் அது. 'இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையும் மத்திய அரசும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது’ என்று அந்தக் கட்சிக்குள்ளேயே பலர் நினைக்கின்றனர். இந்த அணிக்குத் தலைமை தாங்குபவராக ஜி.கே.வாசன் இருக்கிறார். அவரைச் சந்திக்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் தங்கள் வருத்தங்களைப் பதிவுசெய்யத் தொடங்கியுள்ளனர். இதன் எதிரொலியாக கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், 'காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன்வெல்த் நாடுகள் ஆலோசித்து மாற்று இடத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இலங்கையை அழைத்துக் கண்டிக்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தமிழகத்தில் போராடும் மாணவர்களின் உணர்வை நான் மதிக்கிறேன்’ என்று ஜி.கே.வாசன் சொன்னது மத்திய அரசை அதிரவைத்தது. டெல்லியில் இருந்து அவருக்கு தொடர்ந்து போன் வர ஆரம்பித்தது.''

''ம்!''

''அதற்கு மறுநாள் நிருபர்களைத் தற்செயலாகச் சந்தித்த ஜி.கே.வாசன், அதனை மறுபடியும் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் டெல்லி கிளம்பிச் சென்ற அவர், கடந்த 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை பிரதமரைச் சந்தித்தார். கையோடு ஒரு கடிதத்தை எடுத்துச் சென்றார் வாசன். அவர் கொடுத்த கடிதத்தைப் படிக்கப் படிக்க, பிரதமரின் முகம் கடுகடுவென மாறியிருக்கிறது. 'இலங்கை அரசின் நிலைப்பாடு மாறுவதாகத் தெரியவில்லை. எனவே, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. அங்கேதான் நடக்கும் என்று சொன்னால், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது’ என்று ஜி.கே.வாசன் சொன்னதும், 'இது இந்தியாவின் ராஜதந்திர நிலைப்பாடு சம்பந்தப்பட்டது. எனவே, நாம் நினைத்த மாதிரி எல்லாம் செயல்பட முடியாது’ என்றாராம் பிரதமர். 'மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறவில்லை என்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸைக் காப்பாற்ற முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் செயல்படுவதாகக் காட்ட இத்தகைய நடவடிக்கை அவசியம்’ என்று ஜி.கே.வாசன் சொல்ல, 'டிப்ளமேட் விஷயம் அது’ என்று மறுபடியும் சொல்லியிருக்கிறார் பிரதமர். 'கேரள மீனவர்கள் இருவர் தாக்கப்பட்டபோது மட்டும் நம்முடைய அரசு தீர்க்கமாகச் செயல்பட்டது. அருகருகே இருக்கும் இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில், இப்படி வித்தியாசமாக நடப்பது சரியா?’ என்று ஜி.கே.வாசன் கேட்க, 'உங்களது கேள்வியில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது’ என்றாராம் பிரதமர்.''

''அந்தளவுக்கு விவாதம் போனதா?''

மிஸ்டர் கழுகு: பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!

''இன்னும் சூடாய் ஆகி இருக்கிறது. 'இலங்கையில் நடக்கும் மாநாட்டுக்கு நாம் போகாமல் இருந்தாலாவது நம் மீதான விமர்சனங்களைத் தவிர்க்கலாம்’ என்று ஜி.கே.வாசன் சொல்ல, அதனை பிரதமர் மறுக்க... 'அப்படியானால் கொழும்பில் உங்களுக்குத் தமிழர்கள் கறுப்புக் கொடி காட்டினால், நம்முடைய நாட்டுக்குத்தானே அவமானம்’ என்று இவர் சீற... என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் உட்கார்ந்துவிட்டாராம் பிரதமர். சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். 'தமிழ்நாட்டு மீனவர்களுக்காவது நடவடிக்கை எடுக்கக் கூடாதா? தினமும் அடிக்கிறார்கள்... தினமும் கொல்கிறார்கள்’ என்று வாசன் சொன்னபோது, 'அதுபற்றி கவனிக்கிறேன்’ என்றாராம் பிரதமர். 'இந்திய அரசின் சார்பில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளோம். அதனைத் தமிழர் மறுவாழ்வுக்குச் செலவுசெய்தார்களா எனத் தெரியவில்லை. அதுபற்றி நாம் ஒரு குழு அமைத்து ஆய்வுசெய்ய வேண்டும்’ என்று சொன்னதற்கு, 'கவனிக்கிறேன்’ என்றாராம் பிரதமர். இறுக்கமான முகத்துடன்தான் இருவரும் விடை பெற்றுள்ளார்கள். இது ரகசியச் சந்திப்பாக முடிந்துவிடும் என்றுதான் பிரதமர் நினைத்துள்ளார். ஆனால், வெளியில் வந்த ஜி.கே.வாசன் நிருபர்களை அழைத்து, பிரதமரிடம் தான் இப்படி ஒரு கடிதம் கொடுத்துவிட்டதாகச் சொல்லி டெல்லி மீடியாக்களை பரபரப்பாக்கினார்.''

மிஸ்டர் கழுகு: பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!

''இதெல்லாம் மேலிடத்துக்குப் பிடிக்காதே?''

''அடுத்த அரை மணி நேரத்தில் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், ஜி.கே.வாசனின் லைனுக்கு வந்துவிட்டாராம். பிரதமரிடம் கோரிக்கை வைத்தது பற்றியும் அதை மீடியாக்களிடம் சொன்னது பற்றியும், அகமது படேல் கடுமையாகக் கண்டித்தாராம். 'தமிழ்நாட்டு மக்களின் உணர்வில் என்ன இருக்கிறதோ, அதனைத்தான் நான் எதிரொலித்தேன். நம்முடைய நிலைப்பாடுகளை மாற்றாவிட்டால், தமிழ்நாட்டில் காங்கிரஸால் அரசியல் செய்ய முடியாது’ என்ற அர்த்தத்தில் தன்னுடைய கருத்தை இவர் சொல்லிவிட்டாராம். இந்த விஷயத்தை காங்கிரஸ் சீரியஸாகப் பார்க்கிறது.''

'ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் நிலைப்பாடு மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?''

''இல்லை. 'இன்றைய நிலையில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்றே தெரியவில்லை. தனித்துப் போட்டியிட்டால், ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியாது என்பதால்தான், ஜி.கே.வாசன் இத்தகைய முடிவு எடுத்துவிட்டார்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.''

''மீண்டும் த.மா.கா. என்று போஸ்டர் ஒட்டியவரை கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்​களே?''

''இப்போது அப்படித்தான் செய்வார்கள். தேர்தல் நெருக்கத்தில்தான் தெரியும்'' என்று சஸ்பென்ஸ் வைத்த கழுகார், சிறிது இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.  

''சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய கார் ரெய்டு படலம், ஸ்டாலின் வீட்டுக்குள் போனதால், அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. வெளிநாட்டு சொகுசு கார் விவகாரத்தில் முக்கிய புரோக்கராக இருக்கும் அலெக்ஸ் ஜோசப் பற்றி நான் ஏற்கெனவே உமக்குச் சொல்லி இருந்தேன். 'அவரைப் பிடித்தால்தான் இந்த வழக்கு அடுத்தக் கட்டத்தை எட்ட முடியும்’ என்று காத்திருந்தனர். புதன் அன்று அலெக்ஸை சி.பி.ஐ. அதிகாரிகள் கஸ்டடிக்குள் கொண்டுவந்துவிட்டதாகச் செய்தி கசிகிறது. போரூர் ஏரியாவில் அலெக்ஸுக்கு தனி கெஸ்ட் ஹவுஸ் உண்டு. தி.நகரில் ஒரு வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்துசெல்வது வழக்கம். இங்கெல்லாம் தேடிப்பார்த்தும் அலெக்ஸ் பற்றி துப்பு கிடைக்கவில்லை. கடைசியில், 'சென்னையில் குடியிருக்கும் டெல்லி வி.வி.ஐ.பி-யின் வாரிசைக் கேட்டாலே விவரம் தெரியுமே?' என்று போன் கால் சி.பி.ஐ-க்கு வர... நிமிர்ந்து உட்கார்ந்தனர். இந்த ரூட்டில் போய் யாருக்கோ செக் வைக்க... 'டக்'கென்று வந்து நின்றாராம் அலெக்ஸ். ஆனால், அவர் மீது  சொகுசு கார் வரி ஏய்ப்பு தொடர்பான பிரிவுகளில் வழக்கு போடாமல், வேறு ஏதேதோ பிரிவுகளில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருப்பதை அலெக்ஸின் வக்கீல்கள் சுட்டிக்காட்டி வாதாடப்

போகிறார்களாம்.''  

''அப்புறம்?''

''சொகுசு கார் வைத்திருந்தவர்களின் வீடுகளுக்கு சி.பி.ஐ. ரெய்டு போனபோது, சம்பந்தம் இல்லாமல் ஒரு வி.ஐ.பி-யின் மகன் தொடர்பான வண்டவாளங்கள் அதிகாரிகளுக்குத் தெரியவந்ததாம். தமிழகத்தில் மதுபான பிசினஸ் லிங்க் உள்ளவர் அந்த வி.ஐ.பி-யின்  வாரிசு. இவரின் நம்பர் டூ பிசினஸுக்கென்று சிங்கப்பூரிலும் ஒரு ஆபீஸ் உண்டு. இவரும் தமிழகக் கோட்டைப் பிரதிநிதி ஒருவரின் வாரிசும் அடிக்கடி சிங்கப்பூருக்கு டிரிப் அடிப்பது பற்றிய தகவல்கள் ரெய்டின்போது கிடைத்தாம். இரண்டு வாரிசுகளும் இந்தோனேஷியாவில் நிலக்கரி சுரங்கங்கள் நடத்துவதாக தகவல். அதை கிராஸ் செக் செய்வதில் தீவிரமாகி இருக்கிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது குறைவான சரக்குகளுக்கு ஆர்டர் பெற்று வந்த வி.ஐ.பி. வாரிசு, அ.தி.மு.க. ஆட்சியில் இப்போது அதிகமான சரக்குகளுக்கு ஆர்டர்களைப் பெற்றதும் இந்த நட்புரீதியில்தானாம். இதற்கெல்லாம் கூட செக் வைத்திருக்கிறது சி.பி.ஐ.'' என்று சொல்லிவிட்டு அடுத்த சப்ஜெக்ட் தாவினார் கழுகார்.

''கொங்கு மண்டலத்துக் கிசுகிசு இது. சமீபத்தில் ஈரோட்டில் ஸ்டீல் ரவி என்கிற பிரபல ரௌடி படுகொலையானார். அந்த விவகாரத்தின் சிக்கிய அருண் பிரசாத் என்பவரின் செல்போன் எண்ணுடன் யார் யார் பேசினார்கள் என்று செக் செய்த உயர் போலீஸ் அதிகாரிகள் கிடுகிடுத்துப்

போயிருக்கிறார்கள்.''

''ஏன்? அதில் என்ன இருந்தது?''

''கொலை நடந்த நேரத்துக்கு முன்பு - பின்பு 29 முறை அருண் பிரசாத்துடன் ஒரு போலீஸ் அதிகாரி பேசி இருக்கிறாராம். கொங்கு மண்டலத்தில் இருக்கும் அந்த அதிகாரி, சென்னையில் இருந்து காரில் வந்தபடியே அருண் பிரசாத்துடன் பேசினாராம். உள்ளூரில் போலீஸுக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை வளர்க்கும் ஒரு பிரமுகர் கொலை நடந்த ஸ்பாட்டில் இருந்தபடி அந்த போலீஸ் அதிகாரிக்கு 'லைவ் ரிலே' கொடுத்தாராம். இவரது செல்போனுடன் அந்த போலீஸ் அதிகாரி பலமுறை பேசி இருக்கிறாராம். ஸ்டீல் ரவி கொலை விவகாரத்தில் நெட்வொர்க் ஆக  இவர்கள் செயல்பட்டதை பக்காவாகப் பிடித்துவிட்டார்களாம். 'போலீஸ் அதிகாரிக்கும் கொலை விவகாரத்துக்கும் உள்ள தொடர்பு வெளியே தெரிந்தால், துறைக்கே அவமானமாச்சே?' என்று கருதி இதனை மறைக்க முயற்சிப்பதாகவும் சொல்கிறார்கள்.

ரௌடிகளின் ஜாதங்களை எழுதும் பிரிவில் கடந்த சில வருடங்களாக இருந்துவந்த அந்த அதிகாரி, எழுத்தில் வித்தை காட்டி ரௌடிகளுக்கு சாதகம் பண்ணிக்கொடுப்பாராம். இதெல்லாம் ஈரோடு போலீஸ் வட்டாரத்துக்கே தெரியும். அது ஏனோ சென்னை போலீஸ் மேலிடத்துக்கு மட்டும் இன்னும் எட்டவே இல்லை என்பது புரியாத புதிர்தான்'' என்ற கழுகாரிடம், மதுரை தி.மு.க. பற்றி கேட்டோம்.

''கடந்த ஜனவரி மாதம் மதுரையில் மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தை நடத்திய மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி, தலைமைக் கழகத்தில் இருந்து துரைமுருகனை அழைத்திருந்தார். வருவதாக ஒப்புக்கொண்ட துரைமுருகன், அழகிரி-ஸ்டாலின் லடாயில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, கடைசி நேரத்தில் தன் பயணத்தையே ரத்துசெய்துவிட்டார். 'வலது காலில் எலும்பு முறிவு. அதனால் வர முடியாது’ என்று சொல்லிவிட்டார். கால் சரியாகி அவர் சட்டசபைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட தளபதி, மார்ச் 30-ம் தேதி ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்துக்கு மீண்டும் துரைமுருகனை அழைத்தார். அவரும் வந்தார். ஏற்கெனவே அழகிரி பிறந்த நாளை ஸ்டாலின் ஆதரவாளர்கள் புறக்கணித்ததால், அழைப்பிதழில் பெயர் இருந்தும் இந்தக் கூட்டத்தை அழகிரி ஆதரவாளர்கள் கூண்டோடு புறக்கணித்தனர். கூட்டத்துக்கு ஏற்றாற்போல, தன்னையும் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர்போல் காட்டிக்கொண்ட துரைமுருகன், தனது ஒரு மணி நேர உரையில் ஒருமுறைகூட அழகிரியின் பெயரை உச்சரிக்கவில்லை. அவரது சுவாரஸ்யமான பேச்சை உமது நிருபர் கடந்த இதழில் எழுதி இருந்தார்.''

''ஆமாம்!''

''கூட்டம் முடிந்ததும் சென்னைக்குப் புறப்படாமல் மதுரையிலேயே தங்கிய துரைமுருகன், மறுநாள் காலையில் அழகிரியின் வீட்டுக்கே போய்விட்டார். தலைமை மீதான கோபத்தில் இருந்த அழகிரியைச் சமாதானப்படுத்தி, சிரிக்கவைத்துவிட்டுக் கிளம்பினார். அழகிரியோ, அவரைத் தன் காரிலேயே விமான நிலையம் அழைத்துப்போய் வழியனுப்பிவிட்டு வந்தார். இத்தனையும் நடந்த நான்காவது நாளில், கூட்டத்தைப் புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் அனைவருக்கும் தலைமைக் கழகத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது. மாநகர் மாவட்ட அவைத் தலைவர் இசக்கிமுத்து, துணைச் செயலாளர்கள் உதயகுமார், சிவக்குமார், சின்னம்மாள், பொருளாளர் மிசா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பி.எம்.மன்னன், மு.தர்மலிங்கம், ஜெயராஜ், பகுதிச் செயலாளர்கள் ரவீந்திரன், ஒச்சுபாலு, கோபிநாதன், பாண்டியராஜன், முபாரக் மந்திரி, வி.எம்.முருகன், ஆர்.எஸ்.ராமலிங்கம் ஆகிய 15 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்.''

''மறுபடியும் முதல்ல இருந்தா?''

''நோட்டீஸ் கிடைத்ததும் அழகிரியிடம் இதுபற்றி சொல்வதற்காக புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் 15 பேரும். 'கூட்டம் நடந்தது எனக்கே தெரியாது’ என்று கடுப்பாகச் சொன்ன அழகிரி, 'தலைவரே அறிவாலயத்துக்கு வரலைனு சொல்றாங்க. அப்புறம் எப்பிடி இந்த இளங்கோவன் நோட்டீஸ் அனுப்புறாரு? ஒரு பக்கம் துரைமுருகன் வந்து பார்க்கிறாரு. பின்னாடியே நோட்டீஸும் வருது. என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்காங்கன்னே தெரியலை’ என்றாராம். ஆனாலும், அதைப்பற்றி மேற்கொண்டு விவாதிக்கும் ஆர்வம் இல்லாமல் அவர்களை அனுப்பிவிட்டாராம் அழகிரி. கட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு என்ன பதில் அனுப்புவது என்பதில் அழகிரி ஆதரவாளர்களிடம் இரு வேறு கருத்து உள்ளது. மிசா பாண்டியன் உள்ளிட்ட அழகிரியின் தீவிர விசுவாசிகளோ, ஸ்டாலின் தரப்பு ஆட்களை விமர்சித்து பதில் அனுப்பத் திட்டமிட்டிருக்கிறார்கள். 'அழகிரி பிறந்த நாள் விழாவை 15 ஆண்டுகளாக பிரமாண்டமாக நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு வரை வந்தவர்கள், இந்த ஆண்டு வரவில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆண்டுதான் முதன் முதலாக ஸ்டாலின் பிறந்த நாள் கூட்டம் மதுரையில் நடக்கிறது. அதற்குப் போகாதது பெரிய குற்றமா? மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி சிறுபிள்ளைத்தனமாக புகார் அனுப்புகிறார் என்றால், தலைமைக் கழகமும் அதற்கு நோட்டீஸ் அனுப்புவதா?’ என்று கேட்கிறார்கள். ஆனால், அடக்கி வாசிக்கும் நிர்வாகிகளோ, 'காய்ச்சல், தலைவலி, தவிர்க்க முடியாத வெளியூர் பயணம்’ என்று சாஃப்ட்டாகப் பதில் அனுப்பத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த மிதவாதிகள் பட்டியலில் புதிதாக இடம் பிடித்திருப்பவர் மன்னன் என்பதுதான் ஆச்சர்யமூட்டும் செய்தி'' என்று சொல்லிக் கிளம்பப் போன கழுகார்,

''குஷ்பு அதிகப்படியான மனவருத்தத்தில் இருக்கிறாராம். அனேகமாக அவர் காங்கிரஸ் வட்டாரத்தை நோக்கி தன்னுடைய ஜாகையை மாற்றிவிடக் கூடும் என்று சொல்லப்படுகிறது. இலங்கைப் பிரச்னைக்காக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதத்துக்கு அவர் வராமல் இருந்ததுகூட அதனால்தான் என்கிறார்கள்.''

''ஓஹோ!''

''அப்புறம்... அரசியல் வி.வி.ஐ.பி-யிடம் இருந்து  முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு போன் வந்தது. பெரிய தொகைகளைச் சொல்லி, ஒருவரிடம் கொண்டுபோய் சேர்க்கச் சொல்லி இருக்கிறார். 'இது என்ன செட்டில்மென்ட்டா?’ என்று கிண்டலடித்தபடியே கொண்டுபோய் கொடுத்து வருகிறார்கள்'' என்றபடி கழுகார் ஜூட்!

படம்: ஆ.முத்துக்குமார்

மௌனப் புரட்சி!

மிஸ்டர் கழுகு: பிரதமர் மீது பாய்ந்த ஜி.கே.வாசன்!

போராட்டங்களை முடித்து மாணவர்கள் கல்லூரி திரும்பியிருக்கிறார்கள். கடந்த 3-ம் தேதி கல்லூரிக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி வந்தனர். தினமும் இரண்டு நிமிடம் மௌனப் போராட்டம் நடத்துவது என்றும் திட்டமிட்டுள்ளனர். காலை 11 மணி முதல் 11.02 வரை எந்த இடத்தில் இருக்கிறார்களோ, அங்கேயே மௌனமாக எழுந்து நிற்க ஆரம்பித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு