Published:Updated:

சிறிய சச்சரவுகளில் வீரம் காட்டாமல் பெரிய எதிரிகளை எதிர்ப்போம்!

பெருங்காமநல்லூரில் நடந்த வீர விழா!

பிரீமியம் ஸ்டோரி
##~##

துரை, பெருங்காமநல்லூரில் குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த 16 பேரை, 1920-ம் ஆண்டு ஈவு இரக்கமின்றி ஆங்கில அரசாங்கம் சுட்டுக் கொன்றது. குண்டடிபட்டு உயிர் துடித்த சிலருக்குத் தண்ணீர் கொடுத்த மாயக்காள் என்ற பெண்ணும் கொல்லப்பட்டார். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 3-ம் தேதி பெருங்காமநல்லூரில் பிரமலைக் கள்ளர் மக்கள், பொங்கல் வைத்து தங்கள் முன்னோர்களை வழிபடுவது வழக்கம். 

'போராளிகள் தினமாக’ தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இந்த நாளை அங்கீகரித்​திருக்கிறது. இந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் வைகோ சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். கூட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு பேசும்போது, 'பெருங்காமநல்லூரின் ஈகம் (தியாகம்) இன்றைக்கும் தேவைப்படுகிறது. இங்கே இறந்த 16 பேரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இது ஒரு சாதிப் போராட்டம் அல்ல. வெண்மணியில் நாற்பதுக்கும் அதிகமானோர் உயிர் கொடுத்தார்களே... அது சாதிப் போராட்டமா? தமிழ்த் தேசியத்துக்கான ஒற்றுமையைக் கட்டுவதற்கு பெருங்காமநல்லூர் ஈகமும் தேவைப்படுகிறது. வெண்மணியின் ஈகமும் தேவைப்படுகிறது.

சிறிய சச்சரவுகளில் வீரம் காட்டாமல் பெரிய எதிரிகளை எதிர்ப்போம்!

தமிழ் சமூகத்தின் கை, கால்களைக் கட்டிப்​போட்டிருப்பவை காலனி ஆதிக்கமும், வர்ண சாதி ஆதிக்கமும்தான். அதுதான் மனிதர்களைப் பிறப்பால் குற்றவாளிகளாகப் பார்க்கிறது. பிரமலைக் கள்ளர்கள் எல்லோருமே குற்றவாளிகள் என்றது பிரிட்டிஷ் அரசாங்கம். குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கக் கோரினார் முத்துராமலிங்கத் தேவர். ஆனால், ராஜாஜி துரோகம் இழைத்தார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவராக மாறினார் தேவர். காங்கிரஸின் துரோகம் இன்றைக்கும் தொடர்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்'' என்றார்.

வைகோ பேச்சில் பெருங்காமநல்லூரின் வரலாற்றைப் பற்றி சொன்னார். 'நான் எம்.பி-யாக இருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தில் பகத் சிங்கின் சொந்த கிராமத்துக்குச் சென்றிருந்தேன். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல். கூடியிருந்த மக்கள் மத்தியில் என்னைப் பேசச் சொன்னபோது, கையோடு எடுத்து வந்திருந்த பகத் சிங் பிறந்த கட்கர்கலான் கிராமத்து மண்ணுக்கு முத்தமிட்டுப் பேச ஆரம்பித்தேன். அந்த கட்கர்கலான் மண்ணையும், புலிகள் ரத்தம் சிந்திய வல்வெட்டித்துறை, வன்னிக்காட்டு மண்ணையும் சேகரித்துவைத்திருப்பதைப் போல, இன்று 16 பிரமலைக் கள்ளர்கள் உதிரம் சிந்திய பெருங்காமநல்லூர் மண்ணையும் எடுத்து வந்திருக்கிறேன்.

மண்ணின் மானம் காக்கப் போராடிய உங்களிடத்திலேயே நான் அரசியல் பேச விரும்பவில்லை. உங்கள் குழந்தைகளின் காலில் முள் தைத்துவிட்டால், எப்படித் துடிப்​பீர்கள்? சிவகாசி வேட்டுச் சத்தத்துக்கே நம் குழந்தைகள் பயந்து நடுங்குமே? இலங்கையில் எத்தனைக் குழந்தைகளை ராஜபக்ஷேவின் கொலைகாரக் கூட்டம் கொன்று குவித்திருக்கிறது. சீறி வருகிற விமானங்களின் குண்டுவீச்சுத் தாக்குதலில் குழந்தைகள் எல்லாம் உடல் சிதறி இறந்தனர். இன்னமும்கூட இந்தக் கொடுமை தொடர்கிறதே... நாம் வெறும் 18 கல் தொலைவிலே இருக்கிறோம். 7 கோடி பேர் இருக்கிறோம். வீரம் செறிந்தவர்களாக இருக்​கிறோம். என்ன செய்தோம்?

கத்தரிக்காய் சண்டையில் ஒருவனைத் துண்டு துண்டாக வெட்டிப் போடுகிறான் ஒருவன். பஸ்ஸில் ஏற்பட்ட சச்சரவில் கத்தி​யால் குத்துகிறான் மற்றொருவன். இதுவா வீரம்? சின்னச் சண்டைகளுக்கு  நம்மை நாமே வெட்டிச் சாய்ப்பதுவா வீரம்? நம் குலக்கொடிகளைக் கொல்கிறானே? நம் மக்களைக் கொல்கிறானே? அதற்கு எதிரான நம் வீரத்தைக் காட்டவேண்டும்.

உசிலம்பட்டி மக்களை நான் ஒன்று கேட்கிறேன். நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள். உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள். சிறு பிள்ளைகளை நான் அழைக்கிறேன். என் தலைமையில் அணி திரளுங்கள் என்று அழைக்கவில்லை. இளைஞர்களே, நீங்கள் இந்தச் சுடரை எடுத்துச் செல்லுங்கள். என்னைப் போன்றவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்போம்.

வேலுநாச்சியார், பூலித்தேவன், ஒண்டிவீரன், சுந்தரலிங்கம் என எல்லோரும் இன வேறுபாடு கடந்து இந்த மண்ணுக்காகப் போராடினார்கள். தமிழ்நாட்டின் எந்த மூலையில் பிரச்னை என்றாலும் நாம் போராட வேண்டும். காவிரியில் பிரச்னை என்றால், தென் நாடு கொந்தளிக்க வேண்டும். பெரியாறு பிரச்னை என்றால், கொங்கு நாடு போராட வேண்டும். பாலாற்றில் பிரச்னை என்றாலும், நாம் போராட வேண்டும். 2047 ஆகஸ்ட் 15 வந்தால், சுதந்திர தின நுற்றாண்டு. அப்போதும் இதே நிலைமை நீடிக்குமானால், இந்தியா ஒன்றாக இருக்காது என்று எச்சரிக்கிறேன்' என்று உணர்ச்சிப்​பிழம்பாக முடித்தார்.

உசிலம்பட்டியில் நடந்தது உணர்ச்சிமயமாக இருந்தது.  

- கே.கே.மகேஷ், செ.சல்மான்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு