Published:Updated:

வீடு கட்டிக் கொடுத்தால், போன உயிர் திரும்ப வருமா?

காங்கிரஸை விளாசும் பி.ஜே.பி.

பிரீமியம் ஸ்டோரி
##~##

ழப் பிரச்னையை இப்போது பி.ஜே.​பி-யும் கையில் எடுத்துள்ளது. அரசியல் ரீதி​யாக காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் அஸ்திரமாக அதனை மாற்ற, அந்தக் கட்சி திட்ட​மிட்டுள்ளது தெரிகிறது. எனவே, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் பி.ஜே.பி. கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹாவை தமிழகத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் வெடித்தபோது தீர்க்கமான வார்த்​தைகளால் விளாசியவர் இந்த சின்ஹா தான். 

சென்னையில் ராயப்பேட்டை சமூக நலக்​கூடத்தில் பி.ஜே.பி-யினர் கடந்த 3-ம் தேதி நடத்திய கூட்டத்திலும் அத்தகைய பரபரப்பைக் கிளப்பினார் சின்ஹா.

''வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. போர் நிறுத்தம் அமலில் இருந்தது. ராஜபக்ஷேவுக்கு முந்தைய அரசு, வாஜ்பாய் சொல்லைக் கேட்டது. 2005-ல் ராஜபக்ஷே அரசு அமைந்த பிறகுதான் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டது. இலங்கை அரசின் கோரத் தாக்குதலுக்கு மன்​மோகன் சிங் அரசு உறுதுணையாக இருந்தது. 2009-ல் ஏப்ரல், மே மாதத்தில் இன அழிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்தது. அதற்கு இந்தியாதான் உதவியது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே பகிரங்கமாக அறிவித்தார். இந்தியாவின் உச்சபட்சத் தலைமைக்கு எல்லாமே தெரியும் என்று இலங்கை அரசு அறிவித்தது.

வீடு கட்டிக் கொடுத்தால், போன உயிர் திரும்ப வருமா?

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடும் காட்சியையும் நெஞ்சில் குண்டடிபட்டு செத்துக்கிடக்கும் காட்சியையும் பார்த்த பிறகு யாரால்தான் பதறாமல் இருக்க முடியும்? அதனால்​தான் போருக்குப் பிறகு தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் தன்னெழுச்சியாக வீறுகொண்டு நடந்து வருகிறது. இலங்கைக்கு உதவவில்லை என்றால் அவர்கள் சீனாவுக்கு ஆதரவாக சென்றுவிடுவார்கள் என்று, மத்திய அரசு பூச்சாண்டி காட்டுகிறது. நட்பு என்பது பரஸ்பர அடிப்படையில் உருவாக வேண்டும். தாஜா பண்ணி உருவாகக் கூடாது.

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் எல்லாம் சீனா, கால் பதித்துக்கொண்டுதான் இருக்கிறது. நொண்டிக் காரணம் சொல்லும் மன்மோகன் சிங் அரசால், அதையெல்லாம் தடுக்க முடிந்ததா? அவர் மன்மோகன் சிங் அல்ல, 'மண்’மோகன் சிங். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் ரத்த உறவு உள்ளது. அவர்களுக்கு உதவிசெய்ய வேண்​டியது நமது கடமை. ஆனால், அமெரிக்காவின் வாலைப் பிடித்துக்கொண்டு இந்திய அரசு செல்கிறது. ஐ.நா. மனித உரிமை ஆணை​யத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப்போகச்செய்து தமிழ் மக்களுக்குத் துரோகம்​செய்தது. இனிமேல், வலுவான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டுவர வேண்டும். கருத்தொற்றுமை உள்ள மற்ற நாடுகளை ஆதரிக்கவைக்க வேண்டும்.

இலங்கையைப் பற்றி பேசினால், காஷ்மீர் பிரச்னையைக் கிளப்புவார்கள் என்று சிலர் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இரு பிரச்னை​களுக்குமே வெவ்வேறானவை. பாகிஸ்தான் தூண்டுதலினால்​தான், காஷ்மீரில் சில போராட்டங்கள் நடக்கின்றன. காஷ்மீரில் சில பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் எத்தகைய போராட்​டம் நடந்தாலும் குண்டு வீசி யாரையும் நாம் கொல்ல​வில்லை. ஆனால், இலங்கையில் சொந்த நாட்டு மக்களையே, அந்த நாட்டு ராணுவம் குண்டு வீசி அழித்தது. இறுதிப் போர் முடிந்த பிறகும் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் தமிழர்கள் இருக்கிறார்கள். சுதந்திரமாக நடமாடக்கூட முடியவில்லை. பாலி​யல் வன்முறைகள் தொடர்கின்றன. இளைஞர்கள் திடீர் திடீரென்று காணாமல் போகிறார்கள். இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் பேசினால், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், 'இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கிறோம்; சாலை போடு​கிறோம்’ என்று பதில் அளிக்கிறார். இந்தக் காரி​யத்தைச் செய்தால் தமிழர்களின் உயிர் திரும்பக் கிடைக்குமா?

இலங்கையில் காமன் வெல்த் நாடுகள் மாநாட்டை நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், இந்த அமைப்பில் முக்கிய உறுப்பினராக இருக்கும் இந்தியா அமைதியாக இருக்கிறது. காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பு விதிகளில், 'கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் மனித உரிமை மீறல் இருந்தால் அந்த நாட்டை கூட்டமைப்பில் இருந்து நீக்கலாம்’ என்று உள்ளது. அதைப் பயன்படுத்தி இலங்கையை நீக்க இந்தியாவால் முடியும்.

இலங்கையில் அடக்குமுறைகள் அளவுகடந்து போய்விட்டன. காலனி ஆதிக்க வெறியோடு செயல்பட்டதால்தான் பங்களாதேஷ் உதயமானது. சூடான் இரண்டு நாடாக உடைந்தது. கிழக்கு தைமூர் உருவானது. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கொடுங்கள். வடக்கு-கிழக்கு மாகாண தேர்தலை அக்டோபர் வரை தள்ளிவைக்காமல் உடனே நடத்துங்கள். ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துங்கள். 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தை அமலுக்குக் கொண்டுவாருங்கள்.

அடக்குமுறை மூலம் நாட்டின் ஒருமைப்​பாட்டைக் காப்பாற்ற முடியாது.  அடக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க, சுதந்திர உணர்வு வெடித்துக் கிளம்பும். தமிழ் ஈழம் மலர வெகுகாலம் ஆகாது. பி.ஜே.பி. ஆட்சி அமைத்தால், ஈழத் தமிழர் துயரம் தீர்க்கப்படும். தமிழக மீனவர்களைப் பாதுகாப்போம்'' என்று கரகோஷத்துக்கு இடையே அதிரடியாக முடித்தார் யஷ்வந்த் சின்ஹா.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த விஷயத்தை பி.ஜே.பி. கையில் எடுப்பது  காங்கிரஸுக்கு அகில இந்திய அளவில் நெருக்கடியை ஏற்படுத்தும்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு