Published:Updated:

''காங்கிரஸ் நோட்டீஸை பல பேர் கொடுக்கவே இல்லை!''

காங்கிரஸ் தலைவர் ஓப்பன் டாக்

''காங்கிரஸ் நோட்டீஸை பல பேர் கொடுக்கவே இல்லை!''

காங்கிரஸ் தலைவர் ஓப்பன் டாக்

Published:Updated:
##~##

நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கட்சியைத் தயார்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன். ஏற்கெனவே, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட தொகுதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடத்திவிட்டு, 9-ம் தேதி மதுரை வந்தார் ஞானதேசிகன். அவருக்கு மாணவர்​கள் கறுப்புக் கொடி காட்டுவதாக அறிவித்திருந்​ததால், பரபரப்பு நிலவியது. 

அதில் தப்பி கூட்டத்துக்கு வந்தவர், ''மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகள், வட்டார, நகர, பேரூராட்சித் தலைவர்களையும் உள்ளாட்சி நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்துப் பேச இருக்கிறேன். எனவே, குறைகளைக் கூட்டத்தில் பேச வேண்டாம்'' என்ற அறிவிப்போடு நிர்வாகிகளைப் பேச அழைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காங்கிரஸ் நோட்டீஸை பல பேர் கொடுக்கவே இல்லை!''

தெற்கு மாவட்டத் தலைவர் தேவராஜன் (ஈ.வி.கே.எஸ். ஆதரவாளர்) மைக் பிடித்ததுமே, என்.எஸ்.வி.சித்தன் ஆதரவாளர்கள் சிலர் எழுந்து, ''இன்னைக்குத்தான் இவரைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட செயல்படாத ஆட்கள் தேவையா?'' என்று கூச்சல் போட்டனர். ''ஆரம்பமே இப்படியா?'' என்று எழுந்த ஞானதேசிகன், ''மாவட்டத் தலைவர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் தனியாக என்னிடம் வந்து சொல்லுங்கள். மீறினால், ஊருக்குப் போவதற்குள் எல்லோரையும் சஸ்பெண்ட் செய்துவிட்டுப் போய்விடுவேன்'' என்று ஓப்பன் மைக்கில் எச்சரித்தார். ஆனாலும், கூட்டத்தில் ஆங்காங்கே சலசலப்பு தொடர்ந்தது.

கூட்டத்தில் பேசிய பலர், சீமான், நெடுமாறன், வைகோ போன்றவர்களை 'லெட்டர் பேடு’ கட்சித் தலைவர்கள் என்று விமர்சித்தனர்.

கடைசியாக மைக் பிடித்த ஞானதேசிகன், ''கிராமக் கமிட்டிகளை ஆரம்பிப்பதுதான் நம் முதல் நடவடிக்கை. பிறகு, அந்தக் கிராமக் கமிட்டிகளில் கொடியேற்றுகிற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கடந்த 12-ம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை வெளியிட்டு, அதை துண்டுப் பிரசுரமாக மாவட்டம்தோறும் விநியோகிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தோம். நான் மட்டும் சென்னையில் தெருவிலே இறங்கி வீடு வீடாகப் போய் நோட்டீஸ் கொடுத்தேன். ஆனால், பல மாவட்டத் தலைவர்கள் ஒரு இடத்தில்கூட நோட்டீஸ் கொடுக்கவில்லை என்பதை நான் அறிவேன்.

''காங்கிரஸ் நோட்டீஸை பல பேர் கொடுக்கவே இல்லை!''

காங்கிரஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து நலிவுற்ற தொண்டர்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க முடிவுசெய்து, மாவட்டங்களுக்கு நிதி அனுப்பிவைத்தோம். அதையும் பல மாவட்டத் தலைவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை. புதிதாகச் சேர்ந்த உறுப்பினர்கள் பலருக்கு இன்னமும் உறுப்பினர் கார்டு வரவில்லை என்பதும் எனக்குத் தெரியும். வரும் தமிழ்ப் புத்தாண்டில் கண்டிப்பாக இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். கிராமக் கமிட்டியில் தொடங்கி மாநிலக் கமிட்டி வரை நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதற்கு மேல் என்னைக் கேட்காதீர்கள். நான் சொல்ல முடியாது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றனர். ஆதரித்து வெற்றி பெறச்​செய்தோம். இப்போது நிறைவேற்ற முடியாத இரண்டு கோரிக்கைகளைச் சொல்லி, காங்கிரஸைக் குற்றம்​​சாட்டுகிறார்கள். முதல் கோரிக்கை, இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும் என்பது. அப்படித் தடைவிதித்தால், நாம் கொடுத்துள்ள 4,000 கோடி ரூபாயில் ஒரு பைசாகூட ஈழத் தமிழர்களைச் சென்றடையாது.

இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமாம். அது வேறு நாடு. அங்கே மன்மோகன் சிங்கும் இந்திய தேர்தல் ஆணையமும் போய், 'ராஜபக்ஷேவே கொஞ்சம் தள்ளி உட்காருங்கள். நாங்கள் தேர்தலை நடத்திக்கொள்கிறோம்’ என்று சொல்ல முடியுமா? ஐ.நா. சபைப் பாதுகாப்பு கவுன்சில்தான் அதைச் செய்ய முடியும். கொடைக்கானலில் பனி படர்வதைப் போல, தமிழகத்திலே இலங்கைப் பிரச்னை என்ற பனி படர்ந்திருக்கிறது. அந்தப் பனி விலகுகிறபோது, நம்மை எதிர்த்தவர்கள் எல்லாம் பஞ்சாய்ப் போவார்கள்.

மதுரை என்றாலே எனக்குப் பயம் உண்டு. அந்த அளவுக்கு இங்கே கட்சி துவண்டுபோய் கிடக்கிறது. நிர்வாகிகளே, தயவுசெய்து வார்டு வார்டாகப் போங்கள். தொண்டன் தேடி வந்தால், அவனுக்கு ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள். தொண்டர்கள் இல்லை என்றால், நமக்குச் சட்டமன்றம், நாடாளுமன்றம் இல்லை. தொண்டர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம்'' என்றார்.

அதன் பிறகு மாவட்ட, வட்டார, நகர வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்த ஞானதேசிகனிடம் ஒவ்வொரு கோஷ்டியும் மற்றொரு கோஷ்டியைப் பற்றி சரமாரியாக புகார்செய்தது. வெறுத்துப்போன அவர், ''நம் வீடு எரிந்து கொண்டிருக்கிறது. அதை அணைக்கிற முயற்சியை எடுக்காமல், நமக்குள் சண்டை போடாதீர்கள். இது அதற்கான நேரம் இல்லை'' என்று அறிவுரை கூறிவிட்டுப் போனார்.

புத்தாண்டில் புதிய நிர்வாகிகளை அறிவிக்கிறார்​களாம். புதிதாக எத்தனை கோஷ்டிகள் உருவாகப்போ​கிறதோ?

- கே.கே.மகேஷ், படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism