Published:Updated:

மிஸ்டர் கழுகு: ''மதுரையில் நடப்பது யாருடைய ஆட்சி?''

மிஸ்டர் கழுகு: ''மதுரையில் நடப்பது யாருடைய ஆட்சி?''

மிஸ்டர் கழுகு: ''மதுரையில் நடப்பது யாருடைய ஆட்சி?''

மிஸ்டர் கழுகு: ''மதுரையில் நடப்பது யாருடைய ஆட்சி?''

Published:Updated:
மிஸ்டர் கழுகு: ''மதுரையில் நடப்பது யாருடைய ஆட்சி?''
##~##

''சர்ச்சைகள் முழுக்க மதுரையையே மையம்கொள்வதால்... முழுக்க மதுரைச் செய்திகள்'' என்ற பீடிகை யுடன் ஆரம்பித்தார் கழுகார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி. உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக அழகிரி ஆதரவாளர்கள் நோட்டீஸ் வாங்கிப் பரித​வித்து நின்ற வேளையில்... ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை ஒரே நாளில் வாபஸான விவகாரம் தி.மு.க-வில் பலத்த அதிருப்தியை விதைத்திருக்கிறது. மதுரையில் மையம்கொண்டு நடக்கும் அரசியல் மாநிலத்தையே சலசலப்புக்கு உள்ளாக்கி இருக்​கிறது'' என்றும் சொன்ன கழுகார், முதலில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கைப் பற்றி ஆரம்பித்தார்.

''கடந்த புதன்கிழமை அன்று அட்டாக் பாண்டி ஆட்கள் சந்தோஷத்தில் திளைத்தனர். பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் சிக்கிய ஏழு பேருக்கு ஜாமின் கிடைக்கிறது என்றால் சும்மாவா? பொட்டு சுரேஷ் கொலையில் தொடர்புடைய 18 பேரில் இதுவரை 16 பேர் சிக்கி இருக்கிறார்கள். அட்டாக் பாண்டியும் பிரவீன்குமார் என்பவரும் தலைமறைவாக இருக்கின்றனர். இந்த 16 பேரில் 11 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தவர்கள். இதில் போலீ​ஸார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தவர்கள் ஐந்து பேர் மட்டுமே. அந்த ஐந்து  பேரும் பிரதானக் குற்றவாளிகளுக்குச் சிறுசிறு உதவி செய்தவர்கள். கொலை நடந்து

மிஸ்டர் கழுகு: ''மதுரையில் நடப்பது யாருடைய ஆட்சி?''

இரண்டு மாதங்கள் ஆகியும் அட்டாக் பாண்டியும் பிரவீன்குமாரும் இதுவரையில் பிடிபட​வில்லை. பிடிபட்ட 16 பேரில் சந்தானம், சபாரத்தினம், சேகர், கார்த்திக், லிங்கம், செந்தில், நாகமுருகன், விஜய​பாண்டி, ஆரோக்கிய பிரபு உள்ளிட்ட 14 பேர் ஜாமின் கேட்டு மதுரை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். கடைசியாகச் சரண​டைந்த வில்வதுரையும், காட்டுவாசி முருகனும் ஜாமின் கேட்கவில்லை.''

''ஜாமின் கேட்பது எல்லா வழக்​கிலும் நடப்பதுதானே?''

''அரசுத் தரப்பில் ஆஜரான வழக்​கறிஞர் தமிழ்செல்வம், 'இது ஏதோ சாதாரணக் கொலை கிடையாது. மதுரையில் நிகழ்ந்த மற்றொரு அரசியல் படுகொலை. அட்டாக் பாண்டி, ஆரோக்கியபிரபு, விஜயபாண்டி உள்ளிட்ட பிரதானக் குற்றவாளிகள் மீது ஏற்கெனவே வழக்குகள் உண்டு. தினகரன் எரிப்பு வழக்கிலும் சம்பந்தப்​பட்டவர்களும் இருக்கிறார்கள். சிலர் மீது கொலை, கொள்ளை வழக்குகளும் உள்ளன. இவர்களின் நடவடிக்கைகள் மக்களைப் பயமுறுத்துவதுபோல் அமைந்திருக்கிறது. இவர்கள் வெளியே நடமாடுவதற்கு உகந்தவர்கள் அல்லர். இவர்கள் வெளியே வந்தால், சட்டம்- ஒழுங்குப் பிரச்னை ஏற்படும். மக்களும் பீதியடைவார்கள். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அட்டாக் பாண்டி இன்னமும் பிடி​படவில்லை. எனவே, இவர்களுக்கு ஜாமின் கொடுக்கக் கூடாது’ என்று வாதிட்டார். அட்டாக் தரப்பில் இருந்து மதுரையின் புகழ்​பெற்ற கிரிமினல் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜு, மணிகண்டன் ஆகியோர் ஆஜரா​னார்கள். 'பொட்டு சுரேஷ் சாதாரண ஆள் கிடையாது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். அவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் இருக்கின்றன. இதே போலீஸார் அவரைக் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். தொழில் மோட்டிவ், அரசியல் மோட்டிவ் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம். இந்தக் கொலையை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை. போலீஸ் கஸ்டடி​யில் எடுத்து விசாரணை என்ற பெயரில் வாங்கப்பட்ட வாக்குமூலத்தை எவிடென்ஸாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வாக்குமூலமே செல்லாது. சந்தானம், சபாரத்தினம் உள்ளிட்ட ஏழு பேர் 65 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்கள். விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோரும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும்’ என்று வாதாடினர். நீதிபதி கோகுல்தாஸ் இதை விசாரித்தார். சந்தானம், சபாரத்தினம், சேகர், கார்த்திக், லிங்கம், செந்தில், நாகமுருகன் ஆகிய ஏழு பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இந்தத் தகவல் கிடைத்ததும் ஆட்சி மேலிடம் கொந்தளித்துவிட்டதாம்!''

''சொல்லும்!''

மிஸ்டர் கழுகு: ''மதுரையில் நடப்பது யாருடைய ஆட்சி?''

''இந்த விஷயத்தை சீரியஸாகப் பார்த்தாராம் முதல்வர். ஆட்சி சம்பந்தமான சட்ட விஷயங்​களைக் கவனிக்கும் பிரமுகரிடம் பேசிய முதல்வர், 'மிக முக்கியமான வழக்கில் இப்படி ஜாமினில் ஆட்கள் வெளியில் வந்தால், சட்டம்- ஒழுங்கு எப்படி சரியாக இருக்கும்? என்ன நடக்கிறது மதுரையில்? யாருடைய ஆட்சி நடக்கிறது? போலீஸும் அரசு வழக்கறிஞர்களும் சரியாகத்​தான் நடந்துகொண்டார்களா?’ என்று சீறினாராம் முதல்வர். இதே போன்ற தனது ஆதங்கத்தை போலீஸ் உயர் அதிகாரியிடமும் கொட்டினாராம். 'ஒரு கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுக் கைதானவர்கள் 90 நாட்கள் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதைமீறி எப்படி இவர்களால் வெளியில் வர முடிந்தது? அதுவும் ஏ1 என்ற இடத்தில் இருக்கும் அட்டாக் பாண்டி இன்னமும் கைது ஆகாத நிலையில், மற்றவர்களை எப்படி ஜாமினில் விட முடியும்? பொட்டு சுரேஷ் கொலை சம்பந்தமாக முக்கியமான தகவல்களை போலீஸுக்கு கொடுத்த அட்டாக் பாண்டியின் உறவினர் திருச்செல்வம், யார் யாரால் தனது உயிருக்கு ஆபத்து என்று போலீஸில் சொல்லி இருக்கிறாரோ... அவர்கள் ஜாமினில் வெளியில் வந்தால், விசாரணை எப்படி முழுமை அடையும்? யார் தைரியமாக சாட்சி சொல்ல வருவார்கள்? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன், இவர்கள் வெளியில் வந்தால், யாருடைய சாட்சியை வைத்து வழக்கை உறுதிப்படுத்துவார்கள்?’ என்றெல்லாம் விஷயம் அறிந்தவர்கள் கேட்கிறார்கள். கோர்ட்டில் நடந்த விவாதம் முதல் ஜாமின் கிடைத்திருப்பது வரை சம்பந்தப்பட்ட அனைவர் குறித்தும் ரகசிய விசாரணை நடத்த மேலிடம் உத்தரவிட்டுள்ளதாம்!''

''ஓஹோ!''

''கடந்த 9-ம் தேதி பிறப்பிக்கப்​பட்ட ஜாமின் உத்தரவு சேலம் சிறைக்குக் கிடைப்பதற்குள், தெலுங்கு வருடப் பிறப்பு அரசு விடுமுறை வந்துவிட்டது. ஏழு பேரில் பலருக்கு சொந்த வீடு இல்லை. சொந்த வீடு உள்ள வேறு சிலரை ஜாமின்தாரர்களாகப் போடுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால் இதுவரை அவர்கள் சிறையில் இருந்து விடுதலையாகவில்லை. அனேகமாக சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமைதான் அவர்கள் வெளியில் வர வாய்ப்பு உள்ளது. மேலிடத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவு வந்ததால், மதுரை போலீஸும் சட்டப் பிரமுகர்களும் உஷாரானார்கள். அவர்களின் ஜாமினைத் தடுப்பதற்கான முயற்சியில் போலீ​ஸார் இறங்கினர். இதனால், அரசு விடுமுறை தினமான வியாழக்​கிழமைகூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் அரசு வழக்கறிஞரைச் சந்தித்து போலீஸார் அவரச ஆலோசனை நடத்தினர். இந்த இதழ் வெளிவரும் முன்பே, அந்த ஜாமினை எதிர்த்து மதுரை கிளையில் அப்பீல் செய்துவிடுவார்கள் போலீஸார். இதில் யார் யார் மெத்தனமாக இருந்தனர், அதற்கு உண்மையான காரணம் என்ன என்ற விசாரணை சூடுபிடிக்கும்போது பலரது தலை உருளலாம்!''

''பார்ப்போம்!''

''இது பொட்டு சுரேஷின் குடும்பத்தினரிடம் கடும் அதிருப்​தியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் முதல்வரைச் சந்தித்து முறையிடப்போவதாகவும் சொல்லப்படுகிறது. 'இதுநாள்​வரை அழகிரிக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசாத அவர்கள், அப்படி ஏதாவது சொல்லி​விடுவார்களோ’ என்ற பயத்தில் தி.மு.க-வினரும் இருக்கிறார்கள்!'' என்ற கழுகார் மதுரை தி.மு.க. வட்டாரத்து சர்ச்சையைக் கையில் எடுத்தார்...

''மதுரை தி.மு.க-வுக்குள் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்ம நாவல் படிப்பதைப் போல விறுவிறுப்பாக இருக்கிறது. கடந்த 6-ம் தேதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கோ.சந்திரசேகரன், பொதுக் குழு உறுப்பினர் எம்.ஏ.பழனிச்சாமி, கொட்டாம்பட்டி சந்தானம், ஆடுதுரை, எஸ்.சுரேந்தர், வரிச்சியூரைச் சேர்ந்த எஸ்.முருகன் ஆகியோர் மீதான நடவடிக்கை, கடந்த 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 'இவர்கள் அனைவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு தலைவர் கலைஞர் அவர்களிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டு இன்று முதல் தொடர்ந்து கழகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று, அன்பழகன் அறிவித்துள்ளார். கழகக் கட்டுப்பாட்டை மீறியதாக நான்கு நாட்களுக்கு முன் நீக்கப்பட்டவர்கள், அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த ஒழுங்கு நடவடிக்கை ரத்து அறிவிப்பைப் பார்த்து அனலாகக் கொதிக்கிறார் அழகிரி!''

''ஏனாம் இந்த அவசர ரத்து?''

''இவர்கள் அனைவரும் மதுரை புறநகர் மாவட்டத்தில், புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்திக்குத் தகவல் சொல்லாமல், ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடியவர்கள். 'மாவட்டச் செயலாளர் அனுமதி இல்லாமல் இவர்கள் எப்படிக் கூட்டம் நடத்தலாம்? அது தவறு அல்லவா?’ என்று அழகிரி ஆதரவாளர்கள் தலைமைக்குத் தகவல் சொன்னார்கள். 'தப்பாச்சே!’ என்று இவர்கள் மீது 6-ம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியைவிட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது, ஸ்டாலினுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியவர்களை, என்னுடைய ஆதரவாளர்களை எப்படி நீக்கலாம்?’ என்று கொந்தளித்தவர், கருணாநிதியிடமும் அன்பழகனிடம் தனது கசப்பைக் காட்டினார். அதற்கென்ன, இன்னொரு பெட்டிச் செய்தியை முரசொலியில் போட்டு அவர்கள் அனைவரையும் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டனர். 'அவங்க ஆளுங்கன்னா உடனே சேர்த்துக்குவாங்களா? என்ன லட்சணத்துல கட்சி நடத்துறாங்க?’ என்று கமென்ட் அடித்தாராம் அழகிரி. இன்னொரு தி.மு.க. பிரமுகர் சொன்னது மகா ஜோக்!''

''அதையும் சொல்லும்!''

''அமைதிப்படை படத்தில் சத்யராஜ் சொல்வாராம். 'கட்சி நடத்துறதுக்கு ரெண்டு வார்த்தை போதும். ஒண்ணு... உஷ்ஷ§, இன்னொண்ணு... பிஸ்ஸு. வேண்டியவனா இருந்தா, உஷ்ஷ§னு சொல்லி உள்ளே வெச்சுக்கோ. வேண்டாதவன்னா, பிஸ்ஸுனு சொல்லி வெளியே தள்ளிக்கோ’ என்பாராம். 'அந்த மாதிரி ஆயிருப்பா கட்சி’ என்றாராம் முன்னாள் அமைச்சர் ஒருவர். இத்தகைய நடவடிக்கை ஒன்றில் அழகிரி ஆட்கள் சிக்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது யாரும் கரிசனம் காட்டாதது அந்த வட்டாரத்தைக் கொந்தளிக்கவைத்தது. சில நாட்களுக்கு முன் கோரிப்பாளையம் பகுதியில் ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொள்ளாத அழகிரி ஆதரவாளர்கள் 15 பேருக்கு, தி.மு.க. தலைமை நோட்டீஸ் அனுப்பியது. 'இவர்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தாராம். ஆனால் அதை கருணாநிதி ஏற்க​வில்லை. 'அடுத்த தலைவர் ஸ்டாலின்னு நான் சொல்லியாச்சு. அதுக்காக அவர் சொல்றதுக்கு எல்லாம் என்னால தலையாட்ட முடியாது’ என்று கருணாநிதி கடுப்படித்தாராம். அதனால் இரண்டு நாட்கள் கருணாநிதியைச் சந்திப்பதை ஸ்டாலின் தவிர்த்ததாகவும் பேச்சு.''

''கனிமொழி சந்திப்பால் ஏதாவது மாற்றம் நடந்ததா?''

''கனிமொழி மதுரைக்கு வந்த அன்று அழகிரியோடுதான் காரில் பயணம் செய்தார். அப்போது ஒரு நிருபர், 'உங்களை அஞ்சாநெஞ்சன்னு சொல்றாங்களே?’ என்று கேட்டார். 'அஞ்சாநெஞ்சன்னு போட்டா என்ன தப்பு? விஜய் கூட தன்னை தளபதின்னு போட்டுக்கிறார். இங்கயும்தான் தளபதின்னு போட்டுக்கிறாங்களே?’ என்று சொல்லிக்கொண்டே கார் கண்ணாடியை ஏற்றினார் அழகிரி. இது, ஸ்டாலின் வட்டாரத்தை கோபம்அடைய வைத்துள்ளது.''

''ம்!''

''ராமநாதபுரத்தில் 13-ம் தேதி நடக்கும் இளைஞர் அணிப் பயிற்சிக் கூட்டத்தைத் தொடங்கி​வைக்க ஸ்டாலின் வருகிறார். மதுரை விமான நிலையத்தில் அவருக்குப் பலத்த வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் ஆட்கள் திட்டமிட்டுள்ளனர். கனிமொழிக்குக் கொடுத்த வரவேற்பை மிஞ்சும் வகையில் இருக்கும். இதில் அழகிரி ஆட்கள் கலந்துகொள்வார்களா? இதில் கலந்துகொள்ளாதவர்களுக்கு வழக்கம்போல் நோட்டீஸ் போகுமா என்பதைப் பொறுத்து விவகாரங்கள் விபரீதங்கள் ஆகலாம். இத்தனை நாட்களாகத் தன்னை அழகிரி ஆளாகக் காட்டிக்கொண்டிருந்த எம்.பி-யான ரித்தீஷ், ஸ்டாலினின் ராமநாதபுரம் வருகைக்காக மாவட்டம் முழுக்க சுவர் விளம்பரம் செய்திருக்​கிறார். இதன்மூலம், அவரும் நைஸாகக் கழன்று​கொண்டாரோ என்று பேசுகிறார்கள்'' என்றபடி எகிறிப் பறந்தார் கழுகார்!

மாவட்டம் முழுவதும் அலுவலகங்கள்?

நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன், அ.தி.மு.க-வின் அனைத்து மாவட்டக் கழகத்திலும் சொந்தமாக புதிய அலுவலகம் இருக்க வேண்டும் என்பது முதல்வரின் கட்டளை.

'பிர​சாரத்துக்காக முதல்வர் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்கிறார். அப்போது அந்தந்த மாவட்டத் தலை​நகரங்களில் புத்தம்புதிதாகக் கட்டப்பட்ட  அலுவலகத் திறப்பு விழா நடக்கவேண்டும்’ என்றும் உத்தரவு.  

வடக்கு அல்லது கிழக்கு பார்த்ததாக அவை அமைய வேண்டுமாம்!

 வில்லங்கக் கூட்டுறவு!

தென் மாவட்டத்து அமைச்சர் ஒருவரிடம் அதிகமான ஒட்டுறவு காட்டும் முருகப்பெருமான் பெயர் கொண்ட அதிகாரியை பார்த்து பலரும் எரிச்சலில் இருக்கிறார்கள். 'இவரது காரியங்கள் மந்திரி பதவியை விரைவில் பறிக்க வைத்துவிடும். அந்த அளவுக்கு ஆடுகிறார். முதல்வர் அலுவலக அதிகாரிகள் சொல்வதைக்கூட கேட்காமல் ஆடுகிறார்’ என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: ''மதுரையில் நடப்பது யாருடைய ஆட்சி?''

 திகிலில் திவாகரன்!

சசிகலாவின் சகோதரர் திவாகரன் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது. கோடை தொடங்கிவிட்டதால் திருச்சியில் வெயிலின் அளவு மிகக் கடுமை யாக இருக்கிறது. இதைத் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் திவாகரன். ஆறு கிலோ எடை குறைந்ததுடன் வேனல்கட்டிகள் உடலில் பரவத்தொடங்கிவிட்டதாம். இதனால் மனம் உடைந்த திவா கரனின் மனைவி ஹேமலதா, கண்ணீர் விட்டதுடன் தனது மகன் ஜெயஆனந்தை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். தன்னுடைய வேண்டுதல்களை போயஸ் கார்டனுக்கு அனுப்பி யுள்ளார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism