Published:Updated:

மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க கருணாநிதி வலியுறுத்தல்!

விகடன் விமர்சனக்குழு
மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க கருணாநிதி வலியுறுத்தல்!
மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க கருணாநிதி வலியுறுத்தல்!
மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க கருணாநிதி வலியுறுத்தல்!

சென்னை: தமிழக அரசு மேல் முறையீட்டுக்கு செல்லாமல் மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க முன்வர வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி என் தலைமையில் ஐந்தாவது முறை அமைந்தபோது, 31-5-2006 அன்று மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்பட்டது. 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அவர்கள் ஏற்கனவே செய்ததைப்போல, மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து தமிழக அ.தி.மு.க. அரசு, 8-11-2011 அன்று அரசாணை பிறப்பித்தது. பணி நீக்க உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு அந்த சங்கத்தின் அலுவலர்கள் சார்பில் தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்களின் வழக்கை மீண்டும் விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள் பால் வசந்தகுமார், சத்தியநாராயணா ஆகியோர் 19-8-2014 அன்று நல்லதோர் தீர்ப்பினை வழங்கி இருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பில் முக்கியமாக, “பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு, அதே பெயரிலேயோ அல்லது வேறு எந்தப் பெயரிலேயோ, மது ஒழிப்புப் பிரசாரப்பணிக்காகவோ அல்லது அரசுப் பள்ளிகள், கிராமப் பஞ்சாயத்து, நகர மன்றங்கள், மாநகராட்சிகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், வட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களிலே பணி அமர்த்தப்பட வேண்டும்.

அப்போது அவர்களுடைய உச்ச வயது வரம்பை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அவர்களது கல்வித் தகுதிக்கேற்ப பணி வழங்க வேண்டும். மது ஒழிப்புப் பிரசாரத்திற்கு இந்த மக்கள் நலப்பணியாளர்களை பணியிலே அமர்த்திப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், குழந்தை சுகாதாரத் திட்டம், ஊரகத்தூய்மைத் திட்டம் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் இவர்களை பணியிலே அமர்த்தலாம்” என்றெல்லாம் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளாகின்றன. மக்கள் நலப் பணியாளர்களுக்குப் பணி தராமல் இந்த மூன்றரை ஆண்டுகளையும் அ.தி.மு.க. அரசு வீணடித்ததோடு, உச்ச நீதிமன்றம் வரை அவர்களை இழுத்தடித்து படாதபாடு படுத்தியிருக்கிறது. நீதியரசர்கள் எல்லாம் தங்களது கடுமையான கண்டனத்தை இந்த அரசுக்குத் தெரிவித்ததோடு, மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி கொடுக்கப்பட வேண்டுமென்று உறுதியாகக் கூறியிருக்கிறார்கள்.

இவ்வளவுக்கு பிறகும் அ.தி.மு.க. அரசு மேலும் கால தாமதம் செய்யாமல், பணி வாய்ப்பினை இழந்ததால் 19 மக்கள் நலப்பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள் என்ற சோக நிகழ்வினையும், வேலையிழந்து தவிக்கும் மக்கள் நலப்பணியாளர்களில் மிகப்பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் என்பதையும் நினைவிலே கொண்டாவது, உடனடியாக அவர்களுக்கு வேலை தர முன்வர வேண்டும்.

அதற்கு இடம் அளிக்காமல், தி.மு.க. ஆட்சியில் பணி நியமனம் பெற்றவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இந்தத்தீர்ப்பையும் மதிக்காமல், கால தாமதம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு, இதற்குப்பிறகும் மேல் முறையீடு செய்ய முற்பட்டால், அதைவிடப்பெரிய கொடுமையோ, அநீதியோ வேறு எதுவும் இருக்க முடியாது" என்று கூறியுள்ளார்.