Published:Updated:

எம்.பி. தேர்தல்... யாரோடு யார்?

கட்சிகளின் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ப.திருமாவேலன், ஓவியம்: கண்ணா

எம்.பி. தேர்தல்... யாரோடு யார்?

கட்சிகளின் கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ப.திருமாவேலன், ஓவியம்: கண்ணா

Published:Updated:
##~##

புதிய நாடாளுமன்றத்துக்கான எலெக்ஷன் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராகிவருகிறது. காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இது வாழ்க்கைப் பிரச்னை. மற்ற கட்சிகளுக்கும் இது வாழ்நாள் பிரச்னை. எனவே, தங்களுடைய ரகசிய பேரங்களை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. டெல்லி முதல்  சென்னை வரை நடக்க ஆரம்பித்திருக்கும் இந்தத் திரைமறைவு பேரங்களை யாரும் வெளிப்படையாக அவிழ்க்கத் தயாராக இல்லை. அந்தக் காட்சிகளின் முன்னோட்ட நிலவரம் இது...

முடிவுக்கு வந்த அ.தி.மு.க.!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நாளை நமதே... நாற்பதும் நமதே!’ என்ற குருட்டு தைரியத்தில், அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று முடிவு எடுத்து வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கடந்த டிசம்பர் கடைசி நாளில் அறிவித்தார் ஜெயலலிதா. என்ன சூழ்நிலையில், யார் கொடுத்த தைரியத்தில் அவர் அறிவித்தார் என்று தெரியவில்லை. ஆனால், அடுத்த சில நாட்களில் அவருக்குப் பயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. கருணாநிதி, சோனியா, விஜயகாந்த் ஆகிய மூவரும் இணைந்து கூட்டணி அமைத்தால், இந்த தனித் துப் போட்டி கப்பல் மொத்தமாகக் கவிழ்ந்து விடும் என்பதை அதன் பிறகுதான் உணர ஆரம் பித்தார். தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ள மின்வெட்டு அதிருப்தி அலை, சிறுதொழில்களின் வீழ்ச்சி, விலைவாசி உயர்வு ஆகிய மூன்றும் அவருக்கு சிம்ம சொப்பனமாக மிரட்ட ஆரம்பித் தன. இந்த நிலையில், தனக்கு ஆதரவாகச் சில கட்சிகளைச் சேர்த்துக்கொள்வதே சரியானது என்ற முடிவுக்கு வந்தார். மதுவிலக்கு நடைப் பயணம் சென்ற வைகோவை வழிமறித்துக் கொதிக்கும் வெயிலில் நின்று 'ஹலோ’ சொன் னது முதல் அவருடைய கூட்டணி எண்ணம் வெளிச்சத்துக்கு வந்தது. '40 தொகுதிகளுக்கும் பிரசாரம் செல்ல வைகோ தேவை’ என்றும் அ.தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. அதிகாரபூர்வ மாக இரண்டு கட்சிகளுக்கு உள்ளும் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு தொகுதி சம்பந்தமான பேச்சுவார்த்தை வந்தபோது, ம.தி.மு.க-வைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா பேசியதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதாவின் அதிக நம்பிக்கையைப் பெற்றதாக உள்ளது.  விஜயகாந்துடன் அதிக நட்புறவு காட் டும் கட்சியாக மார்க்சிஸ்ட்டுகளை ஜெயலலிதா பார்க்கிறார். மேலும், சட்டமன்றத்தில் அவர்கள் அதிகமாக காட்டமும் முறைப்பும் காட்டுகிறார் கள் என்பதும் ஜெயலலிதாவின் கணிப்பு. தேசிய அளவில் மூன்றாவது அணி என்ற பேச்சுவார்த்தை கள் பிரமாண்டமாகக் கிளம்பினால் அப்போது மார்க்சிஸ்ட்டுகள் தவிர்க்க முடியாமல் உள்ளே நுழைக்கப்படலாம்.

காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதற்கான எந்த முயற்சியும் ஜெயலலிதா எடுக்கவில்லை. 'காங்கிரஸுடன் சேர்ந்தால் அதனுடைய நெகட்டிவ் இமேஜ் மொத்தத்தையும் சேர்த்துச் சுமக்க வேண்டிவரும்’ என்பது அவருடைய முடிவு. பாரதிய ஜனதா தலைமையில் இருப்பவர்கள் அனைவருமே இவருக்கு நட்பு சக்திகள். ஜெய லலிதாவுடன் அணி சேருவதற்கு அவர்கள் அதீத ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களு டன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க வேண்டிவரும் என்று ஜெய லலிதா தயங்குகிறார். ஆனால், பிரதமர் வேட் பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டால், முடிவு எடுப்பதில் தனக்குச் சிக்கல் வரும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்.

மோடி பிரதமர் வேட்பாளராக இருக்கும்போது, இன்னொரு பிரத மருக்காக மூன்றாவது அணி சார்பில் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைக்கிறார். அப்படி ஒரு நிலை வந்தால், கம்யூ னிஸ்ட்டுகள் இவரோடு இருக்க முடியாது. 1998 தேர்தலைப் போல பி.ஜே.பி., ம.தி.மு.க. கொண்ட அணியை ஜெயலலிதா அமைக்கலாம். எதிர் அணி பலவீனமாக இருப்பதால், அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். ''அது பெரிய ரிஸ்க். மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருப்பதால் அதிருப்தி வாக்குகள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே, கூட்டணி அமைப்பதுதான் நல்லது'' என்றும் அ.தி.மு.க-வினர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

குறைந்தது 25 எம்.பி-க்களையாவது அ.தி.மு.க. சார்பில் டெல்லிக்கு அனுப்பியாக வேண்டும் என்ற முடிவோடு கணக்குப் போட ஆரம்பித்துள்ளார் ஜெயலலிதா!

எம்.பி. தேர்தல்... யாரோடு யார்?

குழப்பத்தில் தி.மு.க.!

ரண்டு மாதங்களுக்கு முன்பு வரை தெளிவாக இருந்தார் கருணாநிதி. காங்கிரஸ் தன்னோடு இருக்கிறது, விஜயகாந்தையும் அது அழைத்து வந்துவிடும் என்று நினைத்தார். ஜெயலலிதா தனித்துப் போட்டி என்ற அறிவிப்பும் அவருக்கு அளவுக்கு மீறிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஈழத் தமிழர் விவகாரம், அத்தனையையும் திருப்பிப் போட்டுவிட்டது. ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் கருணாநிதி. மத்திய அரசு இதனை ஆதரிக்காது என்று நினைத்தோ, என்னவோ கூட்டணியில் இருந்து கருணாநிதி விலகினார். 'மாணவர் போராட்டத்தால் காங்கிரஸ் மீதான எதிர்ப்பு பலமாகிவிட்டது. அவர்களோடு ஓட்டுக் கேட்டுப் போக முடியாது’ என்று கருணாநிதி சொன்னார். மத்திய ஆட்சிக்குத் தந்த ஆதரவை விலக்கிக்கொள்ளும் முடிவில், கருணாநிதியைவிட ஸ்டாலின்தான் உறுதியாக இருந்தார். அனைத்து இடங்களிலும் போய், 'காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை’ என்று அவர்தான் சொல்லியும் வருகிறார். ஐ.நா-வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்த பிறகு, கருணாநிதி மன தில் ஒருவித ஊசலாட்டம் இருப்ப தாகவும் சொல்லப்படுகிறது. 'நாங்கள் விலகியதால் என்ன நடந்துவிட்டது?’ என்ற தொனியில் அவர் பேச ஆரம்பித்துள்ளார். இருந்தாலும், மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் அவரது இமேஜ் அதல பாதாளத்துக்குப் போய்விடும் என்பதால், அந்தப் பாதை அடைக்கப்பட்டுவிட்டது. இப்போது விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே அவரோடு இருக்கிறது.

'காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைத்துள்ளீர்கள்?’ என்று கேட்டபோது எல்லாம், 'மதவாத பா.ஜ.க. வராமல் இருப்பதற்காகத்தான்’ என்று கருணாநிதி காரணம் சொல்வார். 1999 முதல் 2004 வரை அந்தக் கூட்டணில் இருந்தவர்தான் கருணாநிதி. எனவே, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேரலாமா என்றும் சிலர் டெல்லியில் தூது படலங்கள் நடத்திவருகிறார்கள். மூன்றாவது அணி என்ற ரிஸ்க்கை இப்போது எடுக்க கருணாநிதி தயாராக இல்லை. இரண்டு தேசியக் கட்சிகளும் வேண்டாம் என்றால், விஜயகாந்து டன் கூட்டணிவைக்கும் ஆசை கருணாநிதிக்கு அதிகம் இருக்கிறது. ஸ்டாலின் இந்தக் கருத்தை ஆரம்பத்தில் முன்வைத்தபோது கருணாநிதி அதனை ஆதரிக்கவில்லை. ஆனால், இப்போது வேறு வழியில்லை. எனவே, வெளிப்படையாக விஜயகாந்துக்கு அழைப்புவிட ஆரம்பித்துள்ளார். 'எத்தனை அவதூறு வழக்குகள்தான் போடுவார் கள். இந்த வழக்குகளுக்கு முடிவுகட்ட ஒன்றுகூடிப் பேசுவோம்’ என்று முதல் தூண்டில் போட்டார். அடுத்து, 'சட்டசபையில் தே.மு.தி.கழக எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுப்போம் வாருங்கள்...’  என்று சொல்லிவருகிறார் கருணாநிதி. ஆனால், இவை எதற்கும் விஜயகாந்த் பதில் சொல்லவில்லை. பொதுவாக, ஆளும்கட்சிக்கு எதிராகச் சிறு இயக்கங்களை இணைத்து, கூட்டணி அமைத்துப் போராட்டங்கள் நடத்துவது கருணாநிதியின் வழக்கம். தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளை அப்படிச் சேர்க்க கருணாநிதி திட்டமிடுகிறார். அவர்களும் வரவில்லை என்றால், இறுதியில் என்ன செய்வது என்ற குழப் பம் கருணாநிதிக்கு இருக்கிறது.

விரக்தியில் தே.மு.தி.க.!

ட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளைத் தூக்கிக் கொடுத்து தே.மு.தி.க-வை எதிர்க் கட்சி அந்தஸ்துக்கு உயர்த்திய ஜெயலலிதா, அப்படி ஒரு கட்சியே இருக்கக் கூடாது என்று இன்று கங்கணம் கட்டிச் செயல்பட்டுவருவதால் எரிச்சலில் துடிக்கிறார் விஜயகாந்த். 'உங்கள் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திரும்பவும் போட்டியிடத் திராணி உண்டா?’ என்று இவர்களைப் பார்த்துச் சவால்விட்டது அ.தி.மு.க. அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்குப் பாடம் கற்பிப்பது ஒன்றே தன்னுடைய அரசியல் லட்சியமாகக்கொண்டு காங்கிரஸ் - தி.மு.க. அணியுடன் சேருவதற்கு விஜயகாந்த் நினைத்தார். மூன்று கட்சியும் சேர்ந்தால் நிச்சயம் அ.தி.மு.க. பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதும் மூன்று மாதங்களுக்கு முந்தைய நிலைமையாக இருந்தது. ஆனால், ஈழ விவகாரம் காங்கிரஸையும் கருணாநிதியையும் பிரித்துவிட்டது. இந்த நிலைமை விஜயகாந்துக்குச் சிக்கல் ஆனது. கருணாநிதியுடனோ காங்கிரஸுடனோ தனி யாகக் கூட்டணி அமைப்பது வெற்றி ஃபார்முலா அல்ல என்று விஜயகாந்த் நினைக்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் அவரிடம் தூது அனுப்பிவிட்டார்கள். தி.மு.க-வும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்திவிட்டது. ஆனாலும், விஜயகாந்த் யாருக்கும் எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. 'இவங்களோடு சேர்ந்து தோற்றால் அது இன்னும் கேவலமாக ஆகிவிடும்’ என்று நினைக்கும் அவர், ''தனியாக நிற்போம். செல்வாக்கு இருக்கிற ஆள் ஜெயிக்கட்டும். தோற்றாலும் தனியா நின்னதால் தோத்தாங்க என்ற பெயராவது கிடைக்கும்'' என்று சொல்லிவருகிறாராம்.  

அச்சத்தில் காங்கிரஸ்!

ன்னந்தனியாக நிற்கிறது காங்கிரஸ். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியிலேயே சிலர் சொல்லியபோதெல்லாம், ''தி.மு.க-வுடன்தான் கூட்டணி. அதில் எந்த மாற்றமும் இல்லை'' என்று உறுதியாகச் சொல்லிவந்தவர் சோனியா. இப்படித் திடீரென கருணாநிதி கம்பியை நீட்டுவார் என்று சோனியா எதிர்பார்க்கவில்லை. மறுபடியும் தி.மு.க-வுடன் கூட்டணி சேரலாம் என்ற நம்பிக்கை இன்னமும் டெல்லி மேலிடத் தலைவர்கள் சிலரிடம் இருக் கிறது. அதனால்தான் கருணாநிதியையோ தி.மு.க-வையோ விமர்சிக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை விவகாரத்தை வைத்து ஜெயலலிதா தாக்குதல் நடத்தும்போது, தி.மு.க. உடன் இருப்பதே நல்லது என்றும் காங்கிரஸ் நினைக்கிறது. கருணாநிதி தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தால், இவர்களுக்கும் விஜயகாந்த்தான் நம்பிக்கை நட்சத்திரம். 'இரண்டு கட்சிகளும் ஆளுக்கு பாதிப் பாதி தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வோம்’ என்று இப்போதே காங்கிரஸ் பிரமுகர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். டாக்டர் ராமதாஸைத் தங்களோடு சேர்த்துக்கொள்ளவும் சிலர் முயற்சிகள் எடுத்துவருகிறார்கள்.

எம்.பி. தேர்தல்... யாரோடு யார்?

யாருடன் சேருவது என்பதைவிட, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் எடுக்க இருக்கும் நிலைப்பாடு காங்கிரஸ் மேலிடத்தை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. ஈழத் தமிழர் விவகாரத்தைக் கிளப்பி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளார் வாசன் என்று மேலிடம் உறுதியாக நம்புகிறது. ஜனாதிபதி, பிரதமர், சோனியா, ராகுல் என அனைவரையும் தனித்தனியாகப் பார்த்துத் தன்னுடைய கோபத்தைப் பதிவுசெய்துவிட்டு வந்துவிட்டார் அவர். தமிழ்மாநிலக் காங்கிரஸை மீண்டும் தட்டி எழுப்பினால், அது தமிழகக் காங்கிரஸை மொத்தமாக முடித்துவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

அமைதியாக பா.ஜ.க.!

காங்கிரஸ் ஆட்சியை இழந்தால் அந்த வாய்ப்பு பாரதிய ஜனதாவுக்குத்தான் இருக்கிறது. ஆனால், அந்த உற்சாகம் தமிழக பா.ஜ.க-வுக்கு இல்லை. அனைத்து அரசியல் பரபரப்புகளையும் அவர்கள் வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு கொள்கைரீதியாக சரியான கூட்டணி ஜெயலலிதாதான். ஆனால்,  தேர்தலுக்குப் பிறகு உங்களை ஆதரிக்கிறேன் என்று அவர் சொல்லிவிட்டார். அதனால் பா.ஜ.க. தமிழகத்தில் இப்போதைய சூழ்நிலையில் தனித்துப் போட்டியிடும் நிலையிலேயே இருக்கி றது. தங்களுக்குச் சாதகமான ஐந்தாறு தொகுதி களில் மட்டும் போட்டியிடலாம் என்று இவர் கள் நினைக்கிறார்கள். கடைசிக் கட்டத்தில் தங்களது மேலிடம் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கும் என்பதும் இவர்களது எதிர்பார்ப்பு.

இப்படி ஆளுக்கொரு பக்கமாக மண்டையை உடைத்துக்கொண்டு இருக்கின்றன கட்சிகள். மக்களும் இன்னொரு சினிமா பார்க்கத் தயாராக வேண்டியதுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism