Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

திருவட்டாறு கோயில் திருவிழாவுக்காக லாரியில் கொண்டுசெல்லப்பட்ட விளம்பர பேனரின் கம்புகள் கழுத்தில் பாய்ந்ததால், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர்விட்ட காட்சி, எளிதில் மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும், ஆன்மிகத் தலைவர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் குளிர்விப்பதற்காக விளம்பரப் பலகைகள் நிறுவும் கலாசாரம்... சமீப காலமாக வெறி பிடித்த வேகத்தில் பரவிவருகிறது. நடைபாதைகளை அடைத்துக்கொண்டும், போக்குவரத்து சிக்னல்களை மறைத்துக்கொண்டும், மின்சாரக் கம்பங்களை உரசிக்கொண்டும் படபடக்கும் இந்த 'காக்கா' பேனர்கள், யாரோ பிரபலத்தை உச்சியில் தூக்கிவைப்பதற்காக... அப்பாவிப் பொதுஜனத்தின் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகின்றன.

சென்னையில், முதல்வர் பயணிக்கும் பாதைகளில், அவருடைய 'கடைக்கண்' பார்வையில் விழும் நோக்கத்துடன்... நடைபாதையோடு சாலையின் ஒரு பகுதியையும் சேர்த்து விழுங்கி... வாகன ஓட்டிகளைத் தினம் தினம் தடுமாறச் செய்கின்றன இந்தப் 'போற்றி' விளம்பரங்கள்!  

மரியாதையும் அன்பும் காட்டுகிறோம் என்ற பெயரில், தன் கட்சிக்காரர்கள் நிறுவும் இந்த பேனர்கள் எல்லாமே... ஏதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்த்துதான் என்பது முதல்வருக்குத் தெரியாதா? இதை அவர் தொடர்ந்து அனுமதித்தால், விரும்பி வரவேற்பதாகவே கொள்ளப்படும். விதிகளை மீறிப் புகழ் பாடும் இந்தப் பலகைகளை இனி யாரும் வைக்கக் கூடாது என்று முதல்வர் கண்டிப்பாரா? மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அனுமதிப்பாரா?

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி! கோட்டைத் தலைவிக்கே 'காக்கா' பேனர் கிடையாது என்று தடுத்துவிட்டால், மற்ற கட்சிகளின் நிகழ்ச்சி தொடங்கி, காதுகுத்து விழா வரை யாருக்குத்தான் சாலைகளை ஆக்ரமிக்கும் துணிச்சல் வரும்?