Published:Updated:

அ.தி.மு.க-வுடன் கலர் ஒற்றுமை... தி.மு.க-விடம் கருத்து வேற்றுமை!

பி.ஜே.பி. பகிரங்கம்

அ.தி.மு.க-வுடன் கலர் ஒற்றுமை... தி.மு.க-விடம் கருத்து வேற்றுமை!

பி.ஜே.பி. பகிரங்கம்

Published:Updated:
##~##

த்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப் போகும் எதிர்பார்ப்பு பாரதிய ஜனதாவுக்கு உள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரான இல.கணேசனைச் சந்தித்தோம். 

''தேசியக் கட்சியான பாரதிய ஜனதா தமிழகத்தில் பெரும் வளர்ச்சியை அடையவே இல்லையே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' பாரதிய ஜனதா கட்சி ஒரு லட்சியத்துக்காக பாடுபடுகிற கட்சி. நாங்கள் அமைப்பு சார்ந்து இயங்குகிறோம். எங்களுடைய வளர்ச்சி மெள்ள இருந்தாலும் உறுதியாக இருக்கிறது.அனேகமாக மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவையாவது மக்கள் பிரச்னைக்காகப் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஏனைய மதத்து மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகள் இந்து மதத்தைச் சார்ந்த மாண வர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். மது ஒழிப்பை வலியுறுத்தி கன்னியாகுமரியில் மகளிர் பேரணி நடத்தினோம். இப் படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!''

அ.தி.மு.க-வுடன் கலர் ஒற்றுமை... தி.மு.க-விடம் கருத்து வேற்றுமை!

''மோடிதான் பிரதமர் வேட்​பாளரா?''

''மோடிதான் பிரதமர் வேட்​பாளர் என்று அறிவிக்கப்​படவில்லை. அதற்காக அவரை அறிவிக்க மாட்டோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், மோடி என்ற பெயர் பரவியது எப்படி? மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பது மாத்திரமல்ல அவர்தான் அடுத்து பிரதமராக வருவார் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அவர் மக்கள் வேட்பாளர். ஆனால், பாரதிய ஜனதா அதிகாரப்பூர்வமாக இன்னும் சொல்லவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டக் குழு செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று என்னவென்றால், மக்கள் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படும் மோடியை அங்கீகரித்து அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி. உரிய நேரத்தில் அறிவிப்போம்.''

''தமிழ்நாட்டில் உங்கள் நிலை என்ன? யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறீர்கள்?''

''ஒட்டுமொத்த ஊழல்மயமாகி விட்ட, ஊழ​லுக்கு மறுபெயர் ஆகிவிட்ட மத்தியில் ஆளும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை, தெளிவாகச் சொன்னால் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்கு நாங்கள் தயார் என்று முன்வரக்கூடிய எந்தக் கட்சியாக இருந்தாலும் அதோடு கூட்டணி வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.''

''அதற்கு தயாராக இருக்கிறது என்றால் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துக் கொள்வீர்களா?''

''அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை தலைமையின் அனுமதி இல்லாமல் அந்தக் கட்சியில் ஓர் அணுவும் அசையாது என்பதுதான் உண்மை. நாற்பதிலும் வெற்றி பெறுவோம் என்பது மாத்திரமல்ல, அந்த அம்மையார்தான் பிரதமர் என்றெல்லாம் அ.தி.மு.க-வினர் விளம்பரம் செய்கிறார்கள். அது, அந்த அம்மையாரின் அனுமதி இல்லாமல் நடந்து இருக்காது. ஆக, அவர்கள் தனித்துப் போட்டியிட விரும்புகிறார்கள். கூட்டணியைப் பற்றி அவர்கள் சிந்திக்கவும் இல்லை, பேசவும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் அந்த மாதிரி வாய்ப்பு இல்லை. ஆனால், மக்கள் மத்தியில் இந்தக் கேள்வி ஏன் வருகிறது? ஒருவகையில், ஏற்கெனவே பாரதிய ஜனதாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் நாடாளுமன்றத்தில் ஒரு கலர் ஒற்றுமை இருக்கிறது. அ.தி.மு.க. எங்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாவிட்டாலும் கூட, பல பிரச்னைகளில் ஒன்றாகச் சேர்ந்துதான் குரல் கொடுக்கிறோம். இந்தக் கலர் ஒற்றுமை இருக்கிறதே அது, தேர்தலில் கூட்டணியாக மாறுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை, எதிர்காலத்தில் இந்தத் தேர்தல் பற்றிக் கணித்துச் சொல்பவர்கள் எல்லாம் 'இவர்தான் பிரதமராக வருவார், இந்தக் கட்சிதான் ஆட்சிக்கு வரும்’ என்று தெரிவித்தால்  பிறகு மனம் மாறினாலும் மாறலாம்.''

''ஒருவேளை, அ.தி.மு.க. மனம் மாறவில்லை என்றால், பாரதிய ஜனதா தனித்துப் போட்டியிடுமா?''

''தனித்துப் போட்டியிட்டு நாற்பது தொகுதி​களிலும் வெற்றி பெறுவோம் என்று பேச நாங்கள் தயாராக இல்லை. மக்களும் அதை நம்ப மாட்டார்கள். ஆனால், நாங்கள் அடை​யாளம் கண்டிருக்கிற சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. அந்தத் தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துவோம்.''

''தி.மு.க. அழைப்பு விடுத்தால்...?''

''கொள்கை ரீதியாக அல்லது சில குறிப்பிட்ட பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்கிற அம்சத்தில் அ.தி.மு.க-வின் பெருவாரியான கருத்துக்கள் பாரதிய ஜனதாவின் கருத்தோடு ஒத்துப் போகிறது. ஆனால், தி.மு.க-வைப் பொறுத்தவரை அதன் பல்வேறு கொள்கைகள் எங்களோடு முரண்பட்டு இருக்கின்றன. தி.மு.க-வே கூட பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பலமுறை யோசிக்கும். முன்பு கூட்டணி வைத்திருந்தோம் என்றால், அந்த நேரத்தில் அவர்களுக்கு அ.தி.மு.க. பிரதான எதிரி. எங்கள் ஆட்சிக்கு அ.தி.மு.க. அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு, 'நான் கைகொடுக்கிறேன்’ என்று, தி.மு.க. முன்வந்தது. அது, 'ஆபத் தர்மா’. இன்றைய தேதியில் அந்த மாதிரி எண்ணம் பாரதிய ஜனதாவுக்கு இல்லை.''

''ராகுல் பற்றி உங்களது அபிப்ராயம் என்ன?''

''ராகுலின் திறமை என்ன? ராசி என்ன என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர், பீகார் முழுவதும் சுற்றி கடுமையாக உழைத்தார். காங்கிர​ஸுக்கு 4 இடங்கள் கிடைத்தன. உத்தரப் பிரதேசத்தில் சுற்றிச் சுழன்றார். காங்கிரஸ் 4-வது இடத்​துக்கு வந்தது. தமிழ்நாட்டிலும் பிரசாரம் செய்தார். இங்கு மட்டும் ஏனோ ஐந்து இடங்கள் கிடைத்துவிட்டன. அவருடைய அதிர்ஷ்டம் அதுதான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி 4-வது இடத்துக்கு வந்தால் கூட ஆச்சர்யம் இல்லை. வேறு ஏதேனும் பிராந்திய கட்சிகள் 2, 3-வது இடத்துக்கு வந்தாலும் வரும். அம்மாவுக்குப் பிள்ளை, அந்தக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதைத் தவிர வேறுதகுதி ராகுலுக்குக் கிடையாது.''

- எஸ்.கோபாலகிருஷ்ணன்

படம்: கே.ராஜசேகர்