Published:Updated:

மிஸ்டர் கழுகு: 'மோடி ஓகே'

மிஸ்டர் கழுகு: 'மோடி ஓகே'

மிஸ்டர் கழுகு: 'மோடி ஓகே'

மிஸ்டர் கழுகு: 'மோடி ஓகே'

Published:Updated:
மிஸ்டர் கழுகு: 'மோடி ஓகே'
##~##

ழுகார் உள்ளே நுழையும்போதே பரபரப்பாக இருந்தார். ''நாடாளுமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் இப்போதே தொடங்கி விட்டன'' என்று, தன்னுடைய பரபரப்புக்குக் காரணமும் சொன்னார் கழுகார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சென்னை திருவான்மியூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 'தம்பி விஜயகாந்த்’ என்று பாசத்தோடு விளித்திருப்பதன் மூலமாக தே.மு.தி.க-வை தனது அணிக்கு கொண்டுவரும் காரியத்தை, கருணாநிதி தொடங்கிவிட்டார்.

'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் திருவான்மியூரில் நடந்த பொதுக்​கூட்டத்தில்தான் கருணாநிதி இப்படி பேசியிருக்கிறார். முதலில், திருவான்மியூர் கூட்டத்தைப் பற்றி சொல்லிவிடுகிறேன். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அதில், 'இந்திய மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை அரசு எக்காரணம் கொண்டும் தடுக்க முடியாது. ஒப்பந்தந்தின் மூலம் கச்சத்தீவை இலங்​கைக்கு விட்டுக்கொடுக்க முடியாது. விட்டுக்கொடுத்தது சட்டரீதியாக செல்லாது. 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை பிரகடனப்படுத்த டெசோ அமைப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்’ என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை விளக்கும் வகையில் சென்னை திருவான்மியூரில் ஏப்ரல் 24-ம் தேதி பொதுக்கூட்டம் நடக்கும்; டெசோ உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே தேதியில் அதே இடத்தில், 'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.''

''டெசோ கூட்டம் திடீரென்று ரூட் மாறியது ஏன்?''

''இதுபற்றிய அறிவிப்பு ஏப்ரல் 22-ம் தேதிதான் முரசொலி​யில் வெளியானது. ஏப்ரல் 17-ம் தேதி, தி.மு.க. உறுப்பினர்கள் 19 பேர் இந்த சட்டமன்றக் கூட்டத்​தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்​பட்டது அவர்களுக்கு கடும் அதிருப்தியாம். முதல்​வரின் போலீஸ் மானியக் கோரிக்கையில் தி.மு.க. உறுப்பினர்களை பேசவிடக் கூடாது என்றுதான் இந்த நடவடிக்கையை எடுத்தாக அவர்கள் சொல்​கிறார்கள். எதிர்க் கட்சிகள் வரிசையில் இருக்கும் மற்றக் கட்சிகள் கோரிக்கை வைத்து, இந்த சஸ்பெண்டை ரத்துசெய்வார்கள் என்று தி.மு.க. தரப்பு எதிர்பார்த்ததாம். ஆனாலும், 19-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை ஒன்றும் நடக்கவில்லை. அந்த நிலையில்தான் இந்தக் கூட்டத்துக்கான அறிவிப்பு வெளியானதாம். இருந்தாலும், 23-ம் தேதி போலீஸ் மானியக் கோரிக்கையில் கலந்துகொள்ளத் தேவையான குறிப்புகளை ஸ்டாலின் தயார் செய்திருந்தார். 'சஸ்பெண்டைக் கண்டித்து நீயும் சபைக்குப் போக வேண்டாமே?’ என்று கருணாநிதி சொன்னதால்தான், போலீஸ் மானியக் கோரிக்கையில் ஸ்டாலின் பேசவில்லையாம். திருவான்மியூர் கூட்டத்தில் அந்தக் குறிப்புகள் அடிப்படையில்தான் பேசினார். துரைமுருகன் பேச்சில் வழக்கம்போல காமெடியும் நையாண்டியும் புகுந்து விளையாடியதாம்...''

''காமெடி பண்ணுவது அவருக்கு கைவந்த கலை ஆச்சே?''

''கூட்டத்துக்கு கருணாநிதி வந்து அரைமணி நேரத்துக்குப் பிறகுதான் துரைமுருகன் வந்தார். 'டிராபிக் ஜாம்... அதான் லேட்’ என்று அதற்கு காரணத்​தையும் கூறினார். 'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்று இந்தக் கூட்டத்​துக்குத் தலைப்பு வைத்துள்ளனர். ஜனநாயகம் படும்பாட்டில் நாங்களும் படாதபாடு படுகிறோம். பத்திரிகையாளர்களும் படாதபாடு படுகிறார்கள். அப்படியரு பாடுபடும் காரியத்தை செய்கிறார்​கள். கிராமங்களில் வீட்டில் கட்டியுள்ள மாடுகள் மேய்வதற்கு காட்டுக்குச் செல்லும்போது, ஊர் எல்லையில் ஊன்றியுள்ள கல்தூணில் தேய் தேயென்று தேய்ப்பதுபோல, அவர்களுக்கு அரிப்பு எடுத்தால் எங்கள் தலைவரைதான் தாக்குகிறார்கள்’ என்று கலகலக்க வைத்தவர், சட்டசபையில் எப்படி கேள்வி கேட்கிறார்கள், எப்படி அமைச்சர்கள் பதில் சொல்கிறார்கள் என்பதை நடித்தே காண்பித்தார்.''

''கூட்டணிப் பேச்சுக்கு வாரும்!''

''தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைவதில் கருணா​நிதி ஆர்வமாக இருக்கிறார். இதை அரசல்புரசலாக பலதடவை சொல்லியும் விட்டார். 'தினத்தந்தி’ அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவந்த கருணாநிதியும் விஜயகாந்தும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான், 'திராவிட முன்னேற்றக் கழகத்தையும் வேறு சில எதிர்க் கட்சிகளையும் அடக்குவதற்கு, நான் பச்சையாகச் சொல்கிறேன்... தம்பி விஜயகாந்த் கட்சியை ஒழிப்பதற்கு நடைபெறு​கின்ற முயற்சிகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்’ என்று பேசியிருக்கிறார். விஜயகாந்துக்கு வீசப்படும் வலையாக இது உள்ளது. இதுபற்றி விஜயகாந்த் எடுக்கும் முடிவைப் பொறுத்தே கூட்டணி அமையும்.''

''ம்!''

மிஸ்டர் கழுகு: 'மோடி ஓகே'

''அடுத்து, அ.தி.மு.க. அணிக்கு வருகிறேன். 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று முடிவெடுத்திருந்த ஜெயலலிதா, அதில் இருந்து மாறி​விட்டார். கூட்டணி அமைப்பது என்றும் முடிவுக்கு வந்துவிட்டார். ம.தி.மு.க. இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்த்துக்கொள்ளும் திட்டம் அவருக்கு இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் அவர் மனதை மாற்றியதாகச் சொல்கிறார்கள். 'பிரதமர் வேட்பாளர் என்று யாரையும் அறிவிக்காமல் தேர்தலைச் சந்தித்தால், அதனால் பயன் இருக்குமா?’ என்பதுதான் ஜெயலலிதா மனதில் எழுந்துள்ள சந்தேகம். காங்கிரஸ் கூட்டணியை ஆரம்பத்திலேயே அவர் நிராகரித்துவிட்டார். மூன்றாவது அணியில் இருப்பவர்களில் பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதே பெரும் மோதலாக அமையும் என்பதால், பி.ஜே.பி-யை ஆதரித்துவிடுவதே நல்லது என்று ஜெயலலிதா முடிவெடுத்து விட்டதாகச் சொல்கிறார்கள். 'சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க வேண்டி வரும் என்பதால், சிறுபான்மையினர் வாக்கு சதவிகிதம் குறித்து சில புள்ளி விவரங்களைத் திரட்டினர். ராமநாதபுரம், புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்களாக சிறுபான்மையினர் இருப்பார்கள். எனவே, அதைப் பற்றி யோசிக்காமல் முடிவெடுக்கலாம்’ என்றும் சொல்லப்பட்டதாம். அதேநேரத்தில் பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்தால் தேசிய அளவில் முக்கியத்துவ​மும் பி.ஜே.பி-யின் செல்வாக்கும் சேரும் என்றும் ஜெயலலிதா நினைக்கிறாராம்.''

''ஓஹோ!''

''பாரதிய ஜனதா ஆதரவு என்று முடிவெடுத்தால், 'நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர்’ என்று பகிரங்கமாக அறிவிப்பார் என்றும் சொல்கிறார்கள். சட்டமன்றக் கூட்டத் தொடர் மே 16-ம் தேதி வரை நடக்கிறது. அதற்குப் பிறகு, தனது கூட்டணி அறிவிப்பு​களைச் செய்து, தேர்தல் பணிகளைத் தொடர்வதற்கும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாராம். 'மே மாதத்துக்கு முன் பிப்ரவரியிலேயே நாடாளுமன்றத் தேர்தல் வரலாம்’ என்பதும் டெல்லியில் இருந்து அவருக்குக் கிடைத்துள்ள தகவல். அதனால், துரிதமாக காரியங்களை ஜெயலலிதா தொடர இருக்கிறாராம்!'' என்ற கழுகார், சிறிது இடைவெளிவிட்டு ஆரம்பித்தார்.

''துறைவாரியாக மானியக் கோரிக்கை நடக்கும்போது அந்தந்த துறை சார்பில் கோட்டையில் உள்ள துறை ஊழியர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் மதியம் பிரியாணி, சைவ உணவு வழங்குவார்கள். பிரபலமான ஹோட்டல்களில் இருந்துதான் பிரியாணி வாங்குவார்கள். இதைப் பார்த்த அமைச்சர் ஒருவரின் உறவினர் ஒருவரே திடீரென்று பிரியாணிக் கடையைத் தொடங்கி விட்டாராம். அந்தக் கடைக்கு 2,300 பொட்டலம் பிரியாணி சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்து விட்டார்களாம். அதற்கு ஆகும் ஐந்து லட்ச ரூபாய் செலவை குறிப்பிட்ட நிறுவனம் ஏற்க வேண்டும் என்று அமைச்சர் சொன்னாராம். அதற்கு அந்த நிறுவனத்தின் எம்.டி. மறுத்து விட்டாராம். அதனால், கோபம் அடைந்த அமைச்சர், அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை மாற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு நோட் வைத்தாராம். அந்தக் கோப்பை தலைமைச் செயலாளர் திருப்பி அனுப்பிவிட்டாராம். இந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வழக்கமாக நடக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றிய ரகசிய அறிக்கை குறித்த கோப்பு அமைச்சருக்கு வந்துள்ளதாம். அதில், தன்னை எதிர்த்துப் பேசிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கோப்பில் கையெழுத்திடாமல் அப்படியே வைத்துள்ளாராம் அமைச்சர்.''

''பிரியாணி மேட்டர் பெரிதாக இருக்கிறதே?''

''மாணவர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தல் முதல்​முறையாக 2011-ம் ஆண்டு நடந்தது. அதில், ப.சிதம்பரம் ஆதரவாளரான பிரபுதாஸ் வெற்றிபெற்றார். அந்தக் குழுவின் பதவிக்காலம் முடிந்து விட்டதால், 32 மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் 18 மாவட்டங்களிலும், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் 11 மாவட்டங்களிலும், தங்கபாலு, மாணிக் தாகூர், நீலகிரி பிரபு ஆகிய கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் தலா ஒரு மாவட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு இடையே மாணவர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 23-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. ஜி.கே.வாசன் ஆதரவாளரான கடலூர் கலையரசனும், ப.சிதம்பரம் ஆதரவாளரான திருச்சி ராமநாதனும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கையில் 800 வாக்குகள் வித்தியாசத்தில் கலையரசன் முன்னிலை வகித்தார். அவர்தான் தலைவர் என்று அறிவிக்க இருந்த நேரத்தில், ப.சிதம்பரம் அணியினர் தேர்தல் அதிகாரி சனானுல்லாகானிடம் நள்ளிரவில் புகார்மனு கொடுத்தனர். அதில், கலையரசன் கல்லூரி மாணவர் அல்ல என்று குறிப்பிட்டிருந்தனர். அதனால், தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.''

''அப்படியா?''

''ஜி.கே.வாசன் அணியைச் சேர்ந்த கடலூர் கலையரசன், பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பதாகவும், அதற்கு ஆதாரமாக ஒரு ஐ.டி. கார்டையும் கொடுத்திருந்தார். அந்த ஐ.டி. கார்டு போலியானது என்பதுதான் சிதம்பரம் கோஷ்டியினரின் குற்றச்சாட்டு. ஆனால் வாசன் தரப்பினரோ, 'அவர் ஏற்கெனவே பி.ஏ. முடித்து விட்டார். மாணவர் காங்கிரஸில் தொடர வேண்டும் என்பதற்காகவே பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். அதற்கான போனஃபைடு சர்டிஃபிகேட்டை வாங்கி, இ-மெயிலில் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி விட்டோம்’ என்கிறார்கள். மேலும், 'தேர்தல் முடிவை நிறுத்திவைக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை. அதுபற்றி தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.

''காங்கிரஸில் தேர்தல் நடப்பதே பெரிய விஷயம். அதில் இப்படியும் குழப்பங்களா?''

''பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம் பற்றி உமது நிருபர் விரிவாக எழுதி இருப்பார். நான் சில விஷயங்களைச் சொல்கிறேன்.

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் வெடித்தது பைப் வெடிகுண்டு. தமிழ்நாடு பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் பொருத்தி வெடிக்க வைக்கப்பட்டிருந்தது. விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்ததுமே, போலீஸின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பிவிட்டது. ஏனென்றால், பைப் வெடிகுண்டு தயாரிக்கும் வித்தை, தமிழகத்தின் மூளைச் சரக்கு என்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் அனாதையாகக் கிடந்த செல்போனை ஆய்வுசெய்தபோது, அந்த செல்போனுக்கு தமிழகத்தில் இருந்து அதுவும் ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து மட்டும் கடந்த ஒன்றரை மாதங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருப்பது தெரியவந்தது. இது, பெங்களூரு குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் தமிழகத்தில்தான் பதுங்கியுள்ளனர் என்பதை ஆணித்தரமாக உறுதிசெய்தது. தமிழகத்தில் உள்ள அந்த மர்ம செல்போன் யாருடையது என்ற தகவலைத் திரட்டியபோது உருப்படியாக ஒன்றும் சிக்கவில்லை. போலி ஆவணங்கள் கொடுத்து அந்த எண் வாங்கப்பட்டு இருந்தது. பைப் வெடிகுண்டில் கைதேர்ந்த பழைய குற்றவாளிகளின் பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்களுடைய செல்போன் விவரங்களும் மர்ம செல்போன் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது வழக்கின் முடிச்சு முற்றிலுமாக அவிழ்ந்தது. கிச்சான் புகாரியின் செல்போனும், பெங்களூருவில் குண்டுவெடித்த இடத்தில் கிடந்த செல்போனுக்கு பேசிய தமிழகத்து செல்போனும் ஒரே டவர் எல்லையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக இருந்துள்ளன. கிச்சான் புகாரி எங்கெல்லாம் இடம் பெயர்ந்தாரோ, அங்கெல்லாம் மர்ம செல்போனும் இடம்பெயர்ந்துள்ளது. உடனே, கட்டம் கட்டி அவரைத் தூக்கியது போலீஸ் என்கிறார்கள்.''

''அப்படியா?''

''பெங்களூருவில் வெடித்த குண்டு தமிழக சட்டசபையை கலக்கப்போகிறதாமே?''

''ஒரு மாநில போலீஸார், தங்கள் எல்லையில் உள்ள குற்றவாளிகளை வேறு மாநில போலீஸாரிடம் அவ்வளவு சீக்கிரம் ஒப்படைக்க மாட்டார்கள். அது ஒருவித கௌரவப் பிரச்னை. நாம் தோற்று​விட்டதாக நாமே ஒப்புக்கொள்வதுபோல் அர்த்தமாகிவிடும். ஆனால், கிச்சான் புகாரி விஷயத்தில் அது செல்லுபடி ஆகவில்லை. ஏனென்றால், கர்நாடகா போலீஸ் பக்காவான ஆதாரங்களை தமிழக போலீஸாரின் முன் தூக்கிப்​போட்டுவிட்டு கிச்சான் புகாரியை கொத்திக் கொண்டு போய்விட்டது. தமிழக டி.ஜி.பி-யால்கூட அதைத் தடுக்க முடியவில்லை.

இதையடுத்து, சென்னையில் ரகசிய இடத்தில் கூடிய ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள், தமிழகப் போலீஸார் கிச்சான் புகாரியை பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்மானம் போட்டதுடன், இந்தப் பிரச்னையை சட்டசபையிலும் எழுப்ப வேண்டும் என்றும் திட்டம் வகுத்துள்ளனர். சட்டசபையில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டால், தமிழக அரசின் பாடு திண்டாட்டம்தான். ஏனென்றால், கிச்சான் புகாரிக்கு பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்பு இருந்ததால்தான் கர்நாடகா போலீஸிடம் ஒப்படைத்தோம் என்று அரசாங்கம் சொன்னால், தமிழக அரசின் உளவுத் துறை இந்த விஷயத்தில் தோற்றுவிட்டது என்று தமிழக அரசே ஒப்புக்கொண்டதாக அர்த்தமாகிவிடும். அதேசமயம், பெங்களூரு போலீஸ் கொடுத்த ஆதாரங்களை மறுத்து, 'கிச்சான் புகாரிக்கு இந்த விஷயத்தில் தொடர்பு இல்லை. விசாரணைக்காக மட்டும்தான் அனுப்பி வைத்துள்ளோம்’ என்றும் கூற முடியாது. 'நாங்களாக ஒப்படைக்கவில்லை. அவர்களாக அழைத்துச் சென்றுவிட்டனர்’ என்றும் அரசாங்கம் சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது. மொத்தத்தில் பயங்கரவாதச் சம்பவங்களைத் தடுப்பதற்கு போலீஸ் தவறிவிட்டது.''

''ம்!''

''முதல்வரைச் சந்திக்க ஒரு சாமியார் முயற்சித்து வருகிறாராம். கோயம்புத்தூரில் ஏறக்குறைய 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு நிலவுகிறது. ஆனால், இவரது மையத்துக்கு மட்டும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் சப்ளை ஆகிறது. இதற்குத் தனியாக, அரசு உத்தரவே பிறப்பிக்கப்பட்டு, முழுக்க முழுக்க அரசின் செலவிலேயே சிறுவாணி அணைக்கட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து இவர்களுக்கு மின்சாரம் அளிக்கப்படுகிறதாம். கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட இந்தச் சலுகைகள் இன்று வரை எந்தத் தடையும் இல்லாமல் கிடைக்கிறது. இப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், இதற்கான ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டு நீதிமன்றத்துக்குச் செல்ல முயற்சி செய்கின்றனர். இந்த விவரம் தெரிந்துதான் முதல்வரைச் சந்தித்து முறையிட முயற்சித்து வருகிறாராம்.''

''அடக்கடவுளே!'' என்றோம்.

அதைக் கேட்டுச் சிரித்தபடி கழுகார் விட்டார் ஜூட்!

  முழுநிலவு கலாட்டா!

மிஸ்டர் கழுகு: 'மோடி ஓகே'

பிரச்னைகளுடன் தொடங்கியது வன்னியர் சங்கத்தின் சித்திரை முழுநிலவு விழா. மாமல்லபுரத்தில் கடந்த 25-ம் தேதி நடந்த இந்த விழாவுக்கு வந்த சங்க நிர்வாகிகளில் சிலர், மரக்காணம் அருகே கிழக்குக் கடற்கரை சாலை ஓரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அருகில் இருந்த கிராம மக்களை வம்புக்கு இழுத்ததாகவும் சொல்கிறார்கள். இதனால், கிராம மக்களுக்கும் வன்னியர் சங்க நிர்வாகிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வந்த அரசுப் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது. 4 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல் துறை சம்பவ இடத்துக்கு வந்து, வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சூட்டு கூட்டத்தைக் கலைத்தது. இப்படி கலாட்டாக்களுக்கு மத்தியில்தான் நடந்து முடிந்தது விழா.

 அதிர்ச்சி மரணம்!

சட்டமன்ற நடவடிக்கைகளை பதிவுசெய்வதற்காக சட்டமன்ற செயலகத்தின் சார்பில் நிருபர்கள் இருக்கின்​றனர். அந்தப் பிரிவில் தலைமை நிருபராக இருந்தவர் சுரேஷ்குமார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் பணியாற்றி வந்த சுரேஷ்குமார், கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்து​கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தற்கொலை நடந்திருப்பது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி​யிருக்கிறது. ''சுரேஷ்குமாரின் தற்கொலைக்குப் பணிச்சுமைதான் காரணம். அங்கே இருக்கும் பணியாளர்கள் வேறு துறைக்கு மாற்றப்படுவதால், பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, இருக்கும் ஊழியர்களுக்கு அதிக வேலை குவிகிறது'' என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில். ''உளவுப் போலீஸ் தன்னைப் பின்தொடர்கிறது'' என்று, தற்கொலை செய்வதற்கு முன் தனக்கு வேண்டப்பட்ட சிலரிடம் சொல்லி புலம்பியிருக்கிறாராம் சுரேஷ்குமார். தஞ்சைக்குச் சென்ற அமைச்சர்கள் குழு பற்றிய ஒரு தகவலுக்கும் தற்கொலைக்கும் முடிச்சு போடுகிறார்கள். அதனால்தான் உளவுத்துறை இவரை பின்தொடர்ந்ததாகவும் சொல்கிறார்கள்.