Published:Updated:

புதுச்சேரி: தீவிரமடையும் கொரோனா... மீண்டும் ஊரடங்கு! - அரசு குறிப்பிடும் 32 பகுதிகள்

புதுச்சேரி ஊரடங்கு
புதுச்சேரி ஊரடங்கு

புதுச்சேரி மாநிலத்தில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும்விதமாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதிவரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

190 பேர் உயிரிழப்பு:

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,434-ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 7,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில், மீதமுள்ள 4,483 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190-ஐ தொட்டிருக்கிறது.

புதுச்சேரி கொரோனா சிறப்பு மருத்துவமனை
புதுச்சேரி கொரோனா சிறப்பு மருத்துவமனை

இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிறைந்துவிட்டதால், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திகொள்ள பரிந்துரைத்திருக்கும் சுகாதாரத்துறை, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மட்டும் மருத்துவமனையை அணுகும்படி கூறுகிறது. அத்துடன் தொற்று அறிகுறிகளுடன் புதிதாக வரும் நோயாளிகளை புதுச்சேரியில் இருக்கும் ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பிவைக்கிறது அரசு.

இந்திய அளவில் முன்னேறும் புதுச்சேரி :

மாலை 7 மணி வரை மட்டுமே கடைகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்திருக்கும் அரசு, இம்மாதம் முழுவதும் செவ்வாய்க்கிழமை அன்று தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், `இந்திய அளவில் புதுச்சேரியில்தான் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தது மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது.

புதுச்சேரி கலெக்டர் அருண்
புதுச்சேரி கலெக்டர் அருண்

எனவே, `மீண்டும் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரிக்கைகள் எழுப்பின. ஆனால் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட தொடர்ச்சியான ஊரடங்கு, சுற்றுலாப் பயணிகள் வருகையின்மை உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் தவித்துவரும் புதுச்சேரி அரசு, முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் தயக்கம் காட்டியது.

ஊரடங்கு பகுதிகள்:

இந்நிலையில்தான் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவிவரும் 32 பகுதிகளில் மட்டும் வரும் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் அருண்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகள்:

சண்முகாபுரம்,

தட்டாஞ்சாவடி,

குண்டுப்பாளையம்,

திலாஸ்பேட்,

தென்றல் நகர்,

ஐயப்பன் நகர்,

சக்தி நகர்,

அனிதா நகர்,

அய்யனார் கோயில் தெரு(ஓ.கே பாளையம்),

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

தியாகு முதலியார் நகர்,

முல்லை நகர்,

பெரியார் நகர்,

கங்கையம்மன் கோயில் வீதி,

குறிஞ்சி நகர்,

மடுவுபேட்,

பெத்துச்செட்டிப்பேட்,

தில்லை நகர் முதல் வசந்தம் நகர் வரை,

புதுநகர், கணுவாப்பேட்டை சாலை சந்திப்பு,

ஆர்.கே நகர்,

பிச்சவீரன்பேட், வாய்க்கால் தெருக்கள் 1, 2, 3, 4,

ஜெ.ஜெ.நகர்,

ரெயின்போ நகர்,

குமரகுருபள்ளம்,

கோவிந்தசாலை,

செந்தாமரை நகர்,

சோலை நகர்,

வைத்திக்குப்பம், முத்தியால்பேட்டை நகரப் பகுதி,

முத்தைய முதலியார் தெரு,

புனித ரொசாரியோ தெரு,

காட்டாமணிக்குப்பம் தெரு,

உளவாய்க்கால்,

தர்மாபுரி & பெருமாள் கோயில் வீதி,

பொறையூர் பேட் – புதுநகர்,

பங்கூர்பேட்.

வணிக நிறுவனங்களுக்குத் தடை:

மேலும் அந்த உத்தரவில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மருந்தகங்கள், பாலகங்கள் போன்றவை வழக்கம்போலச் செயல்படும். பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

`31-ம் தேதி வரை ஊரடங்கு; காரணமின்றி வீட்டைவிட்டு வெளியேறினால் நடவடிக்கை!’- புதுச்சேரி கொரோனா அப்டேட்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகள், சிகிச்சைகள் மற்றும் அரசு அலுவல் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், இந்தப் பகுதிகளில் இருக்கும் அனைத்துத் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களைத் திறப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு