Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

''எங்க தலைவன் மேல தூசு பட்டாலும் விட மாட்டோம்டா! தமிழ்நாடே பத்திக்கிட்டு எரியும்டா'' என்று சினிமாவில் அரசியல் ரவுடிகள் சிலுப்புவார்கள். அந்த அரசியல் அடாவடித்தனம் இப்போது ராமதாஸ் கைதைத் தொடர்ந்து நிஜத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

500 அரசுப் பேருந்துகள் சொக்கப்பனையாக எரிந்தன; நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. ஆவேசத் தலைவனைக் குளிர்விக்க, அடுத்தவன் சொத்துக்களைப் பலி கொடுக்கும் காட்டுமிராண்டித்தனம் கண்டு எப்படிச் சும்மா இருப்பது? அப்பாவி மக்களின் நிம்மதியைக் கெடுத்து, ஒட்டுமொத்த மாநிலத்தின் அமைதியைக் குலைப்பவர்களை எப்படித் தொண்டர்கள் என்று ஏற்றுக்கொள்வது?

வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டுபவர்களைத்தான் அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் என்ற விழிப்பு உணர்வு பெருகிவரும் காலகட்டத்தில், நாட்டை அழிவுப் பாதை நோக்கி அழைத்துச் செல்லும் அரசியல் வெறிக்கு இனியுமா இடம் கொடுப்பது? சாதியின் பெயரால் வன்முறைக்கும் பிரிவினைக்கும் வித்திடுபவர்கள் யாரானாலும், பொது வாழ்க்கையில் இருந்தே விரட்டியடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை இப்போதாவது நாம் வளர்த்துக்கொள்ள வேண்டாமா?

சேதம் விளைவித்தவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் சார்ந்த கட்சியிடம் இருந்து நஷ்டஈட்டுத் தொகையை உறுதியுடன் அரசு வசூலிக்க வேண்டும். இதில் அரசியல் பாகுபாடு புகாதபடி, நீதிமன்றமே நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். வன்முறை நிகழ்த்திய கட்சி நஷ்டஈட்டைத் திருப்பிச் செலுத்த கடுமையான நடவடிக்கைகள் வேண்டும்.

'தலைவி'க்குப் பாதகமாகத் தீர்ப்பு வெளியான சமயம், தர்மபுரி பேருந்து எரிப்புச் சம்பவத்தில் மூன்று மாணவிகள் பொசுங்கியபோது துடித்த துடிப்பை இப்போதும் நாம் வெளிப்படுத்த வேண்டும். தற்போதைய எரிப்புச் சம்பவங்களையும் கொலை முயற்சிகளாகவே கருதி, மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான், 'சினிமா பாணி' திமிருக்கு ஒரு முடிவு ஏற்படும்!