Published:Updated:

சிறந்த நெல் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு: அரசு

சிறந்த நெல் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு: அரசு
சிறந்த நெல் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு: அரசு

சென்னை, ஆக.17,2011

தமிழகத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், சிறப்பு விருதும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ##~~##

திருச்சி, தருமபுரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 19 கோடி ரூபாய் செலவில் விளை பொருட்களுக்கான குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வேளாண்மை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு வேளாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்துப் பேசியது:

"வேளாண்துறையை மேம்படுத்துவதற்காக அயல்பணி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆயிரத்து 300 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு  ஊக்கமளிக்கும் வகையில், மாநில அளவில் உற்பத்தியில் சாதனை படைக்கும் விவசாயிக்கு ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், சிறப்பு விருதும் வழங்கப்படும்.

கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக 42 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் ஆண்டுதோறும் 600 கிராம இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரக் கருவிகளை பழுதுநீக்குதல் மற்றும் பராமரிப்பு பயிற்சி 6 மாத காலத்திற்கு வழங்கப்படும்.

82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நவீனக் கிடங்குகள் அமைக்கப்படும்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைபொருட்களை பாதுகாத்து வைப்பதற்காக குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகள் மொத்தம் 19 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்," என்றார் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

அடுத்த கட்டுரைக்கு