Published:Updated:

வருமான வரித்துறை வழக்கில் அக்.1ல் ஜெ. - சசிகலா ஆஜராக உத்தரவு!

Vikatan Correspondent
வருமான வரித்துறை வழக்கில் அக்.1ல் ஜெ. - சசிகலா ஆஜராக உத்தரவு!
வருமான வரித்துறை வழக்கில் அக்.1ல் ஜெ. - சசிகலா ஆஜராக உத்தரவு!
வருமான வரித்துறை வழக்கில் அக்.1ல் ஜெ. - சசிகலா ஆஜராக உத்தரவு!

சென்னை: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர், அக்டோபர் 1ஆம் தேதி ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1992-93 மற்றும் 1993-94ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, வருமான வரித்துறை வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணை, சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இன்று காலை நடைபெற்ற விசாரணையின் போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், சமரச மனு நிலுவையில் இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும், அதன் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டார்.

ஆனால், வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி, சமரச மனுவை காரணம் காட்டி வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக்கூடாது என வாதாடினார்.

இதுபோன்ற வழக்குகளில் வேறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பு ஏதேனும் இருந்தால் அதை தாக்கல் செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிற்பகலுக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்த நீதிபதியிடம், நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்ட ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

அப்போது, வருமானவரித்துறை எதிர்ப்பு தெரிவிப்பதால் தொடர்ந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, ஜெயலலிதா, சசிகலா ஆகியோர், வரும் அக்டோபர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.