Published:Updated:

கள்ள ஓட்டு, மண்டை உடைப்புடன் நடந்தேறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்!

Vikatan Correspondent
கள்ள ஓட்டு, மண்டை உடைப்புடன் நடந்தேறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்!
கள்ள ஓட்டு, மண்டை உடைப்புடன் நடந்தேறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்!

கோவை/தூத்துக்குடி/ராமநாதபுரம்: கள்ள ஓட்டு புகார், அடிதடி மோதல்களுடன் தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்தது.

தமிழகத்தில், கோவை, தூத்துக்குடி மாநகர மேயர் பதவிகள் காலியாக உள்ளது. இதேபோல், அரக்கோணம், கடலூர், விருத்தாசலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவிகள், 8 மாநகராட்சி உறுப்பினர் பதவிகள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 39 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்பட தமிழகத்தில் 530 உள்ளாட்சி பதவி இடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்த பதவிகளுக்கான  இடைத்தேர்தலை தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் புறக்கணித்தனர். அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 1,486 பேர் போட்டியிட்டனர்.

கள்ள ஓட்டு, மண்டை உடைப்புடன் நடந்தேறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்!

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இருப்பினும், பல்வேறு இடங்களில் மந்தமான வாக்குப்பதிவே காணப்பட்ட நிலையில்,  வாக்குப்பதிவு  மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வருகின்ற 22 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பதிவான வாக்குகள்

கோவை மாநகராட்சி பதவிக்கான தேர்தலில் 46.51 சதவீதமும், தூத்துக்குடி மேயர் பதவிக்கான தேர்தலில் 54 சதவீத வாக்குகளும், 37வது வார்டில் 63 சதவீத வாக்குகளும், சிவகங்கையில் நகர்புரத்தில் 77 சதவீதமும்,  ஊராட்சி பகுதியில் 67 சதவீதமும், கடலூர் மாவட்டத்தில் 63 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கள்ள ஓட்டு புகார்: அ.தி.மு.க. - பா.ஜ. மோதல்; மண்டை உடைப்பு

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் இதற்கென நகராட்சியில் உள்ள 58 வாக்கு சாவடிகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. வாக்குசாவடிகள் அனைத்தும் நேற்று காலை முதல் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் வாக்குபதிவு நாளான இன்று காலை முதல் போதுமான போலீசார் இன்றி முழுக்க, முழுக்க அ.தி.மு.க.வினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

கள்ள ஓட்டு, மண்டை உடைப்புடன் நடந்தேறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்!

ராமநாதபுரம் நகராட்சிக்கு தொடர்பில்லாத பகுதிகளை சேர்ந்த பல அ.தி.மு.க.வினர் வாக்கு மையங்களின் உட்பகுதிகளுக்குள் நின்று கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்து கொண்டு இருந்தனர். இதனை தடுக்கும் வகையில் அங்கு போதிய போலீசாரோ, பா.ஜ.க.வினரோ இல்லாத நிலையே நீடித்தது.

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு மிகவும் மந்தமான நிலையிலேயே இருந்தது. இதனால் பல வாக்கு சாவடி மையங்கள் வெறிச்சோடி கிடந்தன. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அ.தி.மு.க.வினர், வாக்களிக்க வராத பலரது வாக்குகளை வெளியூரை சேர்ந்தவர்களை கொண்டு வாக்களிக்க வைத்தனர்.

இதுகுறித்து பா.ஜ.க.வினர் புகார் கூறியதை தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் கம்பு, கற்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த வன்முறையால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. வன்முறையில் பா.ஜ.க.வினர் 3 பேரின் மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அ.தி.முக.வினர் கள்ள ஓட்டு பதிவு செய்வது குறித்த அறிந்த பா.ஜ.க. வேட்பாளர் துரைகண்ணன் வாக்கு சாவடிகளுக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் கள்ள ஓட்டு போடுவது குறித்து போலீசாரிடம் முறையிட்டார். மேலும் முறைகேடாக நடக்கும் இந்த தேர்தலை ரத்து செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தார்.

கள்ள ஓட்டு, மண்டை உடைப்புடன் நடந்தேறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்!

இதையடுத்து ராமநாதபுரம்-மதுரை சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட முயன்ற பா.ஜ.க. நிர்வாகிகளிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க- பா.ஜ.க.வினர் கம்பு, கற்களை கொண்டு தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க. நகர செயலாளர் கள்ள ஓட்டு

ராமேஸ்வரத்தில் வசித்து வரும் அ.தி.மு.க. நகர மீனவரணி செயலாளரான வஸ்தாவி என்ற வெற்றிவேல், ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் முகம்மது என்ற வாக்களர் பெயரில் கள்ள ஓட்டு போட்டார். இவர் கள்ள ஓட்டு போட்டது செய்தியாளர்கள் சிலரின் கேமராவில் சிக்கியது. இதே நிலையே நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் நீடித்தது.

கள்ள ஓட்டு, மண்டை உடைப்புடன் நடந்தேறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்!

தூத்துக்குடியிலும் துவம்சம்

இதனிடையே தூத்துக்குடியிலும் கள்ள ஓட்டு கனஜோராக நடந்தேறியது. மாலை 3 மணிக்கு மேல் எங்கும் அசாதாரண நிலை ஏற்பட்டது. அதுவரை பதிவாகாத வாக்குகள் அ.தி.மு.க தரப்பினரால் ஓ.கே செய்யப்பட்டு வந்தது. இடையில் ஆய்வுக்கு சென்ற பா.ஜ.க வேட்பாளர் ஜெயலெட்சுமி கொதித்து போனார். ‘வெளியூர் ஆட்கள் இங்கே எதுக்கு நிக்குறீங்க’ என கேட்டதும் வெகுண்டு எழுந்தனர் உள்ளூர் அ.தி.மு.க.வினர்.

கள்ள ஓட்டு, மண்டை உடைப்புடன் நடந்தேறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்!

நகரச் செயலாளர் ஏசாதுரை தலைமையில் ஒரு டீமும், முன்னாள் கவுன்சிலர் செண்பகசெல்வன் தலைமையில் ஒரு டீமும் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயலெட்சுமி மற்றும் பா.ஜ.க.வினர் மீது பாய்ந்து அடிதடியில் இறங்கியது. இதில் பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி மயங்கி விழுந்துவிட அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, பா.ஜ.க.வினர் இரண்டு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி கலவர பூமியாக காட்சியளித்தது.

இதேபோல், தி.மு.க மாவட்ட செயலாளர் பெரியசாமியின் வீடு இருக்கும் பகுதியான போல்பேட்டை பகுதியிலுள்ள ஒரு பூத்துக்குள் வெளியூர் ஆட்களை வைத்து ஓட்டுபோட வந்தவர்களை அங்கிருந்த அதிகாரிகள் தடுத்தனர்.

கள்ள ஓட்டு, மண்டை உடைப்புடன் நடந்தேறிய உள்ளாட்சி இடைத்தேர்தல்!

உடனே அ.தி.மு.க. சார்பான ஏஜென்டுகள் ‘நாங்க கையெழுத்து போடாம நீங்க எப்படி ஓட்டுபெட்டியை முடிச்சு சீல் வைக்கிறீங்கன்னு பார்ப்போம்’ என சொல்லிவிட்டு வாக்குச்சாவடியைவிட்டு வெளியேறி போராட்டத்தில் இறங்கிவிட்டனர். பிரச்னை வெளியே தெரிந்துவிட கூடாது’என சில அ.தி.மு.க. மூத்த தலைகள் சொன்ன பிறகு பிரச்னை சுமூகமாக முடிந்தது.


- இரா.மோகன், எஸ்.சரவணப்பெருமாள்

 படங்கள்: உ.பாண்டி, ஏ.சிதம்பரம்