Published:Updated:

இணைய ரவுண்ட் அப்!

இணைய ரவுண்ட் அப்!
இணைய ரவுண்ட் அப்!

100 கோடி இணையதளங்கள் !

இணைய ரவுண்ட் அப்!

இணையம், அதன் வரலாற்றில் முக்கிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை 1 பில்லியனை அதாவது 100 கோடியை தொட்டிருக்கிறது. இணையத்தின் முக்கிய அங்கமான வையக விரிவு வலை அதன் வெள்ளி விழாவை கொண்டாடும் ஆண்டில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது. இணையம் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ,அதன் அங்கமான வையக விரிவு வலை (World Wide Web ) 1989 ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1991 ஆகஸ்ட்டில் முதல் இணையதளம் உருவாக்கப்பட்டது. 

இடைப்பட்ட காலத்தில் இணையம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது இணையதளங்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.  இணையதளங்கள் மற்றும் இணைய பயன்பாட்டை கண்காணித்து தகவல் தெரிவிக்கும் இண்டெர்நெட் லைவ்ஸ்டாட்ஸ் இணையதளம் ( http://www.internetlivestats.com/total-number-of-websites/) இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இந்த மைல்கல்லை வலையை உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீ, தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த புள்ளிவிவரத்தின் பின்னே இன்னொரு சுவாரஸ்ய தகவலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் ஒரு புதிய இணையதளம் பதிவாகி கொண்டிருக்கிறதாம்.

மைன்கிராப்ட் அற்புதங்கள்!

இணைய ரவுண்ட் அப்!

மைன்கிராப்ட் வீடியோகேம் சேவையை மைக்ரோசாப்ட் 2.5 பில்லியன் டாலருக்கு வாங்கி இருக்கிறது. மைன்கிராப்டில் அப்படி என்ன இருக்கிறது என வீடியோகேமில் அதிக அறிமுகம் இல்லாதவர்கள் கேட்கலாம்.  மைன்கிராப்ட் வழக்கமான சுட்டுத்தள்ளும் வீடியோகேம் கிடையாது. மைன்கிராப்ட் கேமில் உறுப்பினர்கள், தங்களுக்கான நகரங்களையும் பொருட்களையும் உருவாக்கி கொள்ளலாம். சிறுவர்கள் லெகோ செங்கற்களை கொண்டு பொம்மைகள் செய்வது போல இந்த கேமில் நகரங்களை உருவாக்கலாம்.

முதலில் தாக்குதலில் இருந்து தப்பிக்க கட்டடங்களை உருவாக்கத்துவங்கி, பின்னர் உறுப்பினர்கள் கைகோர்த்து தங்கள் கற்பனை வளத்திற்கு ஏற்ப புதிய உலகத்தையும், உலகில் உள்ளவற்றையும் உருவாக்கி கொள்ளலாம். மைன்கிராப்ட்டின் சிறப்புகளை அறியும் வகையில் இந்த கேம் கொண்டு உருவாக்கப்பட்ட ஏழு அற்புதமான விஷயங்களை பிபிசி பட்டியலிட்டுள்ளது. பார்க்க:http://www.bbc.co.uk/news/technology-29211032

ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டில் ஐபோன் உண்டா?

ஆப்பிளின் ஐபோன் 6  மற்றும் ஐஓஎஸ் 8 அறிமுகமும் பெரிய அளவில் கவனத்தை

இணைய ரவுண்ட் அப்!

ஈர்த்திருக்கிறது. ஐபோன் 6,ஐபோன் பிளஸ் முன்பதிவில் 40 லட்சம் விற்றிருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதன் பொருள் பலர் ஐபோன் 5 உள்ளிட்ட பழைய மாதிரியை தூக்கி எறிந்து விட்டு புதிய ஐபோனுக்கு மாறத்தயராக இருக்கின்றனர் என்பதுதான். என்ன செய்வது ஐபோன் மோகம் அப்படி? 

ஆனால் ஐபோனை தோற்றத்திலும் செயல்பாட்டிலும் நேரத்தியாக உருவாக்கி இந்த மோகத்தை ஏற்படுத்திய ஆப்பிளின் சி.இ.ஒவாக இருந்த மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டில் ஐபோனுக்கோ ,ஐபேடிற்கோ அனுமதி இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? 

நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் நிக் பில்டன் இந்த சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார். 2010 ல் ஜாப்சை பேட்டி கண்ட பில்டன், உங்கள் பிள்ளைகள் ஐபேட் பற்றி என்ன சொல்கின்றனர் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜாப்ஸ், அவர்கள் ஐபேடை பயன்படுத்தியதில்லை என்று கூலாக கூறியிருக்கிறார். வீட்டில் பிள்ளைகளின் தொழில்நுட்ப பயன்பாட்டை கட்டுப்படுத்துவதாகவும் ஜாப்ஸ் கூறியுள்ளார்.

ஜாப்சின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்டர் ஐசாகசனும் ஜாப்ஸ் வீட்டு பிள்ளைகள் தொழில்நுட்ப சாதனங்களின் மோகம் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும் அல்ல மிகச்சிறந்த தொழில்நுட்ப பத்திரிகையான வயர்டு ஆசிரியர் கிறிஸ் ஆண்டர்சன் மற்றும் டிவிட்டர் சி.இ.ஓ டிக் காஸ்டெலா ஆகியோர் வீட்டிலும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்று பில்டர் தெரிவித்துள்ளார். எப்படி இருக்கிறது ? நிற்க, ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை பற்றி அறிய ஆர்வமா? அழகாக ஒரே வரைபட சித்திரமாக ஜாப்ஸ் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள இதோ வழி: http://www.makeuseof.com/tag/life-steve-jobs-apples-founder/

விரல் நுனியில் கம்ப்யூட்டர்

மெமரி கார்டு உள்ளிட்ட சேமிப்பு சாதனங்களை தயாரித்து வரும் சாண்டிஸ்க் நிறுவனம் சமீபத்தில் 512 ஜிபி கொள்ளளவு கொண்ட எஸ்டி கார்டை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே அதிக கொள்ளளவு கொண்ட எஸ்டி கார்டு இது தான். சராசரி கம்ப்யூட்டர்களின் நினைவுத்திறனை விட இது அதிகம் என்று சொல்லப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் சாண்டிஸ்க் 512 எம்பி திறன் கொண்ட மெமரி கார்டை அறிமுகம் செய்த போது அதுவே பெரிய விஷயமாக இருந்தது. அதன்பின் ஜிபி எல்லாம் சாதாரணமாகி இப்போது 512 ஜிபி கார்டு அறிமுகமாகி இருக்கிறது. தொழில்நுட்பத்தின் தேவையும் வளர்ச்சியும் அப்படி இருக்கிறது.


இந்த கார்டின் விலையை கேட்டால் ஷாக்காக தான் இருக்கும். 799 டாலர்கள் அதாவது கிட்டத்தட்ட 48,700 ரூபாய்.  4கே எச்டி வீடியோக்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதானமாக திரைப்பட இயக்குனர்களுக்கானது இது.

பேஸ்புக்கின் புதிய வசதி

இணைய உலகில் இப்போது தானாக மறையும் வசதிதான் முக்கிய போக்கு!. ஸ்னேப்சேட் பிரபலமாக்கிய இந்த வழக்கம் அந்தரங்க மீறல் தாக்குதலினால் மேலும் பிரபலமாகி இருக்கிறது. சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கும், போஸ்ட்கள் தானாக மறையும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி படி, ஒரு பதிவு குறிப்பிட்ட கால அளவுக்குதான் இருக்கலாம் என நிர்ணயித்துக்கொள்ளலாம். அதன் பிறகு அந்த பதிவு காணாமல் போய்விடும் . அது வரை அந்த பதிவை பார்கலாமே தவிர பகிர முடியாது.

நிரந்தரமாக டைம்லைனில் இருக்க வேண்டிய தேவை இல்லாத பதிவுகளை பகிர, இப்படி ஒரு வசதி தேவை என்று பயனாளிகள் பலரும் கேட்டு வருவதால், பேஸ்புக் இந்த வசதியை சோதனை முறையில் வெள்ளோட்டம் விட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் முதல் கட்டமாக இது அறிமுகமாகி உள்ளது.

பேஸ்புக்கின் ஐபோன் செயலியில் இதை பயன்படுத்தலாம். இந்த சேவைக்கு வரவேற்பு இருந்தால் முழுவீச்சில் அறிமுகமாகலாம். தானாக டெலிட்டாகும் வசதி தேவை என கருதும் பேஸ்புக்காளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருங்கள்!.

இதனிடையே பேஸ்புக் கட்டுப்படுத்தப்பட்ட பகிர்வு வசதி கொண்ட 'மொமண்ட்' எனும் அந்தரங்க பகிர்வு வசதியையும் அறிமுகம் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்னேப்சேட் சேவையை பேஸ்புக் 3 பில்லியன் டால்ருக்கு விலை பேச முற்பட்டதும் ஆனால் ஸ்னேப்சேட் தரப்பில் நோ சொல்லப்பட்டதும் இங்கே உப தகவலாக நினைவு கொள்ளலாம்.

கோடீஸ்வரர்களுக்கான பேஸ்புக்

இணைய ரவுண்ட் அப்!

பேஸ்புக்கிற்கு போட்டியாக இன்னொரு சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் இதற்காக பேஸ்புக் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இது காஸ்ட்லி பேஸ்புக். அதாவது பணக்காரர்களுக்கான பேஸ்புக். இந்த புதிய வலைப்பின்னலில் சேர பதிவு கட்டணமாக 9,000 டாலர் கட்ட வேண்டும். அது மட்டும் அல்ல, ஆண்டுக்கு 3,000 டாலர் உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டும். செல்வந்தர்களுக்கான கிளப் போல இணையத்தில் கோடீஸ்வரர்கள் மற்றும் லட்சாதிபதிகளுக்கான கிளப்பாக இந்த வலைப்பின்னலை அமெரிக்காவின் ஜேம்ஸ் டவுச்சி பீட்டர்ஸ் என்பவர் உருவாக்கி உள்ளார். சேவையின் பெயர் நெட்ரோபாலிடன் (Netropolitan ).  பேஸ்புக்கில் உள்ள எல்லா வசதிகளும் உண்டு. ஆனால் விளம்பரம் கிடையாது. அந்தரங்க பாதுகாப்பும் உண்டு என்கிறார் பீட்டர். சாதாரண வலைப்பின்னல்களில் தன்னைப்போன்றவர்களை தேடி கண்டுபிடித்து நட்பு கொள்வது கடினமாக இருப்பதால் விமானங்களில் பறப்பவர்களுக்காக என்றே இந்த சேவைய துவக்கியதாக சொல்கிறார்.இது தான் அந்த தளம்: http://netropolitan.info/

ஒருவரும் பார்க்காத புகைப்படங்கள்!

இணைய உலகமே ஷேர்களாலும் லைக்குகளாலும் தான் இயங்கி கொண்டிருக்கிறது.

இணைய ரவுண்ட் அப்!

பேஸ்புக்கில் இத்தனை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்றும், இன்ஸ்டாகிராமில் பல்லாயிரம் முறை பகிரப்பட்ட புகைப்படம் என்று சொல்லப்படுவதை எல்லாம் அடிக்கடி படிக்கிறோம். சரி, இன்ஸ்டாகிராமில் ஒரு லைக் கூட வாங்காத புகைப்படங்களை நீங்கள் எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா? 

இப்படி ஒருவருமே பார்த்திராத இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்ப்பதற்காக என்றே அமெரிக்காவின் டிம் ஹெட்லர் மற்றும் டேனியல் சுமார்னா, தால் மிட்யான் ஆகியோர் இணைந்து ஒரு இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். நோலைக்ஸ்யெட் என்பதுதான் தளத்தின் முகவரி: http://www.nolikesyet.com/#/. சென்று பாருங்கள். முடிந்தால் லைக் செய்யுங்கள். அதற்கு முன் இன்ஸ்டாகிராமில் உறுப்பினராக இருக்க வேண்டும் !.


சிலந்திக்காக ஒரு ஆப்

இணைய ரவுண்ட் அப்!

சிலந்தியை கண்டால் பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இன்னும் சிலருக்கு பயமாகவும் இருக்கலாம். இந்த பயத்தை போக்க் சிலந்திகளை பற்றி அறிந்து கொள்வது சிறந்த வழி என நினைத்தால் அதற்கு ஒரு செயலி ( ஆப்) இருக்கிறது. Spider In Da House எனும் இந்த செயலி , சிலந்தி வகைகளை அடையாளம் காட்டி அவை பற்றிய விவரங்களை அளிக்கிறது. சிலந்தி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் இருக்கின்றன என்கிறது இந்த செயலி. ஆனால் பிரிட்டன் சிலந்திகளை தான் இது அறிந்து வைத்திருக்கிறது. : https://play.google.com/store/apps/details?id=com.biocourseware.housespiders&hl=en

சைபர்சிம்மன்