##~## |
கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டபோது நடந்த விஷயங்கள் தொடர்பாக தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கும் கருத்து மோதல் தொடர்கிறது!
அன்றைய முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதி.மு.க. சார்பில் கலந்துகொண்ட அரங்கநாயகம் வெளிநடப்புச் செய்தார் என்று தி.மு.க-வும், 'கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுப்பதைக் கண்டித்துத்தான் வெளிநடப்பு செய்தேன்’ என்று அரங்கநாயகமும் சொல்லி வருகிறார்கள். இவரது மறுப்புக்கு தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையான எதிர்ப்பைக் கிளப்புகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''கச்சத் தீவை இலங்கைக்கு வழங்க இந்திய அரசு தீர்மானித்திருப்பது தொடர்பாக தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை 29.6.1974 அன்று சென்னை

தலைமைச் செயலகத்தில் கூட்டினார். தலைமை வகித்த தலைவர் கலைஞர், 'கச்சத் தீவை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தை தமிழக அரசு சார்பில் முன்மொழிந்தார். அ.தி.மு.க பிரதிநிதி செ.அரங்கநாயகத்தைத் தவிர அனைவரும் தீர்மானத்துக்கு ஆதரவாகப் பேசினர். செ.அரங்கநாயகம் மட்டும் வெளிநடப்பு செய்தார்.
தலைவர் கலைஞரின் கச்சத் தீவு தீர்மானத்துக்கு ஆதரவு என்று நிலைப்பாட்டை அ.தி.மு.க. எடுத்தது என்றால், அரங்கநாயகம் ஏன் வெளிநடப்பு செய்ய வேண்டும்? அன்றைய சூழலில் தி.மு.க-வுக்கு எதிராக இருந்த அ.தி.மு.க., இந்திரா காங்கிரஸுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடுகொண்டதன் காரணமாக கச்சத் தீவு பிரச்னையில் பாராமுகமாக இருந்தது என்றும் பத்திரிகைகளில் பூடகமாக செய்திகள் வந்தன. என்ன தீர்மானம் என்று சொல்லவில்லை என்று அரங்கநாயகம் சொல்வது அபத்தமானது.
அன்றைய முதல்வர் தலைவர் கலைஞர், மதுரை, திருச்சி, பாபநாசம் (தஞ்சை) ஆகிய இடங்களில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், 'ஆண்டாண்டு காலமாக தமிழருக்குச் சொந்தமானது கச்சத் தீவு. ராமநாதபுரம் அரசர்களுக்கு பாத்தியமான இந்தத் தீவை, தமிழக முதலமைச்சராக இருக்கும் எனக்கே தெரியாமல் இலங்கைக்கு இந்திய அரசு வழங்க இருப்பது குறித்து தினசரி பத்திரிகை மூலமாகத் தெரிந்துகொள்ளும் நிலையில் உள்ளேன்’ என்று கவலையோடு பேசினார். முதல்வர் கலைஞர், அன்றைய சட்ட அமைச்சர் செ.மாதவனை தன்னுடன் டெல்லிக்கு அழைத்துச் சென்று, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் ஆகியோரைச் சந்தித்து கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கக் கூடாது என்ற தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அளித்தார்.
கலைஞருடைய கடுமையான எதிர்ப்பின் காரணமாகத்தான், கச்சத் தீவுக்கு இந்திய மீனவர்கள் செல்ல உரிமையும், மீன்பிடி வலைகளை உலர்த்தவும், அந்தோணியார் தேவாலயத்துக்கு செல்வதற்குரிய ஷரத்துக்களை மத்திய அரசு சேர்த்தது. தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதும் இந்த உரிமைகளை மத்திய அரசு விலக்கிக்கொண்டது. மீண்டும் கலைஞர் ஆட்சியில்தான் அந்தோணியார் கோயிலுக்குச் செல்லும் உரிமை கிடைத்தது. இவை புரியாமல் கச்சத் தீவை தலைவர் கலைஞர் தாரைவார்த்துவிட்டார் என்று பேசுவது வரலாறு தெரியாமல் பேசுவதாகும்'' என்றார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
கச்சத் தீவு விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றம் வரை போயுள்ளது.
- எஸ்.முத்துகிருஷ்ணன்