Published:Updated:

இலக்கியவாதிகள்... பத்திரிகையாளர்கள்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

புதிய முதல்வரின் திடீர் ஆலோசனை

இலக்கியவாதிகள்... பத்திரிகையாளர்கள்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

புதிய முதல்வரின் திடீர் ஆலோசனை

Published:Updated:
##~##

டைகளை உடைத்து, இன்னல்களைக் கடந்து கர்நாடகாவின் 28-வது முதல்வராக அரியணை ஏறி இருக்கிறார் சித்தராமையா. ஆறு ஆண்டுகளுக்கு முன் வேறு கட்சியில் இருந்து வந்தவரை முதல்வராக்கி அழகு பார்த்திருக்​கிறது காங்கிரஸ். 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 121 இடங்​களைக் கைப்பற்றி, தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 'நான்தான் அடுத்த முதல்வர்’ என காங்கிரஸின் பெரிய தலைகள் அனைத்தும் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் நின்ற‌னர். முதல்வர் நாற்காலிக்காக சித்தராமையாவுக்கும், மல்லிகார்ஜுன கார்கேவுக்​கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால், புதிய‌ முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு வழங்கி, அவரை கடந்த சனிக்கிழமை பெங்களூருவுக்கு அனுப்பினார் சோனியா. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 80 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு சித்தராமையா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இலக்கியவாதிகள்... பத்திரிகையாளர்கள்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

முதல்வராக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்​தில், கன்னட இலக்கிய உலகின் மிக முக்கிய ஜாம்பாவான்களைத் தேடிப்போய் சந்திக்க ஆரம்பித்தார் சித்தராமையா. முதலில் கன்னடத் தேசிய கவிஞர் சிவருத்ரப்பாவை சந்தித்து, 'என்னு​டைய ஆட்சி எப்படி அமையவேண்டும்?’ என கேட்டார். அதற்கு அவர், 'அரசியலில் சமரசங்களுக்கு அடிபணிந்து நேர்மையை இழந்துவிடக் கூடாது’ என்று சொன்னாராம். அடுத்து, ஞானபீட விருது பெற்ற சந்திரசேகர கம்பாராவை நோக்கி, முதல்வரின் கார் பறந்தது. 'கன்னட இலக்கிய வளர்ச்சிக்காக, கன்னட யூனிகோட் எழுத்துருவை அரசு முதலில் அங்கீகரிக்க வேண்டும்’ என வேண்டு​கோள் வைத்தார் கம்பாரா. அதைத் தொடர்ந்து ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளரும், அரசியல் விமர்சகரு​மான யூ.ஆர்.அனந்தமூர்த்தியைத் தேடிப் போனார். அவரோ, 'இனம், மொழி, மதம் என பேதங்களைக் கடந்து எல்லாருக்கும் நல்லாட்சி. உழைக்கும் மக்க​ளுக்கு நண்பனாகச் செயல்பட வேண்டும்’ என்று ஆலோசனைகளைச் சொன்னார்.

அன்று இரவு, கர்நாடகாவில் உள்ள சில முக்கியப் பத்திரிகையாளர்களையும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் வீட்டுக்கு அழைத்து, ஆட்சி எப்படி இருக்க வேண்டும்? அமைச்சரவை எப்படி இருக்கவேண்டும்? என்ற ஆலோசனைகளைக் கேட்டு கவனமாகக் குறித்துக்கொண்டாராம் சித்தராமையா.

இலக்கியவாதிகள்... பத்திரிகையாளர்கள்... ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!

ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த சித்தராமையா, இளங்கலை அறிவியலும் சட்டமும் பயின்றவர். கர்நாடகத்தில் மூன்றாவது மெஜாரிட்டி சமூகமாக இருக்கும் 'குருபா’ பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் பிரிவைச் சார்ந்தவர் கர்நாடகத்தின் முதல்வராவது இதுவே முதல்முறை. ஜார்ஜ் பெர்னாண்டஸின் லோக் தள் கட்சியில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1983-ம் ஆண்டு அதிலிருந்து விலகி, ஜனதா கட்சியில் இணைந்தார். 1999-ல் ஜனதா கட்சி இரண்டாக உடைந்தபோது, தேவகவுடாவுடன் இணைந்து வெளியேறினார். 2004-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த தேவகவுடா அமைச்சரவையில் துணை முதல்வரானார். 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, பி.ஜே.பி.யுடன் கைகோத்து ஆட்சி அமைத்தார் குமாரசாமி. அப்போது, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார் சித்தராமையா.

2009-ம் ஆண்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் சித்தராமையா. சட்டமன்றத்தில் பி.ஜே.பி. ஆட்சியில் நடந்த தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டினார்.

''எனது இரண்டு மகன்களும் எந்தக் காரணம்​கொண்டும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் தலையிட மாட்டார்கள். இதுவரை அரசியலில் இல்லை. இனிமேலும் நுழைய மாட்டார்கள்'' எனப் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார். 13-ம் தேதி முதல்வராகப் பதவியேற்ற சித்தராமையாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. அமைச்சர் பதவிக்குப் போட்டிகள் நிலவுவதால், சோனியாவுடன் ஆலோசித்த பிறகே முடிவெடுக்கப்படுமாம்.

'தமிழர்கள் பிரச்னையிலும், காவிரி விவகாரத்​திலும் புதிய முதல்வர் தமிழர்களுக்கு எதிராகவே செயல்படுவார். மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி. மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி. மொத்தத்தில் தமிழர்களுக்கு விரோத ஆட்சியாகவே அமையும்’ என திகிலூட்டுகிறார்கள் பெங்களூருவில் உள்ள தமிழ்ப் பத்திரிகையாளர்கள்.

- இரா.வினோத்

படம்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism