Published:Updated:

வாங்க தமிழா... ஆன்லைனிலே தமிழ் பாடங்களைப் படிக்கலாம்!

வாங்க தமிழா... ஆன்லைனிலே தமிழ் பாடங்களைப் படிக்கலாம்!
வாங்க தமிழா... ஆன்லைனிலே தமிழ் பாடங்களைப் படிக்கலாம்!

டகத் தமிழ், இணையத் தமிழ், பேச்சுத் தமிழ், வர்த்தகத் தமிழ் என தமிழ் மொழி, இன்று எல்லா தளங்களிலும் இயங்கி வருகிறது. அதுவும் இணையத்தில் தமிழின் தாக்கம் சொல்லவே தேவையில்லை.

பாரதியார் கவிதைகள் முதல் பேரண்டம் வரை தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. வலைப்பூ, முகநூல், ட்வீட்டர், டாட் காம் என தனித்தனியே இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் ஒன்றிணைத்து தமிழ் விக்கிப்பீடியாவில் தகவல் களஞ்சியமாக உருவாக்கலாம் என்று அழைப்பு விடுக்கிறார் கனடா நாட்டின் வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் செ.இரா.செல்வகுமார்.

வாங்க தமிழா... ஆன்லைனிலே தமிழ் பாடங்களைப் படிக்கலாம்!

தமிழ்நாட்டில் இருப்பவர்களைவிட அயலக தமிழர்கள், இணையத் தமிழுக்கு அதிகம் பங்காற்றி வருவது கண்கூடு. அந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியா வழிக் கல்வி கற்பித்தல் குறித்தும் பயிற்சியும் வழங்குகிறார் இவர். விக்கி என்ற நிறுவனத்தால் 2003ஆம் ஆண்டு விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.

தற்போது 2 லட்சம் பக்கங்கள் கொண்ட தகவல் களஞ்சியமாக விக்கிப்பீடியா திகழ்கிறது. விக்கிப் பீடியா தளத்தில் 287 மொழிகளில் எழுதப்படுகின்றன. அதில் ஆங்கிலத்தில் மட்டுமே 50 லட்சம் கட்டுரைகள் காண கிடைக்கின்றன. தமிழில் 63 ஆயிரம் கட்டுரைகள் இருக்கின்றன. என்சைக்ளோபீடியா-பிரிட்டானிகாவுக்கு இணையாக தகவல்களை சேகரித்து வைத்துள்ளது.

வாங்க தமிழா... ஆன்லைனிலே தமிழ் பாடங்களைப் படிக்கலாம்!

விக்கிப்பீடியா என்பது ஒரு இயந்திரம் (மென்பொருள்). கூகுளில் தமிழ் எழுத்துருக்களில் தட்டச்சு செய்தால் தமிழ் விக்கிப்பீடியா பக்கங்கள் தோன்றும். உங்களுக்கு எதை பற்றி தகவல் வேண்டுமோ, அதன் பெயரை தட்டச்சு செய்தால் போதும். அந்த பக்கங்கள் தோன்றும். நீங்கள் படிக்கும் தகவல்களின் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் இருந்தால், அதற்கான சரியான தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்களும் பதிவிடலாம்.

ஆனால் இதில் பதிவிடுவதற்கு முன் தமிழ் விக்கிப்பீடியா பக்கத்திற்கு சென்று உங்களுக்கான பெயரில் கணக்கைத் துவக்கிக் கொள்ளவேண்டும். நீங்கள் ஒரு தலைப்பில் எழுத்தை பதிந்தால், ஏற்கனவே அந்த தலைப்பில் கட்டுரைகள் இருந்தால் அந்தப் பக்கத்தினை காட்டும். யார் எழுதிய தகவல் என்றாலும் அதில் பிழை இருப்பின் திருத்தி எழுத முடியும். தற்போது வரலாறு, புவியியல், மருத்துவம், கணிதம், அறிவியல் என பல தகவல்கள் இருக்கின்றன. இதில் அனைவரும் பங்களிப்பு செய்ய முடியும். ஒருவரால் மட்டுமே தகவல்கள் உருவாகக் கூடியதல்ல. ஆண்டிப்பட்டியில் ஒருத்தர் ஒரு தலைப்பில் எழுதுகிறார் என்றால், ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒருத்தர் அதை படித்து தவறு இருப்பின் திருத்த முடியும்.

இதன் அடுத்தக் கட்டமாக தமிழ் விக்கிப்பீடியாவில் பாடங்களை வலையேற்றிவிட்டால் போதும். அதை எங்கிருந்தும் படித்துக் கொள்ளலாம். தேர்வு மட்டும் வந்து எழுதினால் போதும். இணையத்தில் படித்து தேர்வு எழுதும் முறை வளர்ந்தால் இன்னும் பல தளங்களில் தமிழின் பயன்பாடு அதிகரித்துவிடும். தொலைதுர கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இந்த வசதி மிகவும் பயன் கொடுக்கும். தற்போது தமிழ் ஆசிரியர்களுக்கு மின்வழிக் கல்வி குறித்து ஒருநாள் பயிற்சி சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் தரப்பட்டது.

வாங்க தமிழா... ஆன்லைனிலே தமிழ் பாடங்களைப் படிக்கலாம்!

தமிழ், தமிழர்கள் பற்றிய தகவல்களைகூட ஆங்கிலத்தில் டைப் செய்துதான் தேடுகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியாவை அனைவரும் படிக்க வேண்டுமென்றால், தமிழிலே டைப் செய்தால் தமிழ் விக்கிப்பீடியா தகவல்கள் கிடைக்கும். ஆங்கிலத்தில் உள்ள தகவல்களை படிக்கும்போது அரைகுறையாகத்தான் புரியும். தமிழில் படித்தால் ஆழமாக அதன் கருத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் கணக்கை ஐந்து நிமிடத்தில் தொடங்கிவிடலாம். உங்களுக்கு தெரிந்த சரியான தகவல்களை பதிவிடுங்கள்.. படியுங்கள்!

த. ஜெயகுமார்


படங்கள்: வருண் பிரசாத்
(மாணவப் பத்திரிகையாளர்)