Published:Updated:

மிஸ்டர் கழுகு: மகளா? மச்சானா?

மிஸ்டர் கழுகு: மகளா? மச்சானா?

மிஸ்டர் கழுகு: மகளா? மச்சானா?

மிஸ்டர் கழுகு: மகளா? மச்சானா?

Published:Updated:
மிஸ்டர் கழுகு: மகளா? மச்சானா?
##~##

'பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்​கும் வகையில் டாக்டர் ராமதாஸ் பேசினால், பா.ம.க-வைத் தடைசெய்யவும் தயங்க மாட்டேன்’ - சட்டசபையில் ஜெயலலிதா கொந்தளித்​ததை, ட்விட்டரில் (twitter.com/misterkazhugu) தட்டி​விட்டு வந்தேன் என்று ஆரம்பித்த கழுகார், ''பா.ம.க-வை தமிழகத்தில் ஏன் தடைசெய்ய வேண்டும் என்ற காரணங்களை விலாவாரியாக விளக்கி, தேர்தல் ஆணையத்துக்குக் கடந்த வெள்ளிக்கிழமையே உள்துறைச் செயலாளர் கடிதம் எழுதிவிட்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது'' என்று ஆரம்பித்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தயாராக இருந்த இஞ்சி டீயை ஒரு சிப் உறிஞ்சினார். ''அறிவாலயத்தில் நடந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தி திருமணம் பற்றிச் சொல்கிறேன். வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் ராஜாவின் மகளுக்குத் திருமணம். இந்த மணவிழா மேடை பரபரப்பான அரசியல் மேடையாக இருக்கலாம் அல்லது வீரபாண்டி ஆ.ராஜா,  தி.மு.க-வில் மீண்டும் மிகுந்த செல்வாக்கை பெறுவதற்கான ஆசி மேடையாகவும் இருக்​கலாம் என்று பலரும் எதிர்பார்த்தனர். அந்தக் குடும்பத்தில் சொத்துப் பிரச்னை சில வாரங் களுக்கு முன்பு பகிரங்கமாக வெடித்திருந்தது. இதனால் ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவியின் மகன் பிரபு திருமணத்துக்கு வர மாட்டார் என்று பேச்சு இருந்தது. ஆனால், பிரபு அவரது மனைவி கௌதமியுடன் உள்ளே வந்தார். கீழே உட்கார்ந்திருந்த பிரபுவை, குடும்பப் படம் எடுக்கும்போது சைகைசெய்து மேடைக்கு அழைத்த ஸ்டாலின், அவருக்கு அருகிலேயே நிற்கவைத்தார். குடும்ப உறுப்பினர்கள் யாரும் பெரிதாக பிரபுவிடம் பேசிக்கொள்ளவில்லை. ஸ்டாலின் கிளம்பும்போது, பிரபுவும் கிளம்பிவிட்டார்.''

''ஸ்டாலின் உடனே கிளம்பிவிட்டாரா?''

''திருமண விழா முடியும் வரையில்கூட பொறுக்கவில்லை மு.க.ஸ்டாலின். தன்னுடைய வாழ்த்துரையை வழங்கிவிட்டு மேடையில் இருந்து காணாமல்போய்விட்டார். துர்கா ஸ்டாலின் மட்டும் கடைசி வரை இருந்தார். தன்னுடைய இறுதி நாட்களில் வீரபாண்டி ஆறுமுகம், கருணாநிதியைத் தாண்டி மு.க.அழகிரியின் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். அழகிரியும் வீரபாண்டியாரைத் தன்னுடைய நம்பிக்கைக்குரியவராகவே பார்த்தார். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, அழகிரி இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள வரவில்லை. அவர் குடும்பத்தின் சார்பிலும் யாரும் வரவில்லை. கனிமொழியும் ராஜாத்தி அம்மாளும் விழா முடியும் வரை இருந்தனர்.''

''கருணாநிதி ஏதாவது பஞ்ச் வைத்திருப்பாரே?''

''ம்! 'உங்கள் அப்பாவைப்போல், நீயும் மற்றவர்​களை போடா... வாடா என்று அதிகாரம் செய்ய வேண்டாம். இதுவரை அப்படி நடந்திருந்தால், இன்றோடு அந்தப் பழக்கத்தை விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று சொன்ன கருணாநிதி, 'குடும்பத்தின் பெருமையைக் குலைப்பதற்கு இன்று சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் சிலர் முயற்சி செய்துவருகிறார்கள். அதற்கு நீங்கள்  பலியாகிவிடக் கூடாது’ என்று கூறினார். அது பலரின் புருவங்களை உயர்த்தவைத்தது.''

''கோபாலபுர வருத்தத்தை வீரபாண்டி வீட்டு விசேஷத்தில் கொட்டிவிட்டாரோ?''

''மு.க.அழகிரி நிரந்தரமாக சென்னைக்கு வந்துவிடத் திட்டமிட்டிருப்பதாக உமக்குச் சொல்லியிருந்தேன். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, கட்சியிலும் சரி மதுரையிலும் சரி, அழகிரியின் சொல்லும் செயலும் எடுபடவில்லை. அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில், பொட்டு சுரேஷ் கொலைசெய்யப்பட்டதும், கொலையாளிகள் தைரியமாக வெளியில் திரிவதும் அழகிரிக்கு மிகுந்த துயரத்தையும் அதே அளவுக்கு அவமானத்தையும் ஏற்படுத்துவது போலாகிவிட்டது. மதுரை மாநகர முன்னாள் துணை மேயர் மன்னனைத் தவிர இப்போது அழகிரியுடன் யாரும் இல்லை. இவை எல்லாம் நீண்ட நாட்களாக அழகிரியை மிகுந்த மனத்துயரத்தில் ஆழ்த்திஇருந்தது. அதனால், சென்னைக்கு இடம்பெயர வேண்டும் என்று அவர் முடிவுசெய்து பல நாட்கள் ஆகிவிட்டன. இப்போது, சென்னை தேனாம்பேட்டையில் வீடு பார்க்கும் வேலை நடக்கிறது.''

''தேனாம்பேட்டை என்றால்?''

''அறிவாலயம் அருகில்தான்!'' என்று சிரித்த கழுகார், அடுத்து ராஜ்ய சபா செய்திக்குத் தாவி​னார்.

மிஸ்டர் கழுகு: மகளா? மச்சானா?

''ராஜ்ய சபாவில் தமிழகத்தின் சார்பில் 18 எம்.பி-கள் இருக்கிறார்கள். இதில் மூன்றில் ஒரு பங்கினருக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஜூலை 24-ம் தேதியோடு தி.மு.க-வைச் சேர்ந்த கனிமொழி, திருச்சி சிவா, அ.தி.மு.க-வைச் சேர்ந்த மைத்ரேயன், இளவரசன், காங்கிரஸைச் சேர்ந்த ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் முடிவடைகிறது. புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்ற உறுப்​பினர்கள் ஓட்டுப் போட்டுதான் ராஜ்ய சபா எம்.பி-கள் தேர்வுசெய்யப்படுவார்கள். பல ஆண்டுகளாக இந்த ராஜ்ய சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறாமல் போட்டியின்றிதான் எம்.பி-கள் தேர்வாகிவருகிறார்கள். இப்போது தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே அரசியல் விறுவிறுப்புகள் தொடங்கிவிட்டன. ராஜ்ய சபா எம்.பி. பதவியைக் கைப்பற்ற தி.மு.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன''

''யாருக்குக் கிடைக்கும்?''

''ஒரு எம்.பி-யைத் தேர்வுசெய்வதற்கு குறைந்த​பட்சம் 34 எம்.எல்.ஏ-க்களின் ஓட்டுகள் தேவை. தி.மு.க-வுக்கு சட்டமன்றத்தில் இருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 மட்டுமே. அதாவது, ஒரு எம்.பி-யை தேர்வுசெய்யக்கூட தி.மு.க-வால் முடியாது. மற்ற கட்சிகளின் தயவால்தான் எம்.பி. கனியைப் பறிக்க முடியும். அதனால், தே.மு.தி.க-வோடு கூட்டணி போட தி.மு.க. நினைக்கிறது. தே.மு.தி.க-வுக்கு 29 எம்.எல்.ஏ-க்கள் தொடக்கத்தில் இருந்தனர். ஆனால் சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், தமிழழகன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார் ஆகிய ஐவரும் தொகுதி பிரச்னைக்காக(!) ஜெயலலிதாவைச் சந்தித்தவர்கள். அவர்களின் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்குத்தான் விழும். அதன்படி பார்த்தால் விஜயகாந்திடம் 24 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். தி.மு.க., தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களின் மொத்த ஓட்டுகள் 47. இதை வைத்து ஒரு எம்.பி-யைத்தான் தேர்வு​செய்ய முடியும். அந்த வகையில் எப்படியாவது கனிமொழிக்கு மீண்டும் எம்.பி. பதவியைப் பெற்றுவிடத் துடிக்கிறது தி.மு.க. அதே சமயம் விஜயகாந்த், தனது மச்சான் சுதீஷ§க்கு ராஜ்ய சபா ஸீட் வாங்கிவிடத் துடிக்கிறார். 'நீங்கள் கனிமொழிக்கு ஆதரவு தாருங்கள்’ என்று கருணாநிதி தரப்பும், 'நீங்கள் சுதீஷ§க்கு ஆதரவு தாருங்கள்’ என்று விஜயகாந்த் தரப்பும் தூதுவிடுகின்றன.''

மிஸ்டர் கழுகு: மகளா? மச்சானா?

''மகளுக்கு அவரும், மச்சானுக்கு இவரும் கேட்கிறார்களோ?''

''இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. தே.மு.தி.க-வில் இருந்து ஆறு எம்.எல்.ஏ-க்களை ஆறு மாதங்களுக்குப் சஸ்பெண்ட்  செய்துள்ளார் சபாநாயகர். எனவே அந்த ஆறு பேரும் வாக்களிக்க முடியாது. இதன் அடிப்படையில் பார்த்தால், விஜயகாந்த் கட்சியில் 18 பேர்தான் வாக்க​ளிக்க முடியும். '2006 சட்டபைத் தேர்தல் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் சுதீஷ் நிறுத்தப்பட்டார். ஆனால், அவரால் வெற்றிபெற முடியவில்லை. 2009-ல் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சுதீஷ் தோற்றார். அதனால், எப்படியாவது அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்திட வேண்டும் எனத் துடிக்கிறார் விஜயகாந்த்’ என்கிறார்கள். கனிமொழி, அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடலாம் என்று நினைக்கிறாராம். ஆனால் கருணாநிதிதான், அவரை ராஜ்ய சபாவுக்கே மீண்டும் அனுப்பிவைக்க விரும்பு​கிறாராம்.''

''ஓஹோ!''

''இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் எப்படியாவது நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என நினைக்கிறார். அதற்காகதான் அ.தி.மு.க. ஆதரவு அறிக்கைகளை அள்ளிவிடுகிறார். சட்டசபையிலும் அவருடைய கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஜெயலலிதாவை ஏகத்துக்கும் புகழ்கிறார்கள். தா.பாண்டியன் பிறந்த நாளுக்கு அவருடைய வீட்டுக்கே சென்று ஜெயலலிதா வாழ்த்து சொன்னார். கடந்த 2009 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தா.பாண்டியன் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்துப்போவதைவிட சுலபமாகப் போகக்கூடிய ராஜ்ய சபா வழியைத் தேர்வுசெய்திருக்கிறார் தா.பாண்டியன். ஆனால், இப்போது பதவியை இழக்க இருப்பவர்களில் ஒருவர் அவரது கட்சியைச் சேர்ந்த டி.ராஜா!''

''சிக்கல்தான்!''

''ராஜாவுக்கு முடியும் பதவியை பாண்டியனுக்குக் கொடுத்தால் காம்ரேட்களுக்குள் கசப்பு வரத்தான் செய்யும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, அதன் பார்லிமென்ட் குழு யாரை முடிவு செய்கிறதோ அவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் டி.ராஜா பெயரைப் பரிந்துரை​செய்ய இருப்பதாகச் சொல்கிறார்கள். 'நாங்கள் டி.ராஜாவை நிறுத்தினால், நீங்கள் ஆதரிக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்திடம் பரதன் பேசியதாகவும், அவர், 'எங்கள் மாநில கமிட்டியைக் கேட்டுச் சொல்கிறேன்’ என்று சொன்னதாகவும், 'டி.ராஜா போட்டியிட்டால் ஆதரிக்கலாம்’ என்று மாநில கமிட்டி ஓ.கே. சொன்னதாகவும் கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு எட்டு எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். 'டி.ராஜாவுக்கு 18 பேர் ஆதரவு இருப்பதால், மீதி வாக்குகளை நீங்கள் தாருங்கள்’ என்று ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக 20-ம் தேதி பரதன் வர இருப்பதாகவும் சொல்கிறார்கள். அப்போது, 'தா.பாண்டியன் போட்டியிட்டால் ஆதரிக்கிறேன்’ என்று ஜெயலலிதா சொல்வாரா எனத் தெரியவில்லை. 'அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை’ என்றே அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் சொல்கிறார்கள். 'தேசிய அளவிலான தலைவர் என்பதால், டி.ராஜாவை ஜெய​லலிதா புறக்கணிக்க மாட்டார்’ என்றும் சொல்லப்​படுகிறது.''

''அ.தி.மு.க-வுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?''

''அ.தி.மு.க-வுக்கு சபாநாயகரையும் சேர்த்து 151 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அதோடு தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ஐந்து பேரையும் சேர்த்தால் 156 எம்.எல்.ஏ-க்கள். இதோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் எட்டு பேரையும் சேர்த்தால், 164 பேர். இந்த எண்ணிக்கையை வைத்து ஆறு உறுப்பினர்களில் நான்கு ராஜ்ய சபா எம்.பி-க்களை அ.தி.மு.க. பிடிப்பது உறுதி. ஆனால், அ.தி.மு.க-வின் கணக்கோ ஐந்து எம்.பி-க்களை அள்ள வேண்டும் என்பதுதான். எதிர்க் கட்சிகளுக்கு இரண்டு எம்.பி-க்கள் கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறாராம் ஜெயலலிதா. அப்படி ஐந்து எம்.பி-க்கள் கிடைப்பது உறுதியாகும் என்பதால்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு ஸீட் கொடுக்க ஜெயலலிதா முடிவு செய்திருக்கிறார்.''

''அ.தி.மு.க-வில் யாருக்கு வாய்ப்பு?''

''மைத்ரேயனுக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைக்​கலாம். மற்றபடி ஜெயலலிதா யார் பெயரையும் இறுதிப்படுத்தவில்லையாம்.''

''காங்கிரஸிடம் ஐந்து, பா.ம.க. மூன்று, சரத்குமார் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகத்திடம் தலா இரண்டு என இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் யாரை ஆதரிக்க போகிறார்கள் எனத் தெரியவில்லை. எதிர்க் கட்சி அந்தஸ்தில் உள்ள தே.மு.தி.க. மரபுப்படி சட்டசபையில் மானியக் கோரிக்கை விவா​தத்தைத் துவக்கிவைக்க வேண்டும். ஆனால், இந்த வரிசை மாற்றப்பட்டபோது தே.மு.தி.க-வுக்கு ஆதரவாக காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சட்ட​சபையில் வலியுறுத்தினர். இதனால், இவர்களின் ஓட்டுகள் தே.மு.தி.க-வுக்கு விழக்கூடிய வாய்ப்பு உண்டு'' என்ற கழுகார்,

''சட்டசபையில் இப்போதெல்லாம் முதல்வர் ஜெயலலிதா உட்கார்ந்துதான் பேசுகிறார். அதிக நேரம் பேசுவதால் நிற்க முடிய​வில்லை என்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.  

படம்: ரமேஷ் கந்தசாமி

 நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல்?

இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம். நவம்பர் இறுதியில் தேர்தல் நடந்துவிடலாம் என்றுதான் இப்போது டெல்லி அரசியல் வட்டாரம் சொல்கிறது. காரணம்,

மத்தியப் பிரதேசம், மிசோராம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர்... ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களை நடத்த தேர்தல் கமிஷன் தயாராகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 12-ல் ஆரம்பித்து 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்துக்குள் இந்த ஐந்து மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் முடிகிறது. இவற்றில் மூன்று மாநிலங்களை காங்கிரஸ் இப்போது ஆள்கிறது. இரண்டில் பி.ஜே.பி. ஆள்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதன்படி, அந்த மூன்று மாநிலங்களில் பி.ஜே.பி. தலைமையில் ஆட்சி அமைய வாய்ப்புகள் அதிகம். அதேபோல், பி.ஜே.பி. ஆளும் இரண்டு மாநிலங்களில் இப்போதுள்ள ஆட்சியாளர்களின் பேரில் பொதுமக்களுக்கு நல்ல பெயர் இருப்பதால், அவர்களே மீண்டும் ஜெயித்து வரக்கூடும். அதாவது, தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் பி.ஜே.பி. ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். இந்தக் கணிப்பு நடந்தால், அடுத்த ஆண்டு மே மாதம் முறைப்படி நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மக்களிடம் இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு எதிரொலிக்கலாம். இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டியுள்ளது... ஐந்து மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 73. இந்த எண்ணிக்கையை தனக்கே சாதகமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றே காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. ஆகவே, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களுடன் நாடாளுமன்றத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்திவிடத் திட்டம் போட்டு காங்கிரஸ் செயல்படுகிறது என்று டெல்லியில் பேச்சு.

மிஸ்டர் கழுகு: மகளா? மச்சானா?

 ''டாஸ்மாக் முன் முதல்வர் படம் வைக்க வேண்டும்!''

நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது தே.மு.தி.க. திருப்பூரின் மத்தியப் பகுதியான நொய்யல் ஆற்றங்கரைப் பகுதியில் இருந்து பேரணி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதற்கான அனுமதி கொடுத்திருந்த காவல் துறை பிறகு என்ன நினைத்ததோ... போக்குவரத்து நெருக்கடியைக் காரணம் காட்டி, நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்பு அனுமதியை ரத்துசெய்தது. திட்டமிட்டபடி பொதுக் கூட்டம் மட்டும் நடந்தது.

கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ-க்களும், கட்சி நிர்வாகிகளும் அ.தி.மு.க-வையும் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்தனர். தி.மு.க-வையும் விமர்சிக்கத் தயங்கவில்லை. பிரேமலதாவின் பேச்சில் ஏகத்துக்கும் அனல். ''தமிழகத்தில் பான் மசாலா, குட்காவுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது, அதேபோல் டாஸ்மாக் கடைகளை மூடாதது ஏன்? தமிழக அரசு சார்பில் அனைத்துத் துறைத் திட்டங்களுக்கும் முதல்வர் படம் வைப்பதுபோல, டாஸ்மாக் மதுக்கடை முன்பும் முதல்வரின் படத்தை வைக்க வேண்டும். போட்டோ வைக்கவில்லை என்றால், தே.மு.தி.க. போராட்டம் நடத்தும்'' என்று பேசினார்.

அடுத்து விஜயகாந்த் பேசத் தொடங்கும் முன்னர், மேடை விளக்குகள் மற்றும் முன்வரிசை ஒளி விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டன. மேடையில் இருந்தவர்கள், முன் வரிசையில் இருந்தவர்கள் எல்லாம் மெழுகுவத்தி, சிம்னி விளக்குகளை ஏந்தி நிற்க, விஜயகாந்த் புரட்சி தீபத்தை ஏந்தி நின்றார். மின்வெட்டை உணர்த்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism