Published:Updated:

மக்கள் வெள்ளத்தில் தவிப்பு: தொகுதி எம்.எல்.ஏ க்கள் ஜாலி சுற்றுலா!

Vikatan Correspondent
மக்கள் வெள்ளத்தில் தவிப்பு: தொகுதி எம்.எல்.ஏ க்கள் ஜாலி சுற்றுலா!
மக்கள் வெள்ளத்தில் தவிப்பு: தொகுதி எம்.எல்.ஏ க்கள் ஜாலி சுற்றுலா!

பெங்களூரு: கர்நாடகத்தின் பல இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் ஜாலி சுற்றுலா சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வட கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரங்களையும், விவசாய பயிர்களையும் இழந்து தவித்து வருகின்றனர், இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யூரோப்பிற்கு ஜாலியாக சுற்றுலா சென்றிருக்கிறார்கள். இதைப்பற்றி முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டதற்கு, "அவர்கள் சென்றதே எனக்குத் தெரியாது, என்னிடம் அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை, தற்போது அவர்கள் திரும்பி வந்துள்ளனர், அவர்களிடமே கேளுங்கள்" என்று பதிலளிக்கிறார்.

மக்கள் வெள்ளத்தில் தவிப்பு: தொகுதி எம்.எல்.ஏ க்கள் ஜாலி சுற்றுலா!

இதைப்பற்றி அந்த எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டால் "இது எங்கள் சொந்த செலவில் செய்த பயணம், இதில் என்ன தவறு" என்று கேட்கிறார்கள்.

இது முதல்முறை நடப்பதில்லை, கடந்த ஐந்து ஆண்டுகளாக கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் சிறுபான்மையினர் மற்றும் தொகுதி முன்னேற்றத்திற்காக ஸ்டடி டூர் என்ற பெயரில் பல வெளிநாடுகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் சுற்றுலா சென்றுள்ளனர். அதில் கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஃபிஜி தீவுகளுக்கு சென்று திரும்பியுள்ளனர் ஒரு எம்.எல்.ஏக்கள் குழு. அங்கு அவர்கள் அடித்த கூத்தை, தனியார் செய்திச் சேனல் ஒன்று படம்பிடித்து அம்பலப்படுத்தியது.

மக்கள் வெள்ளத்தில் தவிப்பு: தொகுதி எம்.எல்.ஏ க்கள் ஜாலி சுற்றுலா!

இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையால், சுற்றுப்பயணத்தின் ஆய்வறிக்கைகளை சமர்பிக்கச் சொன்னார்கள். அதாவது சிறுபான்மையினர் மற்றும் தொகுதி முன்னேற்றத்திற்கான புதிய வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க கூறினார்கள். ஆனால் அவர்கள் சமர்பித்த அறிக்கைகளிலோ "செர்ரிப்பழ ஜுஸ் எப்படி செய்வது என்பதை பார்த்தோம், அனைவரும் ஹலிகாப்டரில் பயணம் செய்து 3900 அடி உயர பனிமலையில் இறங்கினோம். அந்த அனுபவம் சூப்பர், ரயிலில் பயணம் செய்த போது, அங்கு உள்ள ஆடு மாடுகள் எல்லாம் திறந்தவெளியில் மேய்வதைக்கண்டோம், நீர்த்தேக்கங்களில் குளித்து மகிழ்ந்தோம்" எனக் கூறியிருந்தனர். தொகுதி மக்களின் மேல் எந்த அளவு மரியாதை, அக்கறை, பற்று, பக்தி வைத்திருந்தால் இதுபோல் எழுதத்தோன்றும்?

இன்னும் சில ஸ்மார்ட் எம்.எல்.ஏக்கள் இணைய தளத்திலிருந்து பதிவிரக்கம் செய்து, காப்பி பேஸ்ட் செய்து கொடுத்துள்ளனர். கர்நாடக சட்டமன்ற சபாநாயகரே, இந்த அறிக்கைகளில் மக்கள் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகள் ஒன்றும் இடம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். இதைப் பற்றி முதல்வரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதும், எந்த ஒரு உருப்படியான பதிலும் இல்லை.

மக்கள் வெள்ளத்தில் தவிப்பு: தொகுதி எம்.எல்.ஏ க்கள் ஜாலி சுற்றுலா!

எழுப்பப்பட்ட சர்ச்சைகளால் விளைந்த ஒரே நன்மை, ஐந்து ஆண்டுகளாய் ஸ்டடி டூர் என்ற பெயரில் மக்கள் வரி பணம் வீணாவது ஒரு முடிவுக்கு வந்தது. இருப்பினும், மக்களில் பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து வாடும் நேரத்தில் இவர்களது ஜாலி சுற்றுலா மட்டும் நின்றபாடில்லை.

நம் குறைகளையும், தேவைகளையும் அரசாங்கத்திடம் முறையிட்டு தீர்வுகாணத்தான் நம்மில் ஒருவரை ஓட்டுப் போட்டு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் அவர்களோ, நம் இன்னல்களின் போது, ஜாலியாக சுற்றுப்பயணம் செல்வதும், அவர்களை வழி நடத்தவேண்டிய முதல்வர் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதையும் பார்த்தால், நம் தலைவிதியை என்ன வென்று நொந்து கொள்வது.

-ஆர்.ராகேஷ்குமார்

(மாணவப் பத்திரிகையாளர்)