Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

லகக் கோப்பையைக் கையில் வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை மண்ணில் போட்டுத் தேய்த்துவிட்டது, ஐ.பி.எல். போட்டிகளின் 'ஸ்பாட் ஃபிக்ஸிங்' சூதாட்டம். இந்த நம்பிக்கைத் துரோகத்தால், நட்டநடு அரங்கத்தில் நிர்வாணக் கோலத்தில் கூசி நிற்கிறது இந்தியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிக்கியவை மட்டும்தான் கறுப்பு ஆடுகளா... அல்லது, அதிலும்கூட காசு விளையாடி மற்றும் பல அசிங்கங்கள் வெளியில் வராமல் அமுக்கப்படுகின்றனவா என்பது தெரியாது. 'யாரோ விளையாடினான்... எவனோ பந்தயம் கட்டினான்... இதில் நமக்கென்ன போச்சு' என்ற மனோபாவத்தையே பெரும்பாலான மக்கள் மத்தியில் காண முடிகிறது. அரங்கத்திலும், தொலைக்காட்சியிலும் ஆட்டத்துக்கு நடுவே செலவிடப்படும் விளம்பரங்களுக்கான தொகையை, அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பொருட்களின் விலையோடு சேர்த்தே நம்மிடம் வசூலிக்கிறார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் எண்ணிப்பார்க்கிறோம்?

ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேசத்தின் மானம் காக்கும் வகையில் வீரர்களைத் தயார்படுத்தத் தவறும் நாம், கிரிக்கெட்டுக்கு மட்டும் பணம், நேரம், ஆற்றல், கவனம் அத்தனையும் கொட்டிக் குவிப்பதால்தான், அங்கு கோடிகள் சரளமாகப் புழங்க முடிகிறது.

இத்தனைக்குப் பிறகும், 'இதுபோன்ற சூதாட்டங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இல்லை' என்று அதன் தலைவர் சர்வசாதாரணமாகக் கூறும்போது, நமக்கு எல்லாம் ரத்தம் கொதிக்க வேண்டாமா? லாபத்தை மட்டும் அள்ளிக்கொண்டு பொறுப்பைத் தட்டிக்கழிக்க நினைப்பவர்களுக்கு, அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் மட்டும் அளவின்றி வழங்கிவிட்டு, இந்திய அரசு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது என்ன நியாயம்?

பந்தையே பகடையாக்கி சூதாட்டம் நடத்திய 'வீரர்'களிடம் சூடு சொரணையை எதிர்பார்க்க முடியாது. நாடே நேசிக்கும் ஒரு விளையாட்டை இரக்கமின்றி அவர்கள் துகிலுரிவதை, நெட்டை மரங்களாக நின்று இனியும் வேடிக்கை பார்த்தால்... தலைக்குனிவு நமக்குத்தான்!