Published:Updated:

மிஸ்டர் கழுகு: உள்துறையை வீழ்த்தியதா உள்குடும்பம்?

மிஸ்டர் கழுகு: உள்துறையை வீழ்த்தியதா உள்குடும்பம்?

மிஸ்டர் கழுகு: உள்துறையை வீழ்த்தியதா உள்குடும்பம்?

மிஸ்டர் கழுகு: உள்துறையை வீழ்த்தியதா உள்குடும்பம்?

Published:Updated:
மிஸ்டர் கழுகு: உள்துறையை வீழ்த்தியதா உள்குடும்பம்?
##~##

ஐ.ஏ.எஸ். டைரியுடன் என்ட்ரி ஆனார் கழுகார். ''சட்டத் துறைக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் ராசியே கிடையாது. இப்போது, உள்துறை செய​லாளர் பதவியும் ராசி இல்லாத பதவி ஆகிவிட்டது'' என்றபடியே செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். உள்துறை செயலாளர் ராஜகோபால் மாற்றம் பற்றிய செய்திகளே கழுகாரின் முதல் டார்கெட்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டு காலத்தில் உள்துறை செயலாளர் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டிருக்கிறார். உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ். அதிரடியாகத் தூக்கியடிக்கப்பட்டு, அந்த இடத்துக்கு நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டிருக்கிறார். தலைமைச் செயலாளருக்கு அடுத்து மிக பவர்ஃபுல் போஸ்ட் உள்துறை செயலாளர் பதவிதான். 2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தும் உள்துறைச் செயலாளராக ஷீலாராணி சுங்கத் நியமிக்கப்பட்டார். முந்தைய 2001-06 அ.தி.மு.க. ஆட்சியில் உள்துறைச் செயலாளராக இருந்தவர் ஷீலாராணி சுங்கத். 25 நாட்கள்கூட அந்தப் பதவியில் ஷீலாராணி சுங்கத்தால் நீடிக்க முடியவில்லை. அவரை அதிரடியாக மாற்றிவிட்டு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகப் பணியாற்றிவந்த ரமேஷ்ராம் மிஸ்ராவை உள்துறைச் செயலாளர் ஆக்கினார் ஜெயலலிதா. 2011 ஜூன் மாதம் உள்துறைச் செயலாளராகப் பதவியேற்ற ரமேஷ்ராம் மிஸ்ரா, 2012 ஜனவரி மாதம் வரைதான் அந்தப் பதவியில் நீடிக்க முடிந்தது. ரமேஷ்ராம் மிஸ்ராவைக் கழற்றிவிட்டு, வருவாய்த் துறை செயலாளராக இருந்த ராஜகோபாலை உள்துறை செயலாளர் ஆக்கினார் ஜெயலலிதா. இப்போது, ராஜகோபால், மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கழகத் தலைவர் என்ற டம்மி பதவிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.''

மிஸ்டர் கழுகு: உள்துறையை வீழ்த்தியதா உள்குடும்பம்?

''ராஜகோபால் 'நேர்மையான அதிகாரி’ என பெயரெடுத்தவர் ஆச்சே...''

''அம்மாவின் குட்புக்கில் இருந்தவர் ராஜகோபால். முதல்வரின் மூன்றாவது செயலாளராக இருக்கும் வெங்கட்ரமணனும் ராஜகோபாலும்தான் கோட்டையில் கோலோச்சும் இரண்டு அதிகாரிகள் என்று நான் சொல்லி இருந்தேன். 28.11.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில் 'கோட்டையில் மாற்றான்’ என்ற தலைப்பில் நீர் செய்தி வெளியிட்டீர். அந்த அளவுக்குச் செல்வாக்கான அதிகாரியாக இருந்த ராஜகோபால், ரொம்ப சிம்பிள் மனிதர்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி​களுக்கு சென்னை நெற்குன்றத்தில் 445 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் பணி தொடங்கியது. மிகவும் குறைந்த விலைக்கு அதாவது, 31 லட்சத்துக்கு இந்த வீடு​களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வீடுகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக, கடந்த ஆட்சியின் இறுதியில் குலுக்கல் நடந்தபோது எல்லா ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அதில் ராஜகோபால் மட்டும் கலந்துகொள்ளவில்லை. 'இந்த வீடுகள் மிகவும் மலிவான விலைக்கு வழங்கப்படுகிறது என்று அறிகிறேன். இதனால், வீட்டுவசதி வாரியத்துக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். அதனால், எங்களுடைய நாணயத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த விஷயத்தில் உண்மை நிலையை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்று, அரசுக்கு கடிதம் எழுதி அதிர்ச்சி ஏற்படுத்தினார் அப்போது, கைத்தறித் துறையின் செயலாளராக இருந்த ராஜகோபால், இப்படி நேர்மையாகச் செயல்பட்டதைக் கேள்விப்பட்டுதான் உள்துறைக்கு அவரை நியமித்தார் ஜெயலலிதா. அதோடு சில மாதத்திலேயே திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் ஆணையர் பதவியும் அவரைத் தேடி வந்தது. மின் தட்டுப்பாட்டை ஆராய 10 பேர் கொண்ட குழுவை ஜெயலலிதா அமைத்தபோது அந்தக் குழுவிலும் ராஜகோபாலை நியமித்தார். சில மாதங்கள் முன், உள்துறையில்ராஜகோபாலுக்கு கீழே ஸ்பெஷல் செயலாளராக அமுதா நியமிக்கப்பட்டபோதே, ராஜகோபாலுக்கு செக் விழுந்தது. அதன் பிறகு இப்போது இறங்குமுகம்.''

''மாற்றத்துக்கு என்ன காரணம்?''

''பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும், மூன்று செய்திகள்தான் முக்கியமாக அடிபடுகின்றன. முதல் செய்தி... மே 21-ம் தேதிதான் ராஜகோபால் மாற்றப்பட்டார். அதற்கு அடுத்த நாள், பதவிஉயர்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சிலர், முதல்வர் ஜெயலலிதாவைக் கோட்டையில் சந்தித்தனர். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் முடிச்சு போடப்படுகிறது. ராஜகோபால் நேர்மையான அதிகாரி என்பதோடு, மிகவும் கண்டிப்பானவர். இதனாலேயே அவருடைய துறைக்குக் கீழ்வரும் காக்கி உயர் அதிகாரிகளுக்கும் ராஜகோபாலுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவந்ததாம்.

போலீஸ் அதிகாரிகள் தொடர்பான கோப்புகளுக்கு ஏகப்பட்ட விளக்கம் கேட்டு ஃபைல்களை பெண்டிங் வைத்திருந்தாராம் ராஜகோபால். டி.ஜி.பி. பரிந்துரைத்த பதவிஉயர்வுகளையும் மாற்றங்கள் தொடர்பான ஃபைல்களில் திருத்தம் போட்டாராம் ராஜகோபால். இப்படி விளக்கம் கேட்டுக் கேட்டு கோப்புகள் அடிக்கடி திருப்பி அனுப்பப்பட்டதாம். சஞ்சய் அரோரா, சுனில்குமார், சுனில்குமார் சிங் ஆகியோருக்கு கூடுதல் டி.ஜி.பி-யாக பதவிஉயர்வு வழங்குவது தொடர்பான ஃபைலும் டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மித்தல், பாலநாகதேவி, வி.ஏ.ரவிக்குமார், சேஷசாயி, நல்லசிவம், ராமசுப்பிரமணி ஆகியோரின் ஐ.ஜி. பதவிஉயர்வு தொடர்பான கோப்பு போன்றவையும் நீண்ட நாட்களாக ராஜகோபாலிடம் காத்துக்கிடந்ததாம். மற்றவர்களைவிட காக்கிச் சட்டைகள் மீது அதிகப் பாசம் காட்டும் ஜெயலலிதாவிடம் இந்த விஷயத்தைக் கொண்டுபோய்விட்டார்கள் காக்கி அதிகாரிகள். உடனே ஜெயலலிதா ராஜகோபாலை அழைத்து கண்டித்தாராம்.  அடுத்த நாளே அதிரடி மாற்றம். அதன் பிறகு அடுத்த நாளே, கூடுதல் டி.ஜி.பி-யாக பதவிஉயர்வு பெற்றவர்களையும் ஐ.ஜி-யாக பதவிஉயர்வு பெற்றவர்களையும் ஜெயலலிதா சந்தித்திருக்கிறார். பதவிஉயர்வு மேட்டர்தான் ராஜகோபாலின் பதவியைக் காவு வாங்கியதாம்.''      

''இரண்டாவது செய்தி?''

''விழுப்புரத்தில் திருமாவளவன் நுழைவதற்கும் கடலூரில் சீமான் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும் 144 தடை உத்தரவு போடப்பட்டதிலும் ராஜ​கோபாலின் தலை உருட்டப்படுகிறது. முள்ளி​வாய்க்கால் நினைவு நாளான மே 18-ம் தேதி கடலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்​கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அனுமதி கிடைக்காததால், உள் அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டார். காஷ்மீரில் பிரிவினைக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் யாசின் மாலிக்கை கடலூருக்கு சீமான் அழைத்து வந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கே நடந்த கூட்டத்தில் பிரிவினைக் கருத்துகளை ஆதரித்து யாசின் மாலிக் பேசியது புகைச்சலை ஏற்படுத்தியது. 'யாசின் மாலிக் எப்படி கடலூருக்கு வந்தார்? அவரை அழைத்து வருவதற்கு உதவிசெய்தது யார்? பின்புலமாக இருந்த இயக்கங்கள் எது?’ என அறிக்கை​விட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன். 'இந்தியாவைத் துண்டாட நினைக்கும் யாசின் மாலிக்கை தமிழகத்தில் நுழைய அனுமதித்தது அபாயகரமானது’ என்று தமிழக பி.ஜே.பி. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சீறினார். இப்படி எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், யாசின் மாலிக் வரவையும் அவர் காக்கிகளின் கண்களுக்கு சிக்காமல் திரும்பிப்போனதையும் போலீஸ் கோட்டைவிட்டதாக உள்துறை வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. யாசின் மாலிக் வருகை பற்றி டெல்லிக்கும் ஐ.பி-க்கும் தமிழகப் போலீஸ் தகவல் தரவில்லை என, மத்திய அரசின் உள்துறையில் இருந்து தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிவைத்தார்களாம். இதெல்லாம் சேர்ந்துதான் ராஜகோபால் மாற்றப்​பட்டாராம்.''

''ஓஹோ...''

''ஒரு மாநிலத்தில் பெரிய அளவில் நடக்கும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களை முறைப்படி மத்திய அரசுக்கு அந்தந்த மாநில அரசுகளின் உள்துறை அறிக்கை அனுப்பிவைக்க வேண்டும். மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து தமிழ​கத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், பா.ம.க. புள்ளிகள் கைது, பேருந்துகளுக்கு தீ வைப்பு... என அடுத்தடுத்து நடந்த விஷயங்​களை மத்திய அரசுக்கு தமிழக உள்துறை அனுப்பிவைக்கவில்லையாம். அந்தத் துறையின் பொறுப்பாளர் என்ற முறையில் ராஜகோபால் இதைச் செய்யவில்லையாம். மத்திய அரசு கேள்வி கேட்கும் நிலைக்கு மாநில அரசைத் தள்ளிவிட்டது அவருடைய மாற்றத்துக்குக் காரணம் என்கிறார்கள்.''

''மூன்றாவது செய்தி என்ன?''

''சசிகலா மீண்டும் மையத்துக்கு வந்து​விட்டார் அல்லவா? முந்தைய காலங்களில் அவரது குடும்பத்தினர் பற்றி தகவல் திரட்டியதைப்​போலவே இப்போதும் செய்திகள் திரட்டப்பட்டன. அவை மேலிடத்துக்கும் மறைக்காமல் சொல்லப்பட்டதாம். இதைப் பலரும் விரும்ப​வில்லை. தோட்டத்தில் இப்போது புதிய இளைஞர் ஒருவர் வலம் வருகிறார். அவரைப் பற்றிய தகவல்களையும் திரட்டிக் கொடுத்தாராம். 'தேவை இல்லாத விஷயங்களை இவர் ஏன் விசாரிக்கிறார்?’ என்று பலரும் புருவம் உயர்த்தினர். இந்த நேரத்தை ராஜகோபாலின் எதிரிகள் பயன்படுத்திக்கொண்டனர் என்கிறார்கள். மொத்தத்தில் ராஜகோபாலின் அதிகாரம் முடிவுக்கு வந்துவிட்டது'' என்றபடி அடுத்த மேட்டருக்கு வந்தார் கழுகார்.

''தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான அறக்​கட்டளைகளில் ஒன்று, பச்சையப்பன் டிரஸ்ட். ஆறு கல்லூரிகள், ஏழு பள்ளிகள் என இதன் சொத்து மதிப்பு கணக்கிட முடியாதது. 30 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கின்படி 3,000 கோடி ரூபாயாம். இந்த டிரஸ்ட் உறுப்பினர்களாக பல ஆண்டுகளாக தி.மு.க-வினர் மட்டுமே இருந்துவருவார்கள். தேர்தல்களில் அவர்களே போட்டியிடுவார்கள். வேறு யாரும் உள்ளே புகுந்து வெற்றிபெற முடியாது. இந்த டிரஸ்ட் உறுப்பினர்களில் நான்கு பதவிகளுக்கான தேர்தல் வரும் 26-ம் தேதி நடக்கப்போகிறது. எப்படியாவது அ.தி.மு.க-வினரைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனத்தில் ஆளும் கட்சி இறங்கிவிட்டது. உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன் கடந்த சில நாட்களாக இதே வேலையாக இருக்கிறார். ஆனால்...''

''என்ன ஆனால்?''

''உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்தத் தேர்தல் நடக்கிறது. முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷனை இதன் அதிகாரியாக கோர்ட் நியமித்துள்ளது. அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் சேஷனுக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன? 'நம்ம ஆட்சிதானே... எப்ப நாமினேஷன் தாக்கல் செய்தால் என்ன?’ என்று அசால்ட்டாக வந்தவர்களை கேட்டுக்கு வெளியே நிறுத்தி மனுவை வாங்காமல் துரத்திவிட்டார் சேஷன். ஆளும் கட்சிப் பிரமுகர் பேசி, அந்த மனுவை வாங்கிக்கோங்க என்று அன்பாகச் சொல்ல... தடாலடியாக மறுத்துவிட்டாராம் சேஷன். போலீஸையும் கொண்டுவந்து குவித்துக்கொண்டார். எனவே, தேர்தலில் கோல்மால் செய்ய முடியுமா என்று இந்தத் தரப்பு அச்சத்தில் உள்ளது. எட்டு அமைச்சர்கள் ஒரு இடத்தில் கூடி, பச்சையப்பன் டிரஸ்ட்டில் எப்படியாவது ஜெயித்தாக வேண்டும் என்று சபதம் போட்டுள்ளார்களாம்.''

''என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!''

''தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது தொடர்பாக சில வாதப்பிரதிவாதங்கள் தொடங்கி​யிருக்​கின்றன. 'வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி கிடையாது. இது 101 சதவிகிதம் உண்மை’ என்று அன்புமணி சொல்லியிருக்கிறார். பா.ம.க. ஆர்வமாக இருக்கிறதா என்பதைவிட தி.மு.க. ஆர்வமாக இருக்கிறது என்பதைத்தான் நான் சொல்லிவந்தேன். கருணாநிதியின் ஆர்வத்துக்கு ஆதாரமாக ஒரு சம்பவம்... இதய அறுவைசிகிச்சை செய்துகொண்ட ராமதாஸ் விரைவில் நலம் அடைய கருணாநிதி எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு தி.மு.க. எம்.பி-யான டி.கே.எஸ்.இளங்கோவன் சென்று அன்புமணியைச் சந்தித்துக் கொடுத்து​வந்துள்ளார். 'எல்லாக் கதவுகளையும் திறந்துவைப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை’ என்று கருணாநிதி நினைக்கிறார். 'பா.ம.க. இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது’ என்று திருமாவளவன் சொல்ல ஆரம்பித்திருப்பதும் இதனால்தான்!''

''அப்படியா?''

''ராஜ்ய சபா தேர்தலுக்கு ஆளும் கட்சி தயாராகிறது. மைத்ரேயனுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது. ஆவடி குமார், அன்வர் ராஜா, தமிழ்மகன் உசேன், தஞ்சை தங்கமுத்து  பெயர்களும் பட்டியலில் உண்டு'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

முன்னாள் அமைச்சர் வளைப்பு?

ஐ.பி.எல். மேட்ச் ஃபிக்சிங் சம்பந்தமாக விசாரணை நடத்திவரும் போலீஸாரிடம் கொழும்பு செல்போன் நம்பர் ஒன்று சிக்கியுள்ளதாம். அந்த எண்ணில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு அடிக்கடி அழைப்புகள் சென்றுள்ளனவாம். இரு எண்களுக்கும் இடையே அதிகமாக தொடர்பு இருந்துள்ளது. கொழும்பு பிரமுகர் சிக்கினால் அந்த முன்னாள் பிரமுகரும் வளைக்கப்படுவார் என்கிறார்கள்.

 'எல்லாரையும் பேசச் சொல்லுங்க!’

மு.க.ஸ்டாலின் வீட்டு உதவியாளர் சதீஷ் திருமணம் விழுப்புரத்தில் நடந்தது. ஸ்டாலின் - துர்கா ஆகியோர் குடும்பத்தோடு வந்து திருமணத்தை நடத்திவைத்தனர். அந்த மாவட்டத்தில் இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தனர். மைக் பிடித்த பொன்முடி, 'வேலு பேசுவார், அடுத்து நான் பேசுவேன், அதன் பிறகு தளபதி வாழ்த்துவார்’ என்று மற்றவர்கள் அனைவருக்கும் கட்டையைப் போட்டாராம். உடனே முகம் மாறிய ஸ்டாலின், 'சீனியர்ஸ் எல்லாரையும் பேசச் சொல்லுங்க’ என்று வேலுவை அழைத்துச் சொன்னாராம். அதன்பிறகு, அனைவருக்கும் மரியாதை நிமித்தமாக மைக் தரப்பட்டுள்ளது. ஸ்டாலின் இப்படி உத்தரவு போட்டதில் பலருக்கும் மகிழ்ச்சி.

 'கடையை மூட முடியாது... ஆனா, நீங்க பிரசாரம் பண்ணுங்க!’

மிஸ்டர் கழுகு: உள்துறையை வீழ்த்தியதா உள்குடும்பம்?

மதுக் கடைகளை மூட வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் இளைஞர்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள். 15 லட்சம் பேர் கையெழுத்துப் போட்ட மனுவை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் கொண்டுபோய் கொடுத்துள்ளனர். உட்காரவைத்து மரியாதை கொடுத்த அமைச்சர் சொன்ன வார்த்தைகள், காந்திய மக்கள் இயக்கத்தினரைக் கலங்கவைத்து விட்டதாம்.

'நல்ல விஷயம்தான். கடை வாசலில் நின்று குடிக்க வர்றவங்களைத் தடுங்க... அரசாங்கமே இந்த விழிப்பு உணர்வுக்காக நான்கு கோடி ரூபாய் ஒதுக்கலாம்னு இருக்கு. ஆனா, எங்களால கடையை மூட முடியாது’ என்றாராம் அமைச்சர். 'மதுக் கடைகளை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று நாங்கள் ஆலோசனை சொல்லி இருக்கோமே’ என்று இவர்கள் சொல்லியிருக்கின்றனர். 'வருவாய் ஈட்டுவதற்கு பல ஆலோசனைகள் இருக்கு. பிரச்னை அது இல்லை. மதுக் கடைகளைப் பூட்டுறது சாத்தியமே இல்லை’ என்று அமைச்சர் திரும்பவும் சொல்ல... விரக்தியுடன் வெளியேறியிருக்கின்றனர் காந்திய மக்கள் இயக்கத்தினர்.