Published:Updated:

லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் சண்டை சேவல்!

லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் சண்டை சேவல்!
லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் சண்டை சேவல்!

'அதிகாலையில் சேவலை எழுப்பி அதை கூவென்று சொல்லுகிறேன்...', 'கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே...' இப்படியாக நம் வாழ்வோடு தொன்று தொட்டு இணைந்திருக்கிறது சேவற்கோழிகள்.

வீட்டுக்கு ஒன்று, இரண்டாக இருந்த காலம் போய் இன்று 100 கணக்கில் அவைகளை ஒரு தொழிலாகவே வளர்த்து வருகின்றனர் பலர். பண்டிகை நாட்கள் சிலவற்றை ஒட்டி நடத்தப்படும் வீர விளையாட்டான சேவல் சண்டைக்கு தேவையான சண்டைக்கோழிகளை ஆர்வமுடன் வளர்த்து ஆயிரக்கணக்கில் ஆதாயமும் பார்த்து வருகின்றனர் பலர்.

லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் சண்டை சேவல்!

அதில் ஒருவரான ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த சீனிவாசன், ''ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம், கிடாமுட்டு, சேவல் சண்டைனு  காலங்காலமா வீர விளையாட்டுங்க நடக்குது. பல ஊர்களில இந்த  வீரவிளையாட்டுக்களை நடத்துவது  மிருகவதைனு அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதிச்சு இருக்கு. அதையும் தாண்டி சேவல் சண்டை நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.

நான் கடந்த 20 வருசமா கட்டுசேவல் வளர்த்து வருகிறேன். இப்போது என்னிடம் 200 சேவல்கள் இருக்கு. தமிழ்நாடு தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளானு அண்டை மாநில வியாபாரிகளும் பண்ணைக்கு வந்து சேவலை வாங்கிட்டுப் போறாங்க. பொறிச்ச குஞ்சுயில தரமான சேவல் குஞ்சுயை பிரிப்போம். 18 மாசம் முடிஞ்சதும் ஏற்கனவே, பல தடவை சண்டைபோட்ட சேவலோடு மோதவிட்டு இளஞ்சேவல்களுக்கு பயிற்சி கொடுப்போம். ஒரு வாரம் முடிஞ்சதும் களத்துல இறக்கணும். இதை எங்க பாஷையில. 'நடவு'னு சொல்லுவோம். நடவு சேவல் எதிர்த்து, நிற்கிற சேவலை சண்டை போட்டு ஜெயிச்சா 'அடிச்சிடுச்சு'னு சொல்லுவோம். தோத்துப்போன சேவலை 'கோச்சை'னு சொல்லுவோம்.

தோத்துப்போன சேவல் ஜெயித்த சேவலின் சொந்தக்காரருக்கு கொடுக்கப்படும். இப்படியா பல சேவல்களை அடிக்கிற சேவலுக்கு சந்தையில நல்ல கிராக்கி இருக்கும். ஒரு சேவல் 25 ஆயிரம் ரூபாய் தொடங்கி 1 லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கிற ஆட்களும் உண்டு. ஒன்னரை வருஷத்துல களம் இறங்கிற கட்டுசேவல்கள் காயம் படாமல் இருந்தா 7 வருஷம் வரை சண்டை போட வைக்கலாம். அதே சமயம், எடை கூடாமலும் பார்த்துக்கணும். கட்டு சேவல் எடை மூணரை கிலோவுக்கும் மேல போகக்கூடாது.
 
சண்டை சேவலை வெளியில மேய விடமாட்டோம். அதுங்க எப்பவும் ஆக்ரோஷமாகவே இருக்கும். அதனால அடுத்த சேவல்கிட்ட வம்பிழுக்கும். அதனால நிலத்துல குச்சி அடிச்ச நிழல்ல கட்டி வெச்சிருப்போம். கம்பு, ராகி, சோளம், கோதுமை போன்ற தானியத்தை தீனியா கொடுக்கிறோம்'' என்றவர் கட்டுசேவல் வளர்ப்போர் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றினையும் வைத்தார்.

''பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டுல, சேவல் சண்டையும் ஒண்ணு. கரூர் அடுத்து இருக்கிற கோவிலூரில் சேவல் சண்டை நடத்திட அனுமதியும், விதியும் உள்ள செப்புப்பட்டயம் இருக்கு. அதனால, அரசாங்கம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சேவல் சண்டை நடத்த அனுமதி கொடுக்கவேண்டும். இதனால, சண்டை சேவல்  இனம் அழியாம இருக்கும்'' என்றார்.

அடுத்து நம்மிடம் பேசிய பொன்னாபுரம் சுரேஷ் ''என்னோட பண்ணையில நாட்டு சேவல் 1000 இருக்கு.  சண்டைச் சேவலை சுழி, நிறம், வடிவம் எல்லாம் பார்த்துதான் வாங்குவாங்க. அது திருப்தியா அமையணும். அந்த ‘பட்சி சாஸ்திரம்’ தெரிஞ்சவங்கள கூட்டிபோய்  காட்டித்தான் வாங்குவாங்க. பொன்னிறம், காகம், வல்லூறு, மயில், ஆண்டக்கீரி, பச்சைக்கால் வெள்ளை, பொன்னிறக்கால் வெள்ளை, ஆந்தை வல்லூறு, சுத்தக்கருப்பு, செங்கருப்பு, கருங்கீரினு பலவகை உண்டு'' என்றார்.

-ஜி.பழனிச்சாமி

படங்கள்: க.ரமேஷ்