Published:Updated:

கருணாநிதி, ராமதாஸ், வைகோ பக்ரீத் வாழ்த்து!

கருணாநிதி, ராமதாஸ், வைகோ பக்ரீத் வாழ்த்து!
கருணாநிதி, ராமதாஸ், வைகோ பக்ரீத் வாழ்த்து!

கருணாநிதி, ராமதாஸ், வைகோ பக்ரீத் வாழ்த்து!

சென்னை: பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி, ராமதாஸ், வைகோ பக்ரீத் வாழ்த்து!

கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இஸ்லாமிய மக்களால் தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள் நாளை (6ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. 'ஈத்-உல்-அஸா' என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள் 'கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது' என்பதை உணர்த்தி கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து தவறக்கூடாது எனவும் அறிவுறுத்துகிறது.

ஒரு மனிதன் தன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் போதித்தவர் நபிகள் நாயகம். அதனால்தான் பெரியாரும், அண்ணாவும் 'இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி' எனப் புகழ்ந்தனர்.

ஒவ்வொரு நாளும் வாழ்வில் மக்கள் கடைப்பிடிக்கக்கூடிய எளிய, உயர்ந்த வழிமுறைகள் பலவற்றைக் கற்பித்த நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

கருணாநிதி, ராமதாஸ், வைகோ பக்ரீத் வாழ்த்து!

ராமதாஸ்

இதுகுறித்து ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''தியாகத்  திருநாளாம்  பக்ரீத்  திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும்.  இறை தூதரான இப்ராகிம், இறைவனின் கட்டளையை ஏற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன்வந்த போது, வான் தூதரை அனுப்பி அதை தடுத்த இறைவன், மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிகொடுக்கும்படி கூறினார். இப்ராகிமின் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார். இதை குறிக்கும் வகையிலேயே தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப் படுத்தும்.

இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இந்த நன்னாளில் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்'' எனக் கூறியுள்ளார்.

கருணாநிதி, ராமதாஸ், வைகோ பக்ரீத் வாழ்த்து!

வைகோ

வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''ஈதுல் அல்கா எனப்படும் ஈகைத் திருநாள் பெருநாள் என்று இன்று உலகெங்கும் உவப்புடன் கொண்டாடப்படுகின்றது.

தள்ளாத வயதில், பெற்றப் பிள்ளையைவிட கொண்ட கொள்கையாம் ஈமான் மிக உன்னதமானது எனக்கொண்டு அப்பிள்ளையை பலியிடத் துணிந்த நபி இப்ராகிம் அலையின் ஈகம்-தியாகம் என்றும் போற்றத்தக்கது அன்றோ!

அந்த ஈகத்தை நினைவுகூர்ந்து அரஃபா பெருவழியிலும், முஸ்தலிபாவிலும் இன, நிற, தேச மொழி எல்லைகளைக் கடந்து, ஒன்றே குலம், ஒருவனே தேவன் எனக்கூடி வானமே கூரையாக மண்ணில் அனைவரும் சமம் என புனித இறுதிக் கடமையை நிறைவேற்றுவோர்க்கும், அந்த நினைவில் திளைத்தவண்ணம் அகிலமெங்கும் ஏக இறைவனை வணங்கியும், ஏழைகளுக்கு வழங்கியும், ஏழை மக்களுடன் இணங்கியும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இதய வாழ்த்துக்கள்.

வாழையடி வாழை என உறவு முறையுடன் வாழும் மரபைப் பேணி, சமய நல்லிணத்தையும், சமூக ஒற்றுமையையும் கட்டிக் காக்க சூளுரைப்போம் என இந்நன்னாளில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்'' எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு