Published:Updated:

என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்!

என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்!
என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்!
என்னை சந்திக்க யாரும் வரவேண்டாம்: ஜெயலலிதா வேண்டுகோள்!

பெங்களூரு: என்னை சந்திப்பதற்காக யாரும் பெங்களூரு வரவேண்டாம் என தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, ஜெயலலிதா உள்பட அனைவரது சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் தசரா பண்டிகை நடந்து வருவதால், ஜாமீன் மனு வரும் 7ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக பெங்களூரு சென்ற வண்ணம் உள்ளனர். இதேபோல், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் ஜெயலலிதா சந்திக்க பெங்களூரு சென்றனர். ஆனால், அவர்களை சந்திக்க ஜெயலலிதா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறை அதிகாரிகள் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்து தகவல் அனுப்பி உள்ளார். அதில், ''என்னை சந்திப்பதற்காக தொண்டர்கள் யாரும் பெங்களூரு வரவேண்டாம். தமிழக மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை, சிறைக்கு வெளியே கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கர்நாடக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஜெயலலிதாவை அதே சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே இதுவரை 4 முறை சந்தித்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.