Published:Updated:

''நமக்கு தி.மு.க-வும் வேண்டாம், அ.தி.மு.க-வும் வேண்டாம்!''

மதுரையில் சீறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

''நமக்கு தி.மு.க-வும் வேண்டாம், அ.தி.மு.க-வும் வேண்டாம்!''

மதுரையில் சீறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Published:Updated:
##~##

பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் எதிர்ப்புக் கூட்டத்தை மதுரையில் நடத்தியுள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். 

வழக்கமான வரவேற்புரை முடிந்ததும் பேச ஆரம்பித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சில் காரம் ரொம்பவே அதிகம். 'காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துவிட வேண்டும் என்று இலங்கைப் பிரச்னையைக் கையில் எடுத்தார்கள் இங்கே இருக்கும் சிலர். கேட்டால் நாங்கள் சீமான்கள் என்று சொல்வார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள், சாலைகள், புதிய ரயில் பாதை, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுத்தது காங்கிரஸ்தான். 'தனி ஈழம் வேண்டும்’ என்று இவர்கள்தான் குரல் கொடுக்கிறார்கள். இலங்கையில் எந்தத் தமிழனாவது எங்களுக்குத் தனி ஈழம் வேண்டும் என்று கேட்கிறானா? அப்படி யாராவது கேட்டால், அவர்களில் 20 பேர் பெயரை மட்டும் விலாசத்துடன் கொடுங்கள். ஏற்றுக்கொள்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கூட்டத்தோடு புதிதாக ஒருவரும் சேர்ந்திருக்கிறார். அவருக்கு திடீர் ஞானோதயம் வந்திருக்கிறது. எட்டரை ஆண்டுகளில் டெல்லியில் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, ஜெயிலுக்குப் போகாமல்தப்பித்துவிட்டு, திடீரென்று 'இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் சரியாகச் செயல்படவில்லை. அதனால் நாங்கள் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்’ என்று அறிவிக்கிறார். இதில் சூட்சுமம் என்னவென்றால், 'தந்தைக்கு முதல்வர் பதவி போய்விட்டது. எனக்கு துணை முதல்வர் பதவி போய்விட்டது. அண்ணனுக்கு மட்டும் என்ன டெல்லியில் பதவி? அவரையும் அதை அனுபவிக்கவிடக் கூடாது’ என்ற ஒருவரது எண்ணம் காரணமாக தந்தையை நிர்பந்திக்கிறார். அதனால் விலகிவிட்டார்.

''நமக்கு தி.மு.க-வும் வேண்டாம், அ.தி.மு.க-வும் வேண்டாம்!''

'பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி. எனவே, அவருக்கு நான் ஆதரவு தர முடியாது’ என்று நீங்களே ஒரு முறை சொல்லியிருக்கிறீர்கள். பிறகு ஏன் இந்த நாடகம்? தயவு செய்து... விலகியது விலகியதாகவே இருக்கட்டும். மீண்டும் வந்துவிடாதீர்கள். இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதைப் போல, நமக்கு தி.மு.க-வும் வேண்டாம். அ.தி.மு.க-வும் வேண்டாம். காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி அமைப்போம்.

அமைதிப் படையை ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பியதன் நோக்கமே, தனி ஈழம் அமைக்கத்தான். ஆனால், பிரபாகரன் கேட்டது என்ன? 'தனி ஈழத்திலே ஜனநாயகம் கூடாது, தேர்தல் கூடாது. என்னை சர்வாதிகாரியாக அமர்த்த வேண்டும்’ என்று சொன்னார். இந்தியா அதை மறுத்தது. உடனே, இலங்கை ராணுவத்தோடு சேர்ந்துகொண்டு நம் ராணுவ வீரர்களைக் கொன்றார் பிரபாகரன். ராஜீவ் காந்தியின் திட்டத்தை நாசமாக்கியவர், பாழாக்கியவர் பிரபாகரன்.

பிரபாகரனின் பையன் பாலச்சந்திரனின் போட்டோவைப் போட்டு 12 வயது பாலகனைக் கொன்றார்கள்... கொன்றார்கள்... என்று எல்லாக் கட்சிக்காரர்களும் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அது கவலை தரும் செய்திதான். இதே பிரபாகரன் 11 வயது இளம் சிறுவர்களையும், சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி இழுத்துவந்து போர்க்களத்திலே நிறுத்தினாரே? அதைவிடவா இது கொடியது?

பிரபாகரனைக் கைதுசெய்து அவருக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்தானே இந்த ஜெயலலிதா. இப்போது அதே பிரபாகரன், உங்கள் கண்ணுக்கு மாவீரன்போல் தோன்றுகிறாரா? நீங்கள் குழம்பி இருக்கிறீர்களா? அல்லது மக்களைக் குழப்புகிறீர்களா? காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக, இதை எல்லாம் நீங்கள் செய்வீர்கள். ஆனால், மக்கள் உங்கள் எல்லோரையும் தனிமைப்படுத்திவிடுவார்கள்.

முதல்வரிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்​கிறார்கள். நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்வது இல்லை. ஆனால், பிரதமருக்குக் கடிதம் மட்டுமே எழுதுகிறீர்கள். மேல மாசி வீதியில் குப்பை இருக்கிறது என்றால், அதற்கும்​கூட பிரதமருக்குக்தான் கடிதம் எழுதுகிறார். இதற்காகவா உங்களை ஆட்சியில் அமரவைத்தோம்?

இன்னமும் நான் பேசலாம். இரவு 10 மணி ஆகவில்லை. ஆனால் நாளைக்கே 10 மணிக்குப் பிறகு பேசியதாக, என் மீது வழக்குப் போடுவார்கள். எனவே, என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்'' என்று முடித்தார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள்.

- கே.கே.மகேஷ்

படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism